பெற்றோரின் பிடிவாதத்தால் தோற்கும் குழந்தைகள்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையில் வெற்றியாளர்களாக நமது குழந்தைகள் மிளிர்வதற்கு அவர்களை எந்தெந்த வகையில் தயார்செய்ய வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும், எப்படியெல்லாம் நமது குழந்தையை மாற்ற வேண்டும் என எப்போதும் யோசிக்கும் பெற்றோர்கள், அதற்காகச் சில விஷயங்களில் தங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே இல்லாத குழந்தைகள்கூட வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றார்கள். அதனால், குழந்தைகளின் வெற்றிக்குப் பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

ஆனால், ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களின் மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான அணுகுமுறைகள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதியாகச் சொல்கின்றன.

அந்த வகையில், வாழ்க்கையில் வெற்றிபெற்ற குழந்தைகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் இதன் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளெல்லாம் வெற்றிபெற்ற குழந்தைகளிடம் இருக்கக்கூடிய சில முக்கியமான குணங்களைப் பட்டியலிட்டிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்:

குழந்தைகளை அவர்களின் வேலையை அவர்களே செய்ய விடுங்கள் என்கிறார்
ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஜூலி ஹைன்ஸ் (Julie Lythcott).

குழந்தைகள் உளவியல் தொடர்பாகவும், குழந்தை வளர்ப்பு தொடர்பாகவும் பல உரைகள், ஆராய்ச்சிகளை இவர் செய்திருக்கிறார்.

பதின் பருவத்தினரை வளர்ப்பது எப்படி (How to Raise an Adult) என்ற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக ஆற்றிவரும் உரைகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவை.

அவர், தான் பார்த்த வெற்றிபெற்ற குழந்தைகளிடம் இருந்த மிக முக்கியமான குணம் என்று ‘குழந்தைகளின் அன்றாட வேலைகளை அவர்களே செய்துகொள்வதுதான்’ என்கிறார்.

அவர்களுடைய அன்றாட சாதாரண வேலைகளைக்கூட அவர்களுக்குப் பதிலாக நாம் செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு எப்படித் தன்னம்பிக்கையும் தைரியமும் வரும் என்று அவர் கேட்கிறார்.

தங்கள் வேலைகளை, அதுவும் எளிதான அன்றாட வேலைகளிலிருந்து நேர்த்தியையும் ஒழுங்கையும், நேர மேலாண்மையையும் மிக எளிதாகக் குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல், அப்போது மற்றவர்களின் உதவியை, தேவையை, கஷ்டங்களை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அது அவர்களைப் பக்குவப்பட்டவர்களாக மாற்றும்.

தங்கள் இயல்புகள், குறைகள், போதாமைகள், விருப்பங்கள் என்று குழந்தைகள் தங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் அது உதவியாக இருக்கும்.

சகமனிதர்களுடன் உறவாடும் திறனை வளர்த்தல்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், 700 பேரை நர்சரி பள்ளிக் காலத்திலிருந்து அவர்களின் 25 வயது வரை தொடர்ச்சியாகக் கவனித்து ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அதில் 25 வயதில் சிறப்பான ஆளுமை உடையவர்களாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பவர்கள் சிறுவயதிலிருந்தே மற்றவர்களிடம் கனிவாகவும், மிக எளிமையாகப் பழகுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

சக குழந்தைகளுடன், மனிதர்களுடன் இணக்கமாகப் பழகும் திறன் அந்தக் குழந்தையை வெற்றிப் பாதையை நோக்கி மிகச் சுலபமாகக் கொண்டு சேர்க்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

ஆனால், இன்றைய கல்விச் சூழலில் பெற்றோர்களாகிய நாம் எந்த அளவுக்குக் குழந்தைகளிடம் இதை அனுமதிக்கிறோம் அல்லது சொல்லித்தருகிறோம்?

அவனை/அவளைவிட நீ நிறைய மார்க் வாங்க வேண்டும்”,

“அவனை/அவளை நீ இந்தப் போட்டியில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்”,

“அவனை/அவளை விட நீ நன்றாக டான்ஸ் ஆட வேண்டும்” எனச் சிறு குழந்தைகளின் மனதில், அவர்களின் நண்பர்களின் மீது ஒரு போட்டி மனப்பான்மையைத்தான் எந்நேரமும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சக குழந்தைகளை எப்போதும் போட்டியாளராக நினைத்துக்கொண்டு வளரும் குழந்தைகளால் எப்படி அவர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்?

அதே போல, “அவர்களோட என்ன பேச்சு? வந்து படி”,

“பக்கத்து வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது” என எந்த நேரமும் நமது கைகளுக்குள்ளேயே குழந்தைகளை வளர்த்து வருகிறோம்.

எந்நேரமும் நமது கட்டுப்பாட்டிலேயே வளரும் குழந்தைகள், பழகும் திறனை முற்றிலுமாக இழக்கிறார்கள்.

முதன்முறையாக சமூகத்தைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது திணறிவிடுகிறார்கள்.

