கிரிப்டோ கரன்சியைத் தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை!

– ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் 

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாற்றாக கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயில் 30% வரியாக செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு, கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்துள்ளதாகவே பலரும் கூறினர்.

மாநிலங்களவையில் இது குறித்து பதில் அளித்த நிர்மலா சீதாராமன், கிரிப்டோ கரன்சியை மத்திய அரசு அங்கீகரிக்கவும் இல்லை, தடை செய்யவும் இல்லை, வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபிசங்கர்,

“கிரிப்டோ கரன்சி என்பது மக்களை ஏமாற்றம் மோசடி திட்டங்கள் போன்றது. கிரிப்டோ கரன்சிகளை ஒரு நாணயமாகவோ, பண்டமாகவோ சொத்தாகவோ வரையறை செய்ய முடியாது, அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்புகள் கிடையாது.

மக்களை ஏமாற்றும் பேன்சி திட்டம் போன்ற கிரிப்டோ கரன்சியைத் தடை செய்வதே இந்தியாவிற்கு நன்மை” என்று கூறியுள்ளார்.

கிரிப்டோ கரன்சி வருவாய்க்கு மத்திய அரசு வரி விதித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி துணை ஆளுநரின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15.02.2022  12 : 30 P.M

You might also like