தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

பேச வேண்டிய விஷயங்களை அழுத்திச் சொல்வதும் கோடிட்டுக் காட்டுவதும் ஒருவகை என்றால், போகிற போக்கில் சொல்லிவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுதல் இன்னொரு வகை.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது வகையில் அடங்கும் படைப்புகள் மிகக்குறைவு. ஆனாலும், அவ்வப்போது அந்த வகையில் வரத்தான் செய்கின்றன.

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கடைசி விவசாயி’யைப் பார்த்தபிறகு, கதையோட்டத்தில் இயக்குனர் மணிகண்டன் சொல்லிச் சென்ற சில விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தேன்.

நிறைய தவறவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் ஆக்கிரமிக்க, இரண்டாம் முறை பார்க்கும் எண்ணம் பிறந்தது.

ஒரு புத்தகத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துவது போல, ஒரு காட்சிப் படைப்பை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் முதன்முறை பெற்ற அதே உத்வேகத்தைப் பெறுவதும், புதிதாக ஒன்றைக் கண்டறிவதும் அந்த படைப்பாளிக்கு கவுரவம் சேர்ப்பது.

அப்படி மறுபார்வைக்கு உடனடியாக நம்மைத் தூண்டுகிறது ‘கடைசி விவசாயி’.

ஆதித்தொழிலின் மேன்மை!

வேட்டையாடுவது விளையாடுவது என்றிருந்த கற்கால மனிதர்களை ஓரிடத்தில் கூட வைத்து, உணவுக்காகப் பயிர் செய்ய வைத்த கணம் மானுட நாகரிகத்தின் தொடக்கம். அப்படிப் பார்த்தால், ஆதித்தொழில்களில் வேளாண்மைக்கு மிக முக்கிய இடம் உண்டு.

பருவ மழை என்ற ஒன்று இல்லாமல் போனபிறகு, வேளாண் தொழிலைக் கைவிட்டவர்களைப் போலவே அதனை அலட்சியமாகக் கருதுபவர்களும் பெருகிவிட்டனர்.

அவர்களை நோக்கி, ‘நாங்க சேத்துல கால் வச்சாதான் நீங்க சோத்துல கை வைக்க முடியும்’ என்று வசனம் பேசும் படங்கள் எத்தனையோ வந்துவிட்டன.

ஆனால், அவ்வாறு புரிய வைக்க முடியாத விவசாயத்தின் மேன்மையைத் தனது இரண்டரை மணி நேரப் படைப்பு மூலம் சாதித்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

மாயாண்டி வேடத்தை ஏற்ற நல்லாண்டியை திரையில் பார்க்கும்போது, ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வே தோன்றுகிறது.

கொரோனா காலத்தில் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலை மீறி, அவர் வரும் காட்சிகள் எல்லாம் உயிருடன் நம் முன் நடமாடுவது போன்றே இருக்கின்றன.

’5 ஏக்கர் நிலத்துல எப்படி விவசாயம் செய்யப்போறேன்னு தெரியலை’ என்று சிறையில் சக கைதி ஒருவர் சொல்லும்போது, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மண்ணை நிரப்பி அதில் நீரை ஊற்றுமாறு கூறுகிறார் மாயாண்டி.

அதில் வேப்பங்கன்று முளைவிட்டதைக் கண்டு அந்த கைதி ஆச்சர்யப்படும்போது, ‘நீதானே மண்ணை போட்ட, தண்ணி ஊத்துன’ என்று மாயாண்டி சொல்லும் சொல்லும் காட்சி ஒன்று போதும் ’விவசாயம் என்றால் என்னவென்று அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள’.

நிலத்தை விலை பேச வருகிறவர்களிடம், ‘இந்த நிலம் இருக்கறதாலதான் காலையில எழுந்திரிச்சு வேலை பார்த்துட்டு வர்றேன், இதுவும் இல்லேன்னா..’ என்று நல்லாண்டி கேள்வி எழுப்புமிடம், விவசாயத்தைக் கைவிட்ட பலரும் எத்தகைய மனக்கோளாறுகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதைச் சிந்திக்க வைக்கிறது.

நல்லாண்டியின் நிலத்திலுள்ள நெற்பயிரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கும் தலைமைக்காவலரும் சரி, நல்லாண்டியின் உறவினராக வரும் முனீஸ்வரனும் சரி, வெவ்வேறு கணங்களில் விவசாயத்தின் மகிமையை உணர்வதாகக் காட்டியிருப்பது அருமை.

‘இந்த 2 மணி நேரத்துலதாம்பா நிம்மதியா இருக்கேன்’ என்று வயலில் நின்றுகொண்டு காவலர் பேசும் வசனத்தில் உடனடியாக அது புரிந்துவிடுகிறது.

