தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

– போப் பிரான்சிஸ்

ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி பற்றியும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பாமல், அறிவியல் தரவுகளின் அடிப்படையில் துல்லியமான தகவல்களை அறிவது மனித உரிமையாகும்.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் காணப்படும் தகவல்களில், உண்மை எது, பொய் எது என்பதை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாதோருக்கு துல்லிய விபரங்கள் சென்றடைய வேண்டும். பொய் செய்திகள் மறுக்கப்பட வேண்டும்.

அதே சமயம் போதிய விழிப்புணர்வு அல்லது பொறுப்பின்றி கிடைக்கும் தகவல்களை நம்பும் தனிநபரின் மரியாதையும் காக்கப்பட வேண்டும். பொய் தகவல் என்ற வலையில் விழுந்தோரிடம் கருணையுடன் பேசி, உண்மையை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளது” என்று கூறினார்.

29.01.2022  5 : 40 P.M

You might also like