அண்ணாவைப் பற்றியும், அண்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நிறைய நூல்கள் வந்துள்ளன! அந்த வகையில், என்.சொக்கனின் ‘அண்ணாந்து பார்!’ என்ற நூல் அண்ணாவின் வாழ்க்கையை சுருக்கமாக சொல்லுகிறது.
● அதையும் விட, மிக மிகச் சுருக்கமாக, அண்ணாவின் வாழ்க்கையை – எனது நடையில்,
நான் சுருக்கி எழுதியுள்ளதை கீழே தந்துள்ளேன்!
நினைவில் நிறுத்தவும் – நினைத்துப் பார்க்கவும் சாமான்யர்களின் தலைவர் அண்ணா!
*************
● காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரையை அகிலம் அழைக்கிறது – அண்ணா.
● சாமான்ய குடும்பத்தில் செப்டம்பர் 15, 1909ல் பிறந்த சாமான்யன்.
● சாமான்யர்களை விட கல்வியில் கெட்டி, அறிவிலும் கெட்டி.
● சாமான்யர்களின் தலைவிதியை மாற்றியமைத்த தந்தை பெரியாரிடம் 1937ல் சேர்ந்தார்.
● சாமான்யமாக யாரையும் நம்பி விடாத பெரியாரின் சீடரானார்.
● சாமான்ய தமிழர்களை அடிமைபடுத்த வந்த இந்தியை எதிர்த்துப் போராடினார்.
● சாமான்யர்களுக்காக எழுதினார், பேசினார், நாடகங்களில் நடித்தார்.
● சாமான்யர்களின் பாதுகாவலராக, நீதிக்கட்சியை திராவிட கழகமாக்க, 1944ல் ‘அண்ணாத்துரை தீர்மானம்’ கொண்டு வந்தார்.
● சாமான்யர்களின் அரசியல் இயக்கமாக, திமுகவை 1949ல் தோற்றுவித்தார்.
● சாமான்யர்களின் குரலை, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தார்.
● சாமான்யர்களின் ஆதரவை நம்பி, பல கட்சிக் கூட்டணி அமைத்து, 1967ல் காங்கிரஸை எதிர்த்து, சட்டசபைக்கு திமுகவை தலைமையேற்று தேர்தலில் போட்டியிடச் செய்தார்.
● சாமான்யர்களின் அமோக ஆதரவோடு திமுக வெற்றி பெற்று, மார்ச் 6, 1967ல் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
● சாமான்யர்களின் நீண்ட கால கோரிக்கைகளான ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டல், சுயமரியாதை திருமண அங்கீகாரம், மாநிலத்தில் இரு மொழிக் கொள்கை, நிறைவேற்றித் தந்தார்.
● சாமான்யர்களின் குரலாக வாழ்ந்தவருக்கு, சாமான்யமாய் குணப்படுத்த இயலாத நோயால், பிப்ரவரி 3, 1969ல் மறைந்து விட்டார்.
● சாமான்ய மக்கள் ஒண்ணரை கோடிப் பேர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்றார்கள்.
● இது அண்ணா என்ற சாமான்யரின் சரித்திரம்!
அந்த சாமான்யர்களின் தலைவரின் சரித்திரம்!
இந்த சரித்திரம் சாமான்யமா? இனி இது சாத்தியமா?
*************
இனி, இந்த நூலிருந்து சில அரிய தகவல்கள்:
● 1935ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு தமிழகத்துக்கு வந்திருந்த போது, அவர் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணா, நேருவிடம் சில கேள்விகள் கேட்டார்.
அண்ணாவின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த நேரு, “இந்த கேள்விகளைத் தயார் செய்தவருடைய சிந்தனை, அறிவு, ஆற்றலை நான் பாராட்டுகிறேன்!” என்றார். – அன்றே அண்ணா அப்படி!
● 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில், திமுக வெறும் 15 இடங்களை மட்டும் கைப்பற்றியது. திமுகவை காங்கிரஸ் தலைவர்கள், ‘வெறும் பதினைந்து சீட்’ என்று கேலி செய்யத் தொடங்கினார்கள்.
“இதை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கிண்டலாக கேட்ட போது, அந்த கேள்வியை புன்னகையோடு எதிர் கொண்டார் அண்ணா!
“தயவு செய்து எங்களை நன்றாக கேலி செய்யுங்கள்! அப்போதுதான், எங்களின் ஆர்வம் மேலும் பெருகும்!”… என்றார்! – அவர் தான் அண்ணா!
● 1967ம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி, அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதுநாள் வரை, அமைச்சர்களாக பதவியேற்றவர்கள், ‘ஆண்டவன் பெயரால்’ உறுதிமொழி எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்! பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சீடர்கள் என்பதால், அமைச்சர்கள் எல்லோரும், ‘உளமார’ உறுதி கூறிப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்!
● இந்தி மொழியை திணிக்கும் போது, அண்ணா கூறிய மிக பிரபலமான விளக்கம் – “வெறும் எண்ணிக்கையை மட்டும் மனதில் கொண்டு முடிவெடுத்தால், நமது தேசிய பறவையாக மயிலை தேர்ந்தெடுக்காமல், காகத்தையல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும்!” என விளக்கம் தந்தார்!
● சிறிய உருவம் கொண்ட அண்ணாவின் மிகப் பெரும் சாதனைகளை நாம் அண்ணாந்து பார்த்து வியந்து போகின்றோம்! அண்ணா பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது!
நூலில் –
அண்ணாவை பார்ப்போம்!
அண்ணாந்து பார்ப்போம்!
****
அண்ணாந்து பார்!
என்.சொக்கன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் 184
விலை: ரூ.175/-
பொ. நாகராஜன். சென்னை.
03.02.2022.