மட்பாண்டங்கள் செய்வதைத் தொடர முடியாமல் போன குயவர் ஒருவர், மிகுந்த அர்ப்பணிப்புடன் குலதெய்வத்தின் சிலையைச் செய்வதில் இருந்து தனக்கான தொழில் விவசாயம் என்று முடிவெடுக்கிறார் முனீஸ்வரன்.

அதுவரை, அவருக்கென்று நிரந்தரமான வேலையோ வருமானமோ இல்லை என்பதும் முன்னரே கதையில் சொல்லப்பட்டுவிடுகிறது. திரைக்கதையில் வரும் இந்த இடம்தான் நல்லாண்டி கடைசி விவசாயி அல்ல, அவர் மாபெரும் தொடக்கத்தை உருவாக்குகிறார் என்பதைச் சொல்லிச் செல்கிறது.

தமிழ் மண்ணுக்கான ஆன்மிகம்!

எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டில் இயற்கைக்கு முக்கியத்துவம் இருக்கும். அவ்வாறு இல்லாதபோது, வெற்று சித்தாந்தங்களும் ஊற்றுக்கண்ணில் இருந்து விலகி வந்த தூரமும் பல குழப்பங்களுக்குக் காரணமாகும்.

அப்படியொரு இயற்கை சார்ந்த ஆன்மிகத்தைச் சொல்கிறது ‘கடைசி விவசாயி’ எவ்விதத் துறுத்தல்களும் இல்லாமல்..

இறந்துபோன ஒரு உயிர் இன்னும் தன்னுடன் இருப்பதாக நம்புகிறார் நல்லாண்டியின் மகன் ராமையா. ஊர்க்காரர்களைப் பொறுத்தவரை அது பைத்தியக்காரத்தனம்.

இந்த பாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதி, அவ்வாறு திரியும் எத்தனையோ மனிதர்களை மனநலம் பிறழ்ந்தவர்களாக நோக்கும் பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

அருந்தும்போதும், உணவுண்ணும்போதும் இரண்டு டம்ளர்களையும் தட்டுகளையும் பயன்படுத்துகிறார் ராமையா. வீட்டுக்கு வரும் மகனை ‘சாப்பிடுறியாய்யா’ என்று கேட்கும் நல்லாண்டி, அவர் சொல்லாமலேயே இரண்டு தட்டுகளில் உணவு கொண்டுவரும் காட்சி முதலில் நமக்கு சாதாரணமாகப் படும்.

இறுதியில், ராமையாவை ஆசீர்வாதம் செய்யும் பிச்சைக்காரர் அவரது கையில் திருநீறைத் திணித்துவிட்டு ‘அங்கொருத்தி இருக்கா மறந்துட்டியா’ என்று கேட்கும்போது, பார்வையாளர்களான நமக்கே நமது சிந்தனை மீது வெறுப்பு மேலிடுகிறது.

அது மட்டுமல்ல, அந்த காட்சி தொடங்கும்போது அந்த நபர் எச்சில் இலைகளில் இருந்து தனக்கான உணவைத் தேடிக் கொண்டிருப்பார். ராமையா தரும் உணவையும் குப்பைத்தொட்டியிலேயே வைக்குமாறு சொல்வார். துறவிகளுக்கான நம் அளவுகோல்களை கேள்விக்குட்படுத்தும் இந்த இடம், எல்லா மதத்திற்கும் பொதுவானது.

போலவே, ‘தமிழ்நாட்டை யார் ஆட்சி பண்றா’ என்ற கேள்விக்கு, ‘எப்போதுமே முருகன் தான்’ என்று ராமையா சொல்லுமிடம் அரசியலையும் மீறி இம்மண்ணில் நிலைத்திருக்கும் ஆன்மிக நெறிகளின் முக்கியத்துவம் என்னவென்பதைக் கூறுகிறது.

இங்கு இறைவன் என்பது வெறுமனே நாம் இருக்கும் பூமிப்பந்து மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் கூட என்ற என்ற எண்ணம் மேலிடுகிறது.

’கடைசி விவசாயி’யின் திரைக்கதையும் கூட மூன்று மயில்கள் மடிந்ததை வைத்தே பின்னப்பட்டிருக்கிறது.

இக்கதையில் மயில் ஒரு குறியீடு என்று பல விளக்கங்கள் சொல்வதைவிட, சக உயிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட வேறென்ன ஆன்மிக நெறியைப் பின்பற்ற முடியும் என்ற கேள்வி மிக முக்கியமானது.

கிளைமேக்ஸுக்கு முன்னதாக, நல்லாண்டி விளைவித்த பயிர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட, அந்த விஷயம் தெரியாமலேயே உடல் அயர்ச்சியை எதிர்கொள்கிறார் நல்லாண்டி.

