மக்கள் மொழியில் அமைந்த பெரியாரின் இதழியல் எழுத்து!

நூல் வாசிப்பு:

சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நூலாக வெளிவந்திருக்கிறது பேராசிரியர் இரா. சுப்பிரமணியின் ஆய்வும் தொகுப்புமான ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? என்ற நூல்.

தாய் இணையதள வாசகர்களுக்காக நூலாசிரியர் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி

சொற்பொழிவு மேடைகளும் அச்சடித்த ஏடுகளுமே பெரியாரின் படைக்கலன்கள். இவையே பெரியார் கையிலேந்திய வாளும் கேடயமும்.

அலங்காரமும் புனைவுகளுமற்ற ஆணித்தரமான சொற்கள், கதைகள், துணைக்கதைகள், உரையாடல்கள், கேள்விகள், நக்கல், நையாண்டி எனப் பல மணி நேரம் நீடிக்கும் பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்க மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்.

நூல்களிலும் ஏடுகளிலும் பெரியார் முன்னெடுத்த விவாதங்களும் அடுக்கடுக்கான வழக்காடும் வாதங்களும் விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் வாசகர்களிடையே கடத்தி அவர்களைப் போராட்டக்களம் நோக்கி ஈர்த்தன.

தந்தை பெரியார் கற்றறிந்த பண்டிதரில்லை, ஆனால் தமிழ் இலக்கியங்களை இவரளவுக்கு ஆராய்ச்சி செய்தவரில்லை.

பல்கலைக்கழகப் பட்டங்களை ஈட்டி ஆய்வகங்களில் ஆய்ந்தறிந்த அறிவியலாளரில்லை, ஆனால் இவரளவுக்கு அறிவியல் கருத்துகளை எடுத்துரைத்தவர் எவருமில்லை.

சமூகவியலை ஆய்ந்தறிந்த கல்வியாளரில்லை, ஆனால் இவரளவுக்கு இந்திய  சமூகத்தைத் தெளிந்து அறிந்து சமூகத்தின் தன்மைகளை ஆய்வுக்குள்ளாக்கிய சமூகவியலாளரில்லை.

வறுமையில் உழன்றவரில்லை, ஆனால் வறுமையை ஒழிக்க இவரைப் போல் குரலெழுப்பியவர் எவருமில்லை.

தீண்டாமையை, பாராமையை எதிர்கொண்டதில்லை, ஆனால் இவரைப்போல் தீண்டாமையின் ஆணிவேரை அசைத்துப் பார்த்தவரில்லை. இறைநம்பிக்கை கொண்டவரில்லை,

ஆனால் இவரளவுக்கு இறைவழிபாட்டு உரிமைக்கு, ஆலயநுழைவு உரிமைக்குக் களத்தில் போராடியவரில்லை. பெரியார் பேசாத பொருளில்லை, அவர் பேசமால் விட்டவை எதுவுமில்லை.

இவர் முன்வைத்த பெண்ணுரிமைக்கான குரலின் அதிர்வலைகளை இன்றுவரை உலகம் அதிர்ந்தவண்ணமே எதிர்கொள்கிறது.

அரசியலுரிமை, சமூகநீதி, மண்ணுரிமை, பெண்ணுரிமை, பண்பாட்டுரிமை, பொருளியலுரிமை ஆகியவற்றுக்காக மேடைகள் தோறும் சொற்பொழிவாற்றி, ஏடுகள்தோறும் கட்டுரைகள் எழுதி, வீதிகள்தோறும் போராட்டம் நடத்தி, அடிபட்டுச் சிறைப்பட்ட தலைவர் பெரியாரைப் போல் எவருமில்லை.

பெரியாரின் மேடைத்தமிழும் இதழியல் நடையும் பண்டிதத்தனங்களைத் தவிர்த்த, எளிமையான மக்கள்மொழியில் அமைந்துள்ளன.

ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்கள், இதழாளராகவோ களச்செயற்பாட்டாளராகவோ போராடிச் சிறைசெல்லும் போராட்டவாதியாகவோ இருத்தல் அரிது.

