பெரியாரின் சமூகநீதிப் பார்வை!

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? – 2 / பேராசிரியர் மு.ராமாசமி

ஃபாயர்பாஹின், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கிற உறவுகளின் இடத்தில், மார்க்ஸ், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் – வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப்பிற்கும் (மூலதனம்) – உள்ள உறவுகளை, வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில் வைக்கிற இந்த இடத்தில்தான், மார்க்ஸ் தனித்து நிற்கிறார்.

இதுவே உற்பத்திச் சக்திக்கும், அதன் உற்பத்தி உறவுக்கும் உள்ள பிரதான முரண்! அதுவே, அந்தச் சமூகத்தின் அடிக்கட்டுமானமாகிறது என்கிறார் மார்க்ஸ்!

இந்த அடிக்கட்டுமானத்தை அடையாளங்காண்பதிலேதான் மார்க்சிய அமைப்புகளுக்குள்ளும் பல்வேறு மாறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்த அடிக்கட்டுமானத்தைக் காக்கின்ற மேற்கட்டுமானங்களாகவே, அடிக்கட்டுமானம் உருவாக்குகிற கருத்தியல் சிந்தனைத் தெறிப்புகளான அறம், நீதி, கல்வி, பண்பாடு, இன்னபிற அனைத்தும் அமைந்திருக்கின்றன என்கிறார் மார்க்ஸ்!

பெரியார், மார்க்ஸ் கூறுகிற, பொருளாதார அடிக்கட்டுமானத்தைக் காக்கும், அதன் மேற் கட்டுமானமான பண்பாட்டியல் தளத்திற்குள், மனிதனை நிறுத்தி, மார்க்ஸின் ‘பாட்டாளி’யினுடைய (ஒடுக்கப்பட்ட) இடத்தில், பெரியார் இங்கிருக்கிற ‘சூத்திர’னை (பஞ்சமரையும்) திராவிடன் (ஒதுக்கப்பட்ட) என்பதாய் நிறுத்துகிறார்.

’பாட்டாளி’யாயுமிருக்கிற, இந்தத் திராவிடனின் ’உழைப்பு’ என்கிற பாத்திரம்தான், அச்சமூகத்தின் கருத்தியல் உற்பத்தி உறவாகி, அதன் அடிக்கட்டுமானத்தையே காக்கிறது – சிலவேளைகளில் அசைத்தும் பார்க்கிறது.

அந்த வகையில், அடிக்கட்டுமானத்தையேகூட அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்ட மேற்கட்டுமானத்தின் அடிப்படைப் பண்பாட்டு முரணைக் கூர்மைப்படுத்தும் பணியில், தன்னை முழுவதுமாக அவர் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

மார்க்ஸ், மனிதனுடைய இடத்தில், வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப்பிற்கும் (மூலதனம்) உள்ள உறவைத் தன் சமூக அடிப்ப டையாய்க் கொண்டதுபோல், பெரியார், மனிதனுடைய இடத்தில்-மனிதர்களுக்கிடையிலான கருத்தியல் உற்பத்தி உறவில் – ’பார்ப்பனியக் கருத்தியல்-சூத்திரர் வாழ்வியல்’ (ஆரியர்-திராவிடர்) என்பதான, சமூகக் கருத்தியல் உற்பத்தி உறவைத் தன் அடிப்படை அலகாக்கிக் கொண்டிருக்கிறார்.

தொழிலாளியினுடைய உழைப்பு எப்படிச் சுய நடவடிக்கையாக அல்லாமல், அது பலவந்தப்படுத்துகின்ற, கட்டாய உழைப்பாகிறதோ, அதேபோல், சூத்திரனின் (திராவிடன்) உழைப்பும் சுய நடவடிக்கையாக அல்லாமல், அது, மனரீதியில் பலவந்தப்படுத்துகின்ற, கட்டாய உழைப்பாகிறது.

’செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதை இந்தப் பொருளில்தான் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த நிகழ்வுப் போக்கின்போது, தொழிலாளி முதலாளியின் உடமையாக இருக்கிறான். அதைப்போலவே, கருத்தியல் தளத்தில் சூத்திரன் பார்ப்பனனின் உடமையாகவே இருக்கின்றான்.

