வீரபாண்டியபுரம் – தப்பிதமாகிப் போன கணக்கு!

‘சில விஷயங்கள் சரியா அமையாததால படம் சரியா போகலை’ என்பது திரையுலகில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள்.

அந்த விஷயங்கள் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சறுக்கல்களாகவோ, முன் தயாரிப்பில் உருவான தவறுகளாலோ அல்லது பின்பணியில் ஏற்பட்ட அவசரங்களாலோ அடியோடு மாறியிருக்கலாம்.

பெரும்பாலும் தொடர்ச்சியாகப் படங்களைத் தரும் தயாரிப்பு நிறுவனங்களிலோ, இயக்குனரின் அலுவலகங்களிலோ, நடிகர் நடிகைகளின் மக்கள் தொடர்பாளரிடமோ இது போன்ற புலம்பல்களைக் கேட்க முடியும்.

அது போன்ற சூழலைப் பரிசளித்திருக்கிறது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகான்ஷா சிங், ஹரிஷ் உத்தமன், ஜெயப்பிரகாஷ், சரத் லோகிதாஸ், பாலசரவணன் உட்படப் பலர் நடித்திருக்கும் ‘வீரபாண்டியபுரம்’.

பழிக்குப் பழி!

வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ரத்தினசாமியும் (சரத் லோகித்வா) செல்லதுரையும் (ஜெயப்பிரகாஷ்) பகைவர்களாகத் திரிகின்றனர்.

ரத்தினசாமியின் தந்தை உள்ளாட்சித் தேர்தலில் தோற்பதற்கு, செல்லதுரையின் மகள் சொன்ன ஊழல் புகாரே காரணம்.

இதனால், அவர் தற்கொலை செய்ய, பழிக்குப் பழியாக செல்லதுரையின் மகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர் ரத்தினசாமியும் அவரது சகோதரர்களும். இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பிலும் மாறி மாறி தலைகள் உருள்கின்றன.

ஒருநாள் ரத்தினசாமியின் மகள் வெண்பா (மீனாட்சி) சிவா (ஜெய்) என்ற வாலிபரைக் காதல் திருமணம் செய்ய தயாராகிறார்.

ஆனால், ரத்தினசாமிக்குத் தெரியாமல் திருமணம் செய்யக்கூடாது என்று நேராக வெண்பாவை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் செல்கிறார் சிவா.

இன்முகத்துடன் இருவரையும் வரவேற்கும் ரத்தினசாமி, குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்லுமிடத்தில் சிவாவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த பழியை செல்லத்துரை தரப்பு மீது சுமத்த தயாராகிறார்.

இந்த சூழலில், அங்கு ரத்தினசாமி கொல்லப்படுகிறார். கொன்றது சிவா என்று தெரியவரும் நிலையில், அந்த குடும்பத்தினர் அவரை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது மீதிக்கதை.

சிவா ஏன் ரத்தினசாமியைக் கொன்றார் என்பதற்கான பிளாஷ்பேக்கும் இந்த கதையிலேயே ஒளிந்திருக்கிறது. இந்த சிறிய முடிச்சு கொண்ட கதையை திரைக்கதை ஆக்கியதில் ‘ப்ப்பாபா..’ என்று அயர்வைத் தந்திருக்கிறார் சுசீந்திரன்.

பழிக்குப் பழி கதைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும், திரைக்கதையில் ‘த்ரில்’ கூட்டுவதில் கோட்டை விட்டிருக்கிறார். ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ தந்தவரா இவர் என்று யோசிக்க வைக்கிறார்.

சுப்பிரமணியபுரம் தாக்கம்!

ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், சரத் லோகித்வா, ஜெயப்பிரகாஷ், ஹரீஷ் உத்தமன் என்று அனைவருமே திரையில் வந்து போகின்றனர்.

சரத்தின் சகோதரர்களில் அர்ஜித் மட்டுமே திரையில் சில நொடிகளாவது தெளிவாகத் தென்படுகிறார். இதர குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை.

முன்பாதியில் ஜெயப்பிரகாஷ், ஹரீஷ் உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு சரியான முக்கியத்துவம் தராததால், பின்பாதி பிளாஷ்பேக்கும் சரி, அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளும் சரி, நம்மை இறுக இருக்கையில் இருத்த முடிவதில்லை.

காதல், கோபம், வெறி, வெட்கம் ஆகியவற்றைக் கடத்தியபோதும் ஜெய்யிடம் பழைய ‘துள்ளலை’ காண முடியவில்லை.

அகான்ஷா சிங்கின் நடிப்பு டப்பிங் படம் பார்க்கும் எபெக்டை உருவாக்குகிறது. மீனாட்சிக்கு அந்த பாத்திரத்தை தந்திருக்கலாமோ என்று எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

பாலசரவணன் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயன்று தோற்றிருக்கிறார். அவருக்கான ‘ஸ்பேஸ்’ திரைக்கதையில் அறவே இல்லை. இவர்கள் அனைவரையும் மீறி நம் மனதில் நிற்பது கோபாவேசம் பொங்கத் தோன்றும் காளி வெங்கட் மட்டுமே!

