காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா?

இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது.

அதற்கான முன்னோட்டமாக அண்மையில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் பார்க்கப்பட்டது.

நேற்று முடிவு வெளியானது.

2024-ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமோ இல்லையோ, காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக் கூட வர வாய்ப்பில்லை என தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது.

வரலாறு காணாத தோல்வி

5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்கள் அளித்த ‘சான்றிதழ்‘ என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 தொகுதிகள்.

காங்கிரஸ் வென்ற இடங்கள் : 2

பஞ்சாபில் மொத்தம் 70 தொகுதிகள்.

ஆளும் கட்சியான காங்கிரசுக்கு கிடைத்த தொகுதிகள் : 18

உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 இடங்களில் 19 தொகுதிகளையும், மணிப்பூரில்  மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 5 இடங்களிலும், கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 12 இடங்களிலும் காங்கிரஸ் பிடித்துள்ளது.

பாஜக தன் வசம் இருந்த நான்கு மாநிலங்களையும் மீட்டு விட்டது.

காங்கிரஸ் தன்னிடம் இருந்த பஞ்சாபை, ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்துள்ளது

பஞ்சாபில் தோல்வி ஏன்?

பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் எப்போது சித்து வந்தாரோ அன்று முதல் அந்தக் கட்சியில் குடுமிபிடி சண்டை ஆரம்பித்தது.

முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்குடன் சதா சண்டை.

’’சிக்கலைத் தீர்க்கிறேன்” என களம் இறங்கிய ராகுல்காந்தி, பிரச்சினையை மேலும் பெரிதாக்கினார்.

அமரீந்தர் சிங்கை விலக வைத்தார். சரண்ஜித் சிங்கை முதலமைச்சராக்கினார்.

விளைவு?

அமரீந்தர் சிங், காங்கிரசை உடைத்து புதிய கட்சி தொடங்கினார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

தேர்தலில் அவர் தோற்றார்.

முதலமைச்சர் சரண்ஜித், தான் போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோற்றுப்போனார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான கலகக்காரர் சித்துவும் வீழ்ந்தார்.

காங்கிரசும் ஆட்சியைப் பறிகொடுத்தது.

உ.பி.யில் ரெண்டே ரெண்டு.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிரியங்காவை காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்து, அவரை உ.பி. மாநில பொறுப்பாளராகவும் நியமித்தார் சோனியா.

பிரியங்காவும் அங்கேயே தங்கி இருந்து பல ஆண்டுகள் பணியாற்றினார்.

200 கூட்டங்களில் கலந்து கொண்டார்.

வீடு வீடாகச் சென்று ’கை’க்கு வாக்கு கேட்டார்.

அவரது பிரச்சாரம் கை கொடுக்கவில்லை.

இந்த முறை வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் (2017) உபியில் காங்கிரஸ் கட்சிக்கு 6.3 % சதவீத வாக்குகள் கிடைத்தது.

இந்த தேர்தலில் 2.3 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.

புலம்பும் தலைவர்கள்

டெல்லியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, பஞ்சாபையும் பிடித்து விட்டதால், பாஜகவுக்கு தேசிய அளவில் மாற்று ஆம் ஆத்மி தான் என ஊடகங்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்து விட்டன.

இன்று காங்கிரஸ் கைவசம் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

5 மாநில தேர்தல் தோல்வி, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களை புலம்ப வைத்து விட்டது.

கட்சித் தலைமைக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர்க்குரல் எழுப்பிய குலாம்நபி ஆசாத் கிட்டத்தட்ட அழுது விட்டார் என்றே கூறலாம்.

“இரண்டு, மூன்று மாநிலங்களிலாவது காங்கிரஸ் வெல்லும் என நினைத்தேன். உ.பி.யில் கொஞ்சம் வளர்ச்சியை எதிர்பார்த்தேன். எதுவுமே நடக்கவில்லை’’ என்கிறார் ஆசாத்.

விரைவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட உள்ளது.

கட்சிக்கு புதிய தலைமையைக் கொண்டு வந்தால் மட்டுமே, உயிர் கொடுக்க முடியும் என்ற கோரிக்கையை மூத்தத் தலைவர்கள் முன் வைக்க உள்ளனர்.

– பி.எம்.எம்.

11.03.2022  12 : 30 P.M

You might also like