தமிழக முதல்வருக்கு பிடித்தமான ஊத்துக்குளி வெண்ணைய்!

வெள்ளை வெளேரென்று அவ்வளவு பரிசுத்தமாகக் காட்சியளிக்கிறது அந்த வெண்ணெய். பளிச்சென்று இருக்கிற ‘ஊத்துக்குளி வெண்ணெய்’. தமிழ்நாட்டிலும், அயல் மாநிலங்களிலும் கூடப் பிரபலம். இதற்கென்று தனியான வாடிக்கையாளர் கூட்டம்.

சாதாரணமாகப் பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கிற விஷயம்தான் என்றாலும், ஊத்துக்குளி மட்டும் உச்சிக்கு வந்தது எப்படி?

ஈரோட்டிலிருந்து திருப்பூர் போகிற வழியில் ஒரு சின்னக் கிராமம் ஊத்துக்குளி. அதிலும் கிராமத்தைவிட்டு ஒதுங்கி உள்ள ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி பல பால் பண்ணைகள். இது தவிர இந்தப் பகுதிகளில் ஊருக்கு ஊர் பாலிலிருந்து ‘கிரீம்’ எடுக்கிற இயந்திரங்கள் அது என்ன… ‘கிரீம்’?

சின்ன விஷயம்தான். வீடுகளில் மோரை மத்தால் கடைந்து மிதப்பு எடுக்கிறோமல்லவா? அதையேதான் இங்கு மிஷினில் அதே கடைசல்! பாலை அந்த மிஷினில் ஊற்றிக் கடைய பாலிலிருந்து அதன் கொழுப்புச்சத்து தனியாகப் பிரிந்து விடுகிறது.

கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் பளபளப்புடனிருக்கிறது இந்தக் ‘கிரீம்’. வெண்ணெய்க்கு இதுதான் மூலப்பொருள். இப்படிக் கிரீமை எடுக்கத்தான் கிராமம் தோறும் மெஷின்கள். கிராமங்களில் கிரீம் சேகரிக்கப்பட்டு நேரே ஊத்துக்குளிக்கு வருகிறது.

இங்கு சின்னதும் பெரியதுமாக 20-க்கும் மேற்பட்ட ‘டெய்ரி’கள் (பண்ணைகள்) கிரீமை இங்கு கொண்டு வந்ததும் ஒரு டிரம்மில் கொட்டி அதனுடன் தண்ணீர் சேர்த்து சுழல விடுகிறார்கள் அல்லது கைகளால் அந்த டிரம்மைச் சுழற்றுகிறார்கள்.

இவ்வாறு சுழற்றும்பொழுது கிரீமில் இருந்து மோர் போன்ற நீர் தனியாகப் பிரிந்து வந்துவிடுகிறது. கிரீம் இன்னும் கெட்டிப்படுகிறது.

நீளவாக்கிலான பலகையின் நடுவே உருளை, அதைச் சுழற்றவும் வசதி உண்டு. ஏற்கனவே சிறிது இருகி உள்ள கிரீமைத் திரும்பவும் அந்த உருளையில் கொட்டி அவற்றைத் தொடர்ந்து உருட்டுகிறார்கள்.

கிரீம் மாவாய் அரைக்கப்படுகிறது. அதிலிருந்து புளிப்புச்சத்து கலந்த நீர் முழுமையாக வெளியேறி விடுகிறது. கிரீம் இன்னும் கெட்டிப்பட்டு நல்ல வெள்ளை நிறத்தில் திரண்டு வருகிறது. இதுதான் வெண்ணைய்.

உடனே அந்த வெண்ணெயின் ஒரு பகுதியை எடுத்துக் காய்ச்சுகிறார்கள் தனியான ஒரு மணம். அதை பரிசோதிக்கிறார்கள். 100 கிராம் எடுத்துக் காய்ச்சினால் அதில் 78 கிராம் நெய் வரவேண்டும்.

அப்படி வந்தால் அது நல்ல தரமான வெண்ணெய். பிறகு டின்களில் நெய் நிரப்பப்படுகிறது. பிறகு மார்க்கெட்டிற்கு அனுப்புகிறார்கள். இவ்வாறுதான் ‘ஊத்துக்குளி வெண்ணெய்’ பல ஊர்களுக்கும் விநியோகமாகிறது.

“ஊத்துக்குளி வெண்ணெயின் சிறப்புக்குக் காரணம், அதில் இருக்கிற கூடுதலான கொழுப்புச்சத்து, விசேஷமான மணமும், நல்ல சுவையும் கூடுதல் காரணம்.

சாதாரணமாக அரசு விதித்துள்ள தரத்தின்படி 100 கிராம் வெண்ணெயைக் காய்ச்சினால் அதில் 78 கிராம் நெய் வரவேண்டும்.