படம் முழுக்க ‘சிவ சிவ.. சிவ சிவ..’ என்ற பின்னணி இசையை ஒலிக்க விட்டிருக்கிறார் ஜெய். அவர்தான் இப்படத்தின் இசையமைப்பாளர்.

’சிவ சிவ’ என்று முதலில் பெயர் வைத்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், படம் முழுக்க ரத்தம் தெறித்த காரணத்தால் ‘சுப்பிரமணியபுரம்’ தாக்கத்தில் ‘வீரபாண்டிய புரம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

‘காடை முட்டை’ பாடல் ஜெய்யின் பெயரை இசை ரசிகர்கள் மனதில் ஒட்ட வைத்திருக்கிறது. சண்டைக்காட்சிகளுக்கான பின்னணி இசை அருமை. தினேஷ் காசியின் ஆக்‌ஷன் காட்சிகளும் அதற்கேற்றபடி இருக்கின்றன.

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு பளிச்சென்று களத்தைக் காட்டினாலும், அவரது கைவண்ணத்தில் தென்படும் குளுமை ‘மிஸ்ஸிங்’! எடுத்தவற்றை கவனமாக கோர்த்திருக்கிறது மு.காசி விஸ்வநாதன் டீம்.

வழக்கமாகத் தனது தொழில்நுட்பக் குழுவுடன் கைகோர்த்து, மொத்தக் கதையிலும் இருக்கும் தவறுகளை உடனடியாக உணர முடியாதபடி செய்துவிடுவார் இயக்குனர் சுசீந்திரன். இதில், அந்த விஷயம் நிகழவே இல்லை.

சுசீந்திரன் எங்கே..?!

சுசீந்திரனின் ஆக்‌ஷன் படங்களில் கமர்ஷியல் அம்சங்களை மீறி நிற்கும் யதார்த்தமே, அக்கதையுடன் நம்மை ஒன்றச் செய்யும்.

மீனாட்சியைப் பார்த்து ஜெய் பாடத் தொடங்கியதுமே, அந்த எண்ணம் மங்கிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகான பிளாஷ்பேக் தாண்டி, கிளைமேக்ஸ் வரை அது தொடர்கிறது.

எத்தனை நாட்களாக மீனாட்சியும் ஜெய்யும் காதலிக்கின்றனர் என்ற தகவலோ அல்லது அவர்களது காதலின் அழுத்தம் அதிகம் என்பதற்கான காட்சிகளோ இல்லாதது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மிக முக்கியமாக, ஜெயப்பிரகாஷுக்கும் ஹரீஷ் உத்தமனுக்கும் ஜெய்யை முன்பே தெரியுமா இல்லையா என்ற கேள்விக்குத் திரைக்கதையில் பதிலே இல்லை. போலவே, ஜெய்யின் நண்பர்கள் பற்றிய தகவல்களும் அதிகமில்லை.

இதனால் படத்தில் இருக்கும் சாதீய அரசியலோ அல்லது பகையோ எவ்வித தாக்கத்தையும் அளிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகப் படம் ஓடுவது சில காட்சிகள் விடுபட்டிருக்கின்றனவோ என்ற எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.

படத்தின் பட்ஜெட்டோ, கொரோனா கால படப்பிடிப்போ கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நேர்த்தியான திட்டமிடல் மற்றும் திரக்கதைக்கான திட்டமிடல் மூலமாக இந்த விஷயங்களை அசாத்தியமாகக் கடந்து செல்லும் சுசீந்திரனுக்கு என்னவானது என்ற கேள்வியை உருவாக்குகிறது ‘வீரபாண்டியபுரம்’.

முந்தைய படமான ‘ஈஸ்வரன்’ கூட இப்படியொரு எண்ணத்தையே ஏற்படுத்தியது என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது.

யார் நடித்தாலும், எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், சுசீந்திரன் இயக்கம் என்பதே அப்படத்தைக் காண்பதற்கான துருப்புச்சீட்டாக இருக்கும்.

அந்த கணக்கு தப்பிதம் ஆகியிருப்பது வேறு ‘ராஜபாட்டை’யில் அவர் செல்கிறாரோ என்ற எண்ண வைக்கிறது.

ப்ளீஸ் சுசீந்திரன், வெகு சீக்கிரமே ஒரு முன்னணி நட்சத்திரத்தை வைத்து உங்களது ட்ரேட்மார்க்கான ‘யதார்த்தம்’ கலந்த கமர்ஷியல் படத்தை தாருங்கள். அது மட்டுமே சரியான பிராயச்சித்தமாக இருக்கும்!

  • உதய் பாடகலிங்கம்
You might also like