செல்போன் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்கும் வளர்ப்பு பிராணிகள்!

நிலா, அணில், மாடு, காகம் போன்ற இயற்கையான விஷயங்களைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவது அந்தகாலத் தாய்மார்களின் வழக்கம்.

ஆனால் இந்த காலத்திலோ, குழந்தைகளுக்கு சோறூட்டுவது, அவர்களை சேட்டை செய்யாமல் ஓரிடத்தில் அமர வைப்பது, அமைதிப்படுத்துவது, விளையாட வைப்பது என்று எல்லாவற்றுக்கும் மொபைல் போன்களைத்தான் அம்மாக்கள் நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட தங்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரியாகவே மொபைல் போன்களை சில பெற்றோர் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் பெற்றோரின் விருப்பப்படி குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் இந்த மொபைல் போன்கள், பின்பு காலம் செல்லச் செல்ல தன்னகத்தே உள்ள பல்வேறு விளையாட்டுகள் மற்றும் செயலிகள் மூலம் குழந்தைகளை அடிமையாக்கி விடுகின்றன.

பெற்றோர் இல்லாமல்கூட வீட்டில் இருந்துவிடும் குழந்தைகள், மொபைல் போன்கள் இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் ஏற்படும் விளைவுகள் குழந்தைகளின் நலனுக்கு எதிராக உள்ளது.

உடல் ரீதியாக எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபடாமல் எந்த நேரமும் மொபைல் போன்களில் உள்ள ஆட்டங்களே கதியென்று குழந்தைகள் மாறிவிடுவதால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் நகர்புறங்களில் உள்ள 9 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினசரி 4 மணி நேரத்தை மொபைல் போன்களில் செலவழிப்பதாக டெலினோர் என்ற டெலிகாம் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

8 மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் வாழும் 3,200 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தி இதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு மொபைல் போன்களுக்கு அடிமையாகும் குழந்தைகள், மாலை நேரங்களில் வீட்டுக்கு வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதைக்கூட விரும்புவதில்லை.

உடல் ரீதியான செயல்பாடுகள் குறைவதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெரியாமல் இருக்கிறார்கள்.

மொபைல் போன்களின் பிடியில் இருந்து குழந்தைகளை எப்படி மீட்பது என்று பல்வேறு நாட்டு அரசுகளும், உளவியல் நிபுணர்களும் முடியைப் பிய்த்துக்கொண்டு யோசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் குழந்தைகளை மொபைல் போன்களின் பிடியில் இருந்து மீட்க, சிறந்த வழி ஒன்றை இந்தோனேசிய அரசு கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளிடம் வளர்ப்பு பிராணிகளைக் கொடுத்து, அவற்றை வளர்க்கச் சொல்வதுதான் அந்த வழி.

இதற்காக இந்தோனேசிய அரசு, பிறந்து 4 நாட்களே ஆன கோழிக் குஞ்சுகளை 2,000 கோழிக் குஞ்சுகளை பள்ளிக் குழந்தைகளிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியுள்ளது.

வீட்டில் உள்ள தோட்டத்திலோ அல்லது பள்ளி மைதானத்திலோ அவற்றை வளர்க்கலாம் என்றும் குழந்தைகளிடம் சொல்லியுள்ளது.

இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தள்ளியுள்ள பாண்டங் (BANDUNG) என்ற நகரத்தில்தான் அரசு அதிகாரிகள் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

‘சிக்கனைசேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு குழந்தைகள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளதாம்.

தங்களை நம்பி ஒரு ஜீவன் வந்துவிட்டதால், அவற்றைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு குழந்தைகளுக்கு வர, அவர்கள் மொபைல் போன்களை விட்டு கோழிக் குஞ்சுகளை மகிழ்ச்சியுடன் கொஞ்சுவதாக தெரிவித்துள்ளனர் இந்தோனேசிய அரசு அதிகாரிகள்.

அதேநேரத்தில் மொபைல் போன்களுடன் விளையாடுவதை விட கோழிக் குஞ்சுகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் விளையாடாத கோழிக் குஞ்சுகளே குழந்தைகளை ஈர்க்கும்போது, நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் அவர்களை மொபைல் போனின் பிடியில் இருந்து மீட்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே தங்கள் குழந்தைகள் மொபைல் போன்களுக்கும், வீடியோ கேம்களுக்கும் அடிமையாகிக் கிடப்பதாக புலம்பும் பெற்றோர், தங்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கலாம். மொபைல் போனின் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்கலாம்.

-பிரணதி

08.02.2022 12 : 30 P.M

You might also like