இதிலும் பெரியார் தனித்துவத்துடன் திகழ்ந்தார். பெரியார் தொடர்ந்து பேசினார்; எழுதினார்; செயற்பட்டார்; போராடினார்; சிறைப்பட்டார்.

உலகம் முழுவதும் அரங்கேறிய ஆற்றல் மிக்க சொற்பொழிவுகளின் வீச்சும் பண்புகளும் கட்டமைப்பும் தாக்கங்களும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றின் தனித்தன்மைகள் புலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வண்ணம் நிகழ்த்தப்பெறும் ஆய்வுகள் எடுத்துரைத்தல் (narration), விரித்துரைத்தல் (description), விளங்கவுரைத்தல் (exposition), விவாதித்தல் (argumentation) என்னும் நான்கு வகைப்பாட்டின்கீழ் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.

இந்த வகைப்பாட்டில் பெரியாரின் சொற்பொழிவு களைப் பொருத்திப்பார்த்து ஆய்வுக்குள்ளாக்கினால், பெரியாரின் சொல்லாட்சிகள் தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதனை அறியலாம்.

அவரின் கருத்துப்புலப்பாடு, சொல்தேர்வு, உதாரணங்கள், கதைகள், துணைக்கதைகள், பழமொழிகள், கேள்விகள் எனும் அனைத்தும் மக்களுக்கு நெருக்கமானவையாகவே இருக்கும்; ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத கோணத்தில் இருக்கும்.

பெரியாரின் சொற்பொழிவுகளில் பண்பாண்மை (ethos) மிகுந்த கருத்துப்புலப்பாட்டுத் தன்மை இருப்பதனை அறியமுடிகிறது.

பெரியாரின் எடுத்துரைப்பியல், மொழி, நடை, புலப்பாடு, வாதம், எதிர்வாதம், குரல், தொணி அனைத்தும் மக்களைத் தன்வயப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

பெரியார், மேடையில் மக்களிடம் நேருக்குநேர் ஊடாடும் தன்மை (interactive) கொண்ட வடிவத்தில் உரையாடினார். இதனால் மக்கள் பெரியார் தம்மிடம் நேரிடையாக உரையாடுவதாகவே உணர்ந்தனர்.

பெரியார் மேடைகளில் தமக்காகப் பேசுவதாகவே கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உணரும்வண்ணம் அவர் பேச்சு அமைந்திருந்தது.

பெரியார் தன்னையும் உள்ளடக்கியே பேசுவார்; கேள்விகேட்பார். தான் ஒரு அறிவாளி, பேச்சாளன் என்ற அதிகார தொனியை அவர் வெளிப்படுத்தியதில்லை.

நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் அடிமையாகவே இருக்கவேண்டுமா? மானமும் அறிவும் வேண்டாமா? என்னும் கேள்விகளில் பெரியார் தன்னையும், பார்வையாளர்களையும் ஒரேநிலையில் நிறுத்தியே உரையாடினார்.

இதனால் மக்கள் பெரியாரின் குரலைப் பிரித்துப்பார்க்காமல் தம் குரலாய், தமக்கான குரலாய்ப் பார்த்தனர்.

இதனால்தான் பெரியாரின் உரைகள் ஐந்து மணி நேரம் வரை நீடித்தன. அவ்வளவு நேரமும் மக்கள் காத்திருந்து உரையைக் கேட்பதனை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

தந்தை பெரியார் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை வலுப்படுத்த, மேடையையும் ஏடுகளையும் மிக வலிமையாகப் பயன்படுத்தினார்.

தந்தை பெரியாரின் உரைகளும் எழுத்துகளும் மக்களைச் சென்றடைந்தவண்ணம் வேறெந்தத் தலைவரின் கருத்துகளும் சென்றடையவுமில்லை, தாக்கத்தை உருவாக்கவுமில்லை.