இங்கு அந்த சதவீதம் கூடுதலாகவே வரும்.

“ஏழரை டன் கிரீமை இந்தப் பண்ணையில் நாங்கள் பிழியும்போது அது ஐந்தரை டன் வெண்ணெயாக மாறிவிடும்” என்கிறார் ஊத்துக்குளியில் உள்ள ஆர்.எஸ்.டெய்ரியைச் சேர்ந்த எஸ்.ராம்குமார்.

ஊத்துக்குளியிலேயே இயந்திரங்களைப் பயன்படுத்தி வெண்ணெய் தயாரிக்கிற நிறுவனம் இவர்களுடையது. பாலிலிருந்து கிரீம் எடுக்க, டிரம்மில் அலச, சுத்தப்படுத்தி வெண்ணை எடுக்க என்று தனித்தனி இயந்திரங்கள்.

கிரீமிலிருந்து புளிப்பு நீரைப் பிரித்தெடுக்க குளிர்ந்த நீரை ஊற்றுகிறார்கள். இங்கு அதற்குத் தனிவசதி.

தயாரான வெண்ணெயைக் கையிலெடுத்துக் கொஞ்ச நேரம் வைத்திருந்தால்போதும் உடம்பின் இயல்பான உஷ்ணத்தில் அது இளகி கையில் நெய் வாசனை கமழ்கிறது. இதுதான் ஊத்துக்குளியின் ஸ்பெஷாலிட்டி.

இதுதவிர கையினால் இயங்கக்கூடிய இயந்திரங்களுடன் பண்ணைகள் மாடர்ன் டெய்ரிப் பண்ணை உரிமையாளர் பி.வி.புருஷோத்தமன் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரது பண்ணையில் கைகளினால் இயக்கிய இயந்திரங்கள் மூலம் தயாராகிக் கொண்டிருந்தது வெண்ணைய்.

“அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பே பிரசித்தமாகி விட்டது இங்குள்ள வெண்ணைய்.. தரம்தான் இதன் சிறப்பு. ஒரு டின்னில் 15 கிலோ வெண்ணெய் இருக்கும்.

இப்படி வாரத்திற்கு ஆயிரக்கணக்கான டின்கள் ஊத்துக்குளியிலிருந்து தமிழகத்தின் பல ஊர்களுக்கும், கேரளாவிற்கும், ஆந்திரம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் இன்னும் பாட்னா, நாகூர் வரை போகின்றன.

இத்தனை வருஷங்களாகத் தொடர்ந்து இன்னும் கிராக்கியுடன்தான் போய்க்கொண்டிருக்கிறது வெண்ணெய்” என்கிறார் இவர்.

ஊத்துக்குளியிலேயே வெண்ணெய் தயாரிப்பில் இறங்கி சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது ‘சர்வோதய அக்ரோ இண்டஸ்டரீஸ் நிறுவனம்’. இங்கும் ஏராளமான வெண்ணெய் உற்பத்தி. இங்கேயே உடனடி விற்பனை. 15 கிலோ அடங்கிய டின்களாக வாரத்துக்குச் சராசரியாக 500 டின்கள் இங்கு மட்டுமே தயாராகின்றன.

தமிழ்நாடு முழுவதற்கும், பாண்டிச்சேரிக்கும் விநியோகமாகின்றன. 90-ல் இங்கு உற்பத்தியான வெண்ணெயின் மதிப்பு 77 லட்சம் ரூபாய். 91-ல் 92 லட்சம். 92-ல் ஒரு கோடியையும் தாண்டிவிட்டது. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கிலோ வெண்ணெய் இங்கு மட்டுமே தயாராகிறது.

“நாங்கள் சப்ளை பண்ண முடியாத அளவுக்கு டிமாண்ட் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எங்களது தரம்தான். நல்ல யூனிட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எங்களது நிறுவனம். ரயில் மூலமும், லாரிகள் மூலமும் உடனுக்குடன் வெண்ணைய் டின்களை அனுப்பி விடுகிறோம்” என்கிறார் ஆர்.டி.பெரியசாமி.

சுமார் 700 வீடுகள் கொண்ட சின்ன கிராமமாக ஊத்துக்குளி இருந்தாலும் வெண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதற்கு முக்கிய காரணம் ஊத்துக்குளியைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் வீட்டுக்கு வீடு எருமை மாடுகள் வளர்க்கப்படுவதுதான்.

நாளொன்றுக்கு சுமார் எட்டு லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய எருமைகளை வளர்க்கிறார்கள். உடனே அந்தப் பாலிலிருந்து கிராமங்களிலேயே கிரீம் எடுத்து பண்ணைகளில் விற்க இவர்களுக்கு உடனடியாக ஆதாயம்.

