இசை உலகில் உருவாகியிருக்கும் வெற்றிடம்!

இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையிலுள்ள மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உட்பட அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரு அவைகளிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறைந்த லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார்.

அதில், ”லதா மங்கேஷ்கரின் மறைவால், இசை மற்றும் திரைப்பட உலகில் ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகியையும், மனிதநேயமிக்க மனிதரையும், உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது” என வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல் மக்களவை இன்று காலை கூடியதும் லதா மங்கேஷ்கருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

You might also like