நின்றுபோன கலகலத்த வளையோசை!

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர்.

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

1952-ம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘ஆன்’ தமிழில் ‘ஆன் முரட்டு அடியாள்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் லதா மங்கேஷ்கர் 4 பாடல்களை பாடி இருந்தார்.

1955-ம் ஆண்டு இந்தி படமான ‘உரன் கடோலா’ தமிழில் ‘வன ரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை பாடி இருந்தார்.

அதன்பின் 1987-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் நேரடியாக தமிழ் படத்தில் பாடல்கள் பாடினார். இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் பிரபலமானது.

1988-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை….கலகலவென’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடினார்.

அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்’ என்ற பாடலை  மனோவுடன் இணைந்து பாடி இருந்தார்.

தமிழில் லதா மங்கேஷ்கர் நேரடியாக பாடிய பாடல்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். இந்தியில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல்வேறு படங்களில் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

திலீப்குமார் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலக ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்ததுபோல், சிவாஜி கணேசனைத் தன்னுடைய சொந்த சகோதரனாகக் கருதி அன்பு செலுத்தியவர் லதா மங்கேஷ்கர்.

சென்னை வரும்போதெல்லாம், ‘அன்னை இல்லம்’ தான் அவரது இல்லம். “நமது இந்தியக் கலாச்சாரத்தில் ரக்ஷா பந்தன் என்பது சகோதர – சகோதரி இடையிலான பாசப் பிணைப்பை எடுத்துக்காட்டும் பண்டிகை.

“ரக்ஷா பந்தன் சமயத்தில் லதாஜி சென்னையில் இருந்தால், அப்பாவுக்கு ராக்கி கட்டுவதற்கு ஓடோடி வந்துவிடுவார். அவரது வருகைக்காக அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டுவிடும்.

அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தின் மீது துளி பாசமும் குறையாதவர். அவர் மறைவு எங்கள் குடும்பத்துக்கும் இந்தியத் திரையுலகத்துக்கும் பேரிழப்பு” என லதா மங்கேஷ்கருடனான நினைவுகளை, உடைந்த குரலுடன் பகிர்ந்துகொள்கிறார் பிரபு.

இந்தியாவே தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகத்தான் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது நின்றுபோன கலகலத்த வளையோசை.

நன்றி: தினத்தந்தி

You might also like