மனிதர்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்களுடன் நீடித்த உறவை ஏற்படுத்திக்கொள்வதிலும் ஏராளமான சிக்கல்களை முதல் முறையாகச் சந்திக்கத் தொடங்குகிறார்கள்.

அதுதான் அவர்களுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது.

சிறு வயதிலிருந்தே அவர்கள் மற்றவர்களுடன் பழகிக்கொண்டிருந்தால், மனிதர்களை எப்படி எதிர்கொள்ள, கையாள வேண்டும் என்பதை எளிதில் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

அது, வெற்றியை நோக்கிய பாதையில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

அப்பா-அம்மாவுக்கு இடையேயான ஆரோக்கியமான உறவு:

குழந்தையின் அப்பா-அம்மாவுக்கு இடையே இருக்கும் ஆரோக்கியமான, புரிதலுடைய, பக்குவமான உறவு என்பது குழந்தையின் எதிர்காலத்துக்கும் அதன் மனநிலைக்கும் மிகவும் அவசியமானது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஒரு விஷயத்தை எப்படிச் சொல்கிறோம், அதைப் பற்றி எப்படி உரையாடுகிறோம், அந்த விஷயத்தில் நமது முரண்களை எப்படிக் களைகிறோம், அதன் பொருட்டு எப்படி ஒருமித்த உறவுக்கு வருகிறோம் என்பதையெல்லாம் குழந்தைகள் தொடர்ச்சியாக நம்மிடம் கவனித்தே வளருகின்றன.

அதிலிருந்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கின்றன. அதன்படியே அவர்களும் நடந்துகொள்கிறார்கள்.

அதே போல பெற்றோர்கள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர்மறையான போக்கில் குழந்தைகளிடம் நடந்துகொள்வதும் குழந்தைகளிடையே குழப்பத்தை அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு அம்மா, “டிவியே பார்க்கக் கூடாது, டிவியே பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு வராது” என்று சொல்லும் நேரத்தில், “அப்படியெல்லாம் குழந்தையைப் பயமுறுத்தாதே, டிவி பார்த்தா அறிவு நல்லா வரும்” என்று அப்பா சொல்வது நல்லதல்ல.

பெற்றோர்களுக்கிடையே ஒரு விஷயம் குறித்துக் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், குழந்தையிடம் ஒற்றைக் கருத்து மட்டுமே சொல்லப்பட வேண்டும்.

பெற்றோர்களின் மன அழுத்தம்

அலுவல்கள் தொடர்பாகவோ குடும்பப் பொறுப்புகள் தொடர்பாகவோ பெற்றோருக்கு ஏற்படும் மனவுளைச்சல்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.

நீங்கள் அதை வெளியே சொல்லவில்லையென்றாலும் உங்கள் நடவடிக்கைகள், உடலசைவுகள், முகத்தோற்றங்களை வைத்துக் குழந்தைகள் அதை ஊகித்து விடுவார்கள்.

அதனால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்த ஒரு சிக்கலையும் நீடிக்க விடாமல் அதற்கான தீர்வைத் தேடி, உடனடியாக அதைச் சரிசெய்துகொள்வது அவசியம்.

இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சூழல் உள்ள குடும்பங்களில் இதுபோன்ற மனவுளைச்சல்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அப்படி இருக்கும்போது, அதை முடிந்தவரை குழந்தைகளிடம் காட்டாமல் இயல்பாக நடந்துகொள்வதும், அப்படி ஒருவருக்கு மனஅழுத்தம் இருக்கும்போது இன்னொருவர் அக்கறையுடனும், கரிசனத்துடனும் அருகே இருந்து அவரைப் பார்த்துக்கொள்வது குழந்தையின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.

இன்றைய மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. டிஜிட்டல் சாதனங்களின் வரவு அதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழுமையான காரணமல்ல.

மாணவர்களின் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் போட்டி நிறைந்த உலகமாகிக் கொண்டிருக்கிறது. இயல்பான கல்வியை போட்டியாக மட்டுமே பார்க்கக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

அதனால், கல்விக்கு வெளியே வாசிப்பு என்பது குழந்தைகளிடம் தேவையற்ற வேலை என்பது போன்ற கருத்தைப் பெற்றோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வாசிப்பின் மீதான ஆர்வம் புறந்தள்ளப்படுகிறது.

அது எந்த வகையிலும் போட்டியில் வெல்வதற்கு உதவாது என்ற மனப்பான்மையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில், வாசிப்பு என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை, கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புகள் குழந்தைகளின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துகின்றன.

வெற்றிபெறும் குழந்தைகளின் பொதுவான பண்புகளாக இவையெல்லாம் இருக்கின்றன.

அதனால், குழந்தைகளிடம் குறைந்தபட்சம் இந்தப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு.

– நன்றி: சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/எழுத்தாளர் முகநூல் பதிவு.

தொடர்புக்கு: sivabalanela@gmail.com

You might also like