தம்முன் இருந்த குறைந்தபட்சத் தொழில்நுட்பமான ஒலிபெருக்கி, லெட்டர் பிரஸ் ஆகியவற்றைக் கொண்டே பெரியார் சென்றடைந்த தூரமும், வேகமும் கணிக்க முடியாத தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பெரியாரின் கருத்தில் இருந்த வலிமையைக் காட்டுவனவாக உள்ளன.

“ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?” என்ற தலைப்பிலான இத்தொகுப்பில் 1925 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரையில் குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகளும், தலையங்கங்களும்,

துணைத் தலையங்கங்களும், கட்டுரைகளும், செய்தி விளக்கங்களும், காலவரிசைப்படி அவ்விதழ்களில் வெளிவந்தவாறே, பெரியார் பார்வையில் இதழ்கள், ஏன் தொடங்கினேன்.

இத்தனை இதழ்கள், பெரியார் போற்றிய தோழமை இதழ்கள், பெரியாரின் வழக்காடும் இதழியல், பெரியாரின் நூல் மதிப்புரைகள் என்னும் தலைப்புகளில் தொகுக்கப் பெற்றுள்ளன.

பெரியாரின் சொற்பொழிவுகளையும் தலையங்கங்களையும் கட்டுரை களையும் பேசுபொருள் வாரியாகத் தனித்தனியாகவும் முழுமையாகவும் வாசித்தறிதல், பெரியாரியல் தேடலுக்கான பொருத்தமான வழியாக இருக்கும் என்பதனால் இத்தொகுப்பில் பெரியாரின் இதழியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் ஐந்து இயல்களாகத் தனித்தனியாகப் பிரித்தமைத்துக் கட்டமைக்கப் பட்டுள்ளன.

மையக்கட்டுமானத்தை உடைப்பதனைத் தமது பரப்புரை உத்தியாகக்கொண்ட பெரியார், பிராமண இதழ்கள் கட்டமைத்த கருத்தியலை எங்ஙனம் தகர்த்துத் தரைமட்டமாக்கினார் என்பதே இத்தொகுப்பின் மைய இழையாகும்.

‘தந்தை பெரியாரின் பார்வையில் இதழ்கள்’ என்னும் இயலில் அன்றைக்கு வெளிவந்த பிராமண, பிராமணரல்லாதார் இதழ்கள் குறித்த பெரியாரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

‘ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்’ என்ற இயலில் இதழ்களைத் தோற்றுவித்த காரணம், தொடர்ந்து நடத்தும் நோக்கம், நிறுத்தவேண்டிய நிலை போன்றவற்றைப் பெரியார் வெளிப்படையாக வாசகர்களிடம் முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை உள்ளிட்ட இதழ்கள் தொடங்கப்பட்டதன் பின்னணியும் ஒவ்வொரு இதழும் வெளிவர எதிர்கொண்ட சவால்களும் பிறரால் இழைக்கப்பட்ட இன்னல்களும்;

ரெய்டு, வழக்கு, அபராதம் என இதழ்கள்மேல் தொடுக்கப்பட்ட அரசின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளும் இந்த இயலில் உள்ள கட்டுரைகளில் வரிசைப்படத் தரப்பட்டுள்ளன.

‘பெரியாரின் வழக்காடும் இதழியல்’ என்னும் இயல் பெரியாரின் இதழியலை முழு வீச்சுடன் வெளிப்படுத்தும் தலையங்கங்களையும் துணைத் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது.

அன்றைக்கு வெளிவந்த சுதேசமித்திரன், விகடன், தினமணி, இந்து உள்ளிட்ட எதிர்நிலை இதழ்களையும் நவசக்தி,

தமிழ்நாடு உள்ளிட்ட பிராமணரல்லாதார் இதழ்களையும் பெரியார் எதிர்கொண்ட விதம், கொள்கைக்காகப் பெரியார் வழக்காடிய விதம் என்பன இந்த இயலில் உள்ள கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்:
ஆய்வும் தொகுப்பும்இரா. சுப்பிரமணி
வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23
/5, ஏகேஜி நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல்.
கோயம்புத்தூர் – 641 015 

விலை ரூ. 1000

– பா. மகிழ்மதி

17.02.2022 10 : 50 A.M

You might also like