தொழிலாளியோ, சூத்திரனோ-பூர்வஜென்மப் பாவத்தால், தான் இப்படி உழைக்க- கஷ்டப்பட – விதிக்கப்பட்டிருக்கிறேன் என்று உண்மையாகவே இரண்டிலும் (தொழிலாளி, சூத்திரன், இத்யாதி) நம்ப வைக்கப்பட்டிருக்கிறான்.

தொழிலாளியாவது, பொருளாதார நிலையில், முதலாளி ஆவதற்கான சிறு சாத்தியக்கூறு உண்டு. ஆயின் சூத்திரன், பிறப்பால் சமூகத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிற, பார்ப்பனன் ஆவதற்கான சாத்தியக்கூறு அணுவளவும் கிடையாது.

அதற்குத்தான் இங்கிருக்கிற சாத்திரங்கள், புராணங்கள், தருமங்கள், அதற்கான கடவுள்-மனிதர் கதைகள் உருவாக்கப்படுகின்றன.

சமூக முன்னேற்றத்தின் மிக முக்கியமான விசையாக மார்க்ஸ் ‘உழைப்’பைக் கண்டதுபோல், பண்பாட்டுவெளியில் இறுகிக் கிடக்கிற, வருணாசிர மத் தளையை அகற்றும், சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசையாகச் ‘சமூகநீதி’யைப் பார்க்கிறார் பெரியார்!

பிறப்பின் வழியாய, வருணாச்சிரம உறவின் எதிர்க் கருத்தியலான ’சமூகநீதி’யைத் தன் கருத்தியல் எதற்குமான அடிப்படை அலகாக்கிக் கொள்கிறார் பெரியார்!

அது, மனுவிற்கெதிரான – பார்ப்பனியத்திற்கெதிரான – வள்ளுவர் அடையாளப்படுத்திய ’பிறப்பொக்கும்’ என்பதாய் அவர் கையில், அது ’பெரியாரியம்’ ஆகிறது.

அதனால், வருணாச்சிரம உறவின் தீர்ப்புக் கோடாக இருக்கிற ’பிறப்’பைக் கேள்விக்குட்படுத்தி, அந்த இடத்தில், அதைச் ‘சமூகநீதி’யால் – சமநீதியால் – இடப்பெயரல் செய்கிறார் பெரியார்!

’தத்துவ ஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்’ என்கிற மார்க்ஸ், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்கிற முழக்கத்தை முன்வைக்கிறார்.

பெரியாரும் மாற்றத்திற்கான நடைமுறை முழக்கமாக, ’மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்கிறார்.

பெரியார், இந்திய வருணாச்சிரமத்தின் ஆக்டோபஸ் கரங்களைக் கண்டு, கேட்டு, வாசித்து, அனுபவித்துத்தான் கடவுள் மறுப்பாளரானார் என்பதும், அதற்கெதிரான சமூக நீதிக் கருத்தியலின் தீர்மானகரமான கருத்துகள் இந்த மண்ணிலிருந்துதான் வகுத்துரைக்கப்பட்டன – அவருக்கு வந்து சேர்ந்தன என்பதும், மார்க்சியம்போலவே இயற்கையானதே!

இரண்டும் ஒரு சேரக் கலந்த, இயங்கியல் வழிப்பட்ட, செயற்பாட்டுப் புதுவடிவம், இந்திய அரசியல், பண்பாட்டுத் தளத்தில் தேவை என்பதையே இந்தியச் சனாதனம் இங்குக் கோடுகாட்டியிருக்கிறது.

மு.ராமசாமி

அடிக்கட்டுமானத்தைப்போலவே, மேற்கட்டுமானமும், ஒன்று மற்றொன்றைப் பாதித்து, அதைப் பாதுகாக்கக் கூடியது.

சமூக வளர்ச்சியானது, இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நின்று, ’சுழல்வட்டப் படிக்கட்டுமுறைத் தொடர் மாற்ற’த்தைத் தங்களுக்குள் கொண்டிருக்கக் கூடியது.

ஆக, பொருளாதார நிலையில் சமவுடைமைக்கான தாக்கீதாக மார்க்சியம் இருப்பதைப்போல், சமூகநிலையில், சமூகநீதியான சமவுரிமைக்கான தாக்கீதாக பெரியாரியம் இருக்கிறது.

(தொடரும்…)

28.01.2022  5 : 30 P.M

You might also like