கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா? என்று கீர்த்தி என்ற வாசகர் விகடன் இணையதளம் மூலம் கேட்ட கேள்விக்கு, சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன் தரும் ஆலோசனை.

வாசகி கீர்த்தியின் கேள்வி: என் வயது 40. வயிற்றில் கட்டி மாதிரி உருள்கிறது. புற்றுநோயாக இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரை அணுகினேன். அது கொழுப்புக் கட்டி, ஒன்றும் செய்யாது என்றார். அது ஏன் வருகிறது? ஆபத்தில்லாததா?

மருத்துவரின் பதில்:

‘லைப்போமா’ (Lipoma) எனப்படும் கொழுப்புக் கட்டிகள் இந்தக் காரணத்தால்தான் வருகின்றன என எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

சருமத்துக்கு அடியில் சிறிய கட்டி போல வரும். அழுத்திப் பார்த்தால் மென்மையாத் தெரியும். இந்தக் கொழுப்புக் கட்டிகள், கை, கால், முதுகு, வயிறு என எங்கேயும் வரலாம்.

இதற்கென பிரத்யேக சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஒரு மருத்துவரைச் சந்தித்து, அது கொழுப்புக் கட்டிதான் என உறுதிப்படுத்திக் கொண்டால் போதும்.

ஒருவேளை இந்தக் கட்டி, வளர்ந்துகொண்டே போனாலோ, முகம், கைகள் என அடுத்தவர் பார்க்கும்படி உறுத்தலான இடங்களில் இருந்தாலோ அல்லது மூட்டு இணைப்புகளுக்குப் பக்கத்தில் கட்டி இருந்து, வேலை செய்ய முடியாமல் இருந்தாலோ அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றுவோம்.

அரிதான சூழல்களில் அது. எந்த மாதிரியான கட்டி என்று தெரியாவிட்டாலும் ஆபரேஷன் செய்வோம்.

வழக்கமாக இந்தக் கொழுப்புக் கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறாது. சிலருக்கு உடலில் பல இடங்களிலும் இந்தக் கட்டிகள் வரலாம்.

அதுவும் பயப்பட வேண்டிய விஷயமல்ல. அதற்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை, கவனிப்பு மட்டுமே போதும்.”

நன்றி: விகடன் இணையதளம்

14.02.2022  4 : 30 P.M

You might also like