‘வாடிய பயிரைக் காணாமல் வாடும்’ இக்காட்சி ஒன்று போதும், தமிழ் மண்ணில் குடி கொண்டிருக்கும் ஆன்மிகம் எத்தகையது என்று சொல்ல..

கண்டுபிடிப்புக்கான தேவை!

புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகும்போது, அதற்கான அவசியம் என்னவென்ற கேள்விக்கு என்றென்றைக்குமான சரியான பதில் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைதான்.

அந்த வகையில் அதிக மகசூலை முன்னிறுத்தும் ‘ஹைபிரிட்’ விதைகள் உடனடி பலனைத் தந்தாலும், என்றென்றைக்குமான தீமைகளையே மண்ணுக்கும் மனிதர்களுக்கும் பரிசளிக்கின்றன.

இதனைப் பிரச்சார நெடி சிறிதும் இல்லாமல், இயற்கை வழி விவசாயத்துக்கு கொடி பிடிக்காமல், ‘இந்த விதையைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பளைப் புள்ள பிறந்து அதுக்கு விதைக்கொட்டை இல்லாமப் போனா அப்ப தெரியும் விதையோட அருமை’ என்று சொல்லியிருப்பது போகிற போக்கில் இம்மண்ணுக்கான வேளாண் முறை எதுவென்பதைத் தெளிவுபடுத்துகிறது.

பூச்சிக்கொல்லிகள், உரங்கள் விற்கும் வணிகரிடம் ‘எக்ஸ்பையரி’ ஆன மருந்தைப் பற்றி கேட்கும்போது, ‘எக்ஸ்பையரி ஆனா என்ன பூச்சி சாகும்லா’ என்று சொல்வார் அந்த நபர்.

எருக்கம், நிலவேம்பு உட்பட சில தாவரங்களைக் கொண்டு பூச்சிகளை விரட்டுவதற்கான வழிமுறையை விளக்கும் நல்லாண்டி பாத்திரம். வேளாண்மையில் ஜீவகாருண்யம் எந்தளவுக்கு முக்கியம் என்பது இதன் மூலம் விளங்கும்.

வேளாண்மை செய்பவர்களும் அவர்கள் விளைவிக்கும் பயிர்களும் வெவ்வேறல்ல. இந்த உயிரோட்டமிக்க உறவை புதிய கண்டுபிடிப்புகளால் ஒருபோதும் ஏற்படுத்தவே முடியாது.

உயிரோட்டமற்று ஏனோதானோவென்று விளைவிக்கப்படுவதை உண்டபிறகு நம் உடலில் எத்தகைய ஓட்டமும் ஊட்டமும் வாய்த்துவிடும்?

வெறுமனே விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசாமல் மனப்பிறழ்வினையும் இயல்பாக ஏற்றுக்கொள்வது, உயரக்குறைவு உள்ளிட்ட குறைபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது, உழைப்பின் அவசியத்தைப் புரிந்திருப்பது எனப் பல விஷயங்கள் மிக இயல்பாகத் திரைக்கதை ஓட்டத்தில் கலந்திருக்கின்றன.

இறுதிக் காட்சியில் சாமியாடும் தலைமைக்காவலரை இன்னொரு காவலர் தடுக்க, அவ்வூரைச் சேர்ந்தவர்கள் ‘தடுக்க வேண்டாம்’ என்று சைகை காட்டுவதும், தலைமைக்காவலருக்கான அடையாளமாக அவரது சட்டையில் இருக்கும் மூன்று பட்டைகள் அவர் மீது ஊற்றப்படும் நீரில் நனைவதும் வார்த்தைகளுக்குள் அடக்கவியலா உணர்வை உருவாக்குகின்றன.

மிகமெதுவாக நகரும் ‘கடைசி விவசாயி’யின் திரைவடிவம் பரபரப்பான காட்சிகளை எதிர்பார்ப்பவர்க்கானதல்ல;

ஆனால், இதில் நிரம்பியிருக்கும் ஆன்மிகமும் மண் குறித்த அக்கறையும் வேளாண்மை என்பது இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது என்பதை உணர்த்தும்.

அந்த வகையில் இந்த மண்ணில் ‘கடைசி விவசாயி’ வாழும் வரை சில மாற்றங்களுக்கு உள்ளானாலும் இங்கிருக்கும் இயற்கை சார்ந்த வாழ்க்கைமுறை அடியோடு அகலாது என்று சொல்லும் ‘கடைசி விவசாயி’யை ஒவ்வொரு முறையும் பார்த்து களித்து உத்வேகம் கொள்ளலாம்!

  • உதய் பாடகலிங்கம்
  • 22.02.2022 12 : 30 P.M
You might also like