எக்காலத்திற்கும் மறக்க முடியாத சினிமா அனுபவம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர்-9
****
‘தாய்’ வார இதழை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த வலம்புரி ஜானுக்கு திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் இருந்தது.

பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும் சிந்தனை உள்ளவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் உண்டு.

திராவிட இயக்கம் சமூக மாற்றத்திற்காக திரைத்துறையில் எடுத்துக்கொண்ட முயற்சி பெரிது. அந்த தாக்கம் எல்லா இலக்கியவாதிகளுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
1974 கலைஞருடைய பரிந்துரையின் பேரில் ராஜ்யசபா எம்.பி.யாக 1974 ஏப்ரல் 3 முதல் அக்டோபர் 14 வரை இருந்தார்.

அதன்பின் எம்.பி. ஆவதற்கான வயதிற்கு முன்பாகவே அவர் ஆகி விட்டார் என்பதற்காக
ராஜசபா பதவியை இழந்தார் என்பது வரலாறு.

அதற்குப் பிற்பாடு ஒரு காலகட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது அவருக்கு கைகொடுத்தது எழுத்து.

அவர் தன்னுடைய பானு பதிப்பகம் மூலமாக ஒரு ஊரின் கதை, நான் விமர்சிக்கிறேன், நீர்க்காகங்கள் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்.

காதல் கடிதங்கள் என்ற நூலை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டது.

1976 இல் வெளியான ‘வரப்பிரசாதம்’ என்ற திரைப்படத்தில் அவர் ஒரு பாடலை எழுதும் சூழல் அமைந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் கே.நாராயணன். அந்த படத்தின் கதையை எழுதியவர் கே.எஸ்.மாதங்கன். இசையமைப்பாளர் ஆர்.கோவர்தன். அந்த படத்தில் நடித்தது ஜெயசித்ரா ரவிச்சந்திரன் என்கிற முன்னணி நட்சத்திரங்கள்.

காதலும் வாழ்வும் இணைந்த அந்த பாடலுக்கான வரிகளை வலம்புரிஜான் அவர்கள் எழுதினார்கள். அந்தப்பாடல் அப்போது பிரபலமாக எல்லோராலும் முணுமுணுக்கப்பட்டது.

இப்போது கூட நீங்கள் யூடியூபில் சென்று வரப்பிரசாதம் வலம்புரிஜான் பாடல் என்று தேடினால் கிடைக்கும்.

அந்தப் பாடல் இப்படியாகத்தான் துவங்குகிறது.

“கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் –
சீதை நடந்தாள்

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் காட்டில் பறிபோவதல்ல

ஆண்:
மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள் –
உள்ளம் நெகிழ்ந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
நினையாததெல்லாம் நிறைவேற கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண் என்று வந்தால் என்னென்று சொல்வேன்

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை “

-என்று ஆணும் பெண்ணுமாக பாடப்படும் பாடலாக அது அமைந்தது.

அக்காலத்தில் நாடக மேடைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவரை சேகர் என்று அழைப்பார்கள். அவருக்கும் வலம்புரிஜானுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பின்னாளில் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘சுதந்திர நாட்டின் அடிமைகள்’ படத்தில் ஒரு பாடல் எழுதினார்.

கங்கை கொண்டான் இயக்கிய ‘பிரியமுடன் பிரபு’ என்ற படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் கங்கை அமரன் இசைக்க எழுதினார்.

சாகித்ய அகாடெமி விருது பெற்ற புவியரசு கூட அந்தப் படத்தில் பணியாற்றிய நினைவு. ‘குங்கும கோலங்கள்’ என்ற படத்தில் வலம்புரிஜான் கதை, வசனம் எழுதியதாக அறிகிறேன்.

பிறகு சிறிது காலம் கழித்து ‘தாய்’ வார இதழில் ஆசிரியராக மாறினார்.

1986 இல் விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல யாரோ அந்த ஆசையை மீண்டும் கிளப்பி இருக்கலாம். சினிமா ஆசை பலமாக அவரைப் பற்றிக் கொண்டது.
திரைப்படத்திற்குள் நுழைந்தார் வலம்புரிஜான். அது அவரை முற்றிலுமாக திசைத்திருப்பி விட்டது.

வலம்புரிஜான் அவர்கள் தயாரித்து, இயக்கிய படம் “அது அந்தக் காலம்”.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் வலம்புரிஜான் தான்.

ஆனால், அவருக்கு திரைத்துறையில் அதற்கு முன்பு இயக்குனர் ஆவதற்கான முறையான பயிற்சி எல்லாம்  மேற்கொண்டதில்லை. தீவிரமான தைரியத்தில் இயக்கவும் தயாரிக்