மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட்!

– ராகுல்காந்தி கடும் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 5-ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவில், “மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட். சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என சாடியுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.

ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது, இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று பதிவிட்டுள்ளார்.

You might also like