ஒரு கவிஞனின் கவிதைப் பயணம்!

நூல் வாசிப்பு:

கலை விமர்சகரும், கவிஞருமான இந்திரனின் கவிதை பரிசோதனைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார் கவிஞர் நா.வே.அருள்.

அவர் தமுஎச கலை இலக்கிய இரவுகள் போன்ற நூற்றுக்கும் அதிகமான கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்.

‘இந்த நூல் எதற்காக எழுதப்படுகிறது’ என்ற தலைப்பில் நூலில் ஒரு சுவாரசியமான முன்னுரையை எழுதியிருக்கிறார்.

‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக அதிலிருந்து சில வார்த்தைகள்…

சென்னையின் பீச் ஸ்டேசன் பகுதியில் நானும் கவிஞர் இந்திரனும் பக்கத்துப் பக்கத்துக் கட்டங்களில் வேலை செய்த நாள்கள் மறக்கமுடியாதவை.

நான் பாரத ஸ்டேட் வங்கி. அவர் இந்தியன் வங்கி. மதிய உணவு வேளைகளில் அவரோடு இலக்கிய விவாதங்களில் ஈடுபடும்போதெல்லாம் அவர் பேசிய சொற்களை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் ஓய்வுபெறும் வயதுக்கு முன்னரே முழுநேர இலக்கியவாதியாக வாழும் பொருட்டு வங்கியிலிருந்து தானே முன்வந்து ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார்.

அவரை நேரில் அறிந்தவன், அவரது எல்லா நூல்களையும் படித்தவன் என்ற வகையில் இந்திரனின் கவிதை உலகம் பற்றிய என் பார்வையை உங்கள் முன் வைப்பதுதான் நான் இந்த நூலை எழுதுவதன் முதல் நோக்கம்.

தமிழகத்தின் கவிஞர்களில் இன்று 75 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்தான் கவிஞர் இந்திரன்.

தனது 50 ஆண்டுகளில் இலக்கிய வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு கவிதைப் பரிசோதனைகளில் சலியாது ஈடுபட்டு வருகிறார்.

மரபுக் கவிதையில் அவர் 17 ஆண்டுகள் ஞானம்பாடி என்ற பெயரில் இயங்கி வந்தவர்.

1982ல் வெளிவந்த தனது அந்நியன் தொகுதியின் மூலம் நவீன கவிதைப் பிரதேசத்தில் பிரவேசித்தார்.

அதுவரை ஆங்கிலத்தில் ஓவியம், சிற்பம் குறித்த கட்டுரைகளை எழுதி வந்தவர், கவிஞர் மீரா வெளியிட்ட தனது நவகவிதை வரிசை கவிதைத் தொகுதியின் மூலமாக இந்திரன் எனும் நவீன கவியாக அறியப்படலானார்.

இந்திரன் என்பது ஒரு முகம் அல்ல, பன்முகம். அவர் எழுதப்படாத ஓர் இலக்கிய நாட்குறிப்புப் புத்தகம். இலக்கியத்தின் எட்டுவழிச்சாலை.

இலக்கியம், ஓவியம், சிற்பம், சினிமா, நாட்டுப்புறவியல், நகர்ப்புறவியல் போன்ற பல துறைகளில் தன் பல்துறை பயிற்சியின் காரணமாக பங்களித்துவருபவர்.

இந்திரன் கவிதைகள் இன்றைய டிஜிட்டல் யுகத்துக்கான ஒரு உலகப் பார்வையைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பார்வையை அவர் எப்படிப் பெற்றார் என்றுதான் இந்நூல் ஆராய்கிறது.

இளம் தலைமுறை எழுத்தாளர்கள் தங்களின் முன்னோடி எழுத்தாளரின் பரிசோதனை முயற்சிகளை அறிந்துகொண்டால், அதன் அடுத்தகட்ட பயணத்துக்கு அவர்கள் தயாராவார்கள் என்பது எனது கருத்து.

சலியாது பல கவிதைப் பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் இந்திரன் செய்த இலக்கியப் பரிசோதனைகள் எத்தகையவை. அவற்றை அவர் ஏன் நிகழ்த்தினார் என்பதை ஆராய்வது எனக்கு சுகமான ஒரு அனுபவமாக அமைந்தது.

2020ல் வெளிவந்த கவிதை நூலில் காணப்படும் கவிதைகளை எழுதும் அவரது கவிதைப் பயணத்தில் அவரது மொழிபெயர்ப்புகளும் முக்கிய பங்களித்துள்ளன என்பது என் கருத்து.

கோட்பாட்டு ரீதியான உள்வாங்குதலை மட்டும் நிகழ்த்தாமல் கவிதை அழகியலை எப்படிக் கட்டி வளர்த்துள்ளார் என்பதற்கு இவரது கவிதைகள் சாட்சியங்கள்.

இந்திரன் என்கிற ஒரு கவிஞனின் கவிதைப் பயணத்தை ஆராய்வதன் வழியாக இன்றைய இளைய சக்திகளிடம் இந்த பரிசோதனை முயற்சிகள் ஊடுருவிப் பாய்ந்தால் இந்நூலின் நோக்கம் நிறைவேறியதாகக் கருதுவேன்.

இந்திரஜாலம் (இந்திரனின் கவிதை பரிசோதனைகள்ஒரு விசாரணை):
நா.வே.அருள்

வெளியீடுயாளி பதிவு வெளியீடு,
8 / 17
கார்ப்பரேஷன் காலனி,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 24
விலை ரூ. 180

பா. மகிழ்மதி

You might also like