“இந்தப் பகுதி வறட்சியானது. இங்கு விவசாயம் இல்லை. விவசாய நிலத்திலேயே சோளம் விதைத்து இருக்கிறோம்.

விளைந்தால் இந்த மாடுகளுக்கு நல்ல தீனியாகும். மாட்டைவிட்டால் இங்கு வருமானம் இல்லை” என்கிறார்கள் ஊத்துக்குளி அடுத்துள்ள கருவேலம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியும் சின்னப்பனும்.

இப்படி வேலம்பாளையம், ரெட்டைக்கிணறு, சிவகிரி, கவுண்டம் பாளையம், முரட்டுப்பாளையம், கேட்பர்பாளையம், ரெட்டிபாளையம் என்று பல பகுதிகளிலும் பாலிலிருந்து கிரீம் எடுப்பது ஒரு குடிசைத் தொழில் மாதிரியே ஆகிவிட்டது.

இவைதான் ஊத்துக்குளிக்கு வந்து வெண்ணைக்கு மறு அவதாரம் எடுத்து கோடிக்கணக்கான மதிப்பில் வெளியூர்களுக்குப் போகிறது. பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன் இருப்பது ஒரு வசதி.

ஒரு நாளைக்குச் சராசரியாக 200 டின்கள் ரயில் மூலமாக மட்டும் வெளி மாரக்கெட்டிற்குப் போகின்றன. ஊத்துக்குளி சின்னக் கிராமம்தான். ஆனால் இங்கிருந்து அனுப்பப்படும் வெண்ணெயின் மதிப்பு 5 கோடியையும் தாண்டுகிறது.

”கிராமத்தில் இப்படி தொழில் வளர்ந்து செழிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் அரசின் வரி விதிப்பு உபத்திரமாகவே மாறியுள்ளது. ஆரம்பத்தில் 4 சதவீதம் வரை வரி இருந்தது.

1977-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் அரசு அமைந்ததும், வெண்ணெய் உற்பத்தி தொழில் மீதான வரியை முழுக்க ரத்து செய்தார்.

வெண்ணை தயாரித்த 10 நாட்களுக்குள் விற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் தொழிலுக்கு அந்தச் சலுகை ஒரு வரப்பிரசாதம். ரத்தான வரியை தற்போதைய தமிழக அரசு மீண்டும் விதித்திருக்கிறது.

“உள்ளூர் வரி என்று பல விதத்தில் ஏறத்தாழ 15 சதவீத வரி, கிராமங்களில் பலரும் ஈடுபட்டிருக்கிற குடிசைத் தொழிலுக்கு இந்த வரி ஒரு பெரிய சுமை. இந்த வரி இந்தத் தொழிலையே நாசமாக்கிவிடும்.

தமிழக முதல்வருக்கு மனு மேல் மனுவாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த வரியை ரத்து செய்தால்தான் இந்தத் தொழில் நீடிக்கவே முடியும்” என்கிறார்கள் ஊத்துக்குளியில் உள்ள பண்ணை உரிமையாளர்கள்.

ஊத்துக்குளியைச் சுற்றிலும் வளர்ந்திருக்கும் வெண்ணெய் தயாரிப்புத் தொழில் எந்த அரசாங்கத்தின் தனிப்பட்ட முயற்சியின் விளைவல்ல.

இது கிராமங்களில் அந்தப் பகுதி பொருளாதார நிலையில் தன் இயல்பாக வளர்ந்தத் தொழில். சிறுகச் சிறுக வளர்ந்த இந்தக் கிராமத்தின் தொழில் வீச்சு மற்ற மாநிலங்களையும் தொட்டிருக்கிறது.

பலருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலை அரசு மேலும் வளப்படுத்த முடியாவிட்டாலும் முட்டுக் கட்டையாக உள்ள வரிகளை ரத்து செய்யலாம்.

அதுவே பெரிய கைங்கரியமாக இருக்கும். இத்தகைய நெருக்கடியில் ஊத்துக்குளி வெண்ணெய்த் தொழில் உருகி கொண்டிருந்தாலும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்த நாடு முழுவதுமே மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது ஊத்துக்குளி வெண்ணெய்.

தமிழக முதல்வராக இருந்த ஒருவருக்கு ‘ஊத்துக்குளி வெண்ணெய்’ என்றால் அத்தனை பிரியமாம். ஆர்வத்துடன் சொல்கிறார்கள்.

ருசித்தவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். உருவாக்கியவர்கள்?

*

மணா-வின் ‘தமிழகத் தொழில் முகங்கள்’ என்று நூலிலிருந்து…

10.02.2022  6 : 30 P.M

You might also like