மலைக்கள்ளன் தந்த மறுவாழ்வு!

“மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால் எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலை அடைந்திருக்கும்.

மறுமலர்ச்சிக்கு எனது உழைப்பு, திறமை முதலியவைகள் தான் காரணம் என்று வாதிப்பவர்கள் இருந்தாலும், அதை வெளிக்காட்ட அரியதொரு வாய்ப்பினைத் தந்தவர் திரு ஸ்ரீராமுலு நாயுடு தான்!” என்று ஒருமுறை எம்.ஜி.ஆர் தெரிவித்தார்.

எம்.ஜி ஆரின் திரை வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது மலைக்கள்ளன் திரைப்படம் தான்.

ஸ்ரீராமுலு & கலைஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவலைத் திரைப்படமாக எடுக்க ஸ்ரீராமுலு நினைத்தார். கருணாநிதிதான் அந்தப் படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என முடிவும் செய்து விட்டார்.

ஆனால் கலைஞரோ “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர், நான் திமுகவைச் சேர்ந்தவன்” என்று கூறி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத மறுத்து விட்டார்.

ஸ்ரீராமுலு எம்.ஜி.ஆரிடம் இந்தச் செய்தியைக் கூறினார்.

“கருணாநிதி வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனைத் தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார்.

உடனே எம்.ஜி.ஆர், கருணாநிதியை சந்தித்து, “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளன் கதையில் எவ்வித கட்சிப் பிரசாரமும் கிடையாது. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

கருணாநிதி சற்று யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்ததால் நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே வசனம் எழுதச் சம்மதித்தார்.

‘மனோகரா’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த கலைஞர் ‘மலைக்கள்ளன்’ படத்திற்கும் வசனம் எழுதினார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய 6 மொழிகளில் மலைக்கள்ளன் தயாரிக்கப்பட்டது.

மாம்பழ நாயுடு என்ற போலீஸ் வேடத்தில் நடித்த டி.எஸ்.துரைராஜின் நகைச்சுவைக் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்தன.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், நா.பாலசுப்பிரமணியன், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதினர்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர் பாடும்
“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை டி.எம்.எஸ் பாடினார்.

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்குப் பாடினார்.

நன்றி: முகநூல் பதிவு

08.03.2022  12 : 30 P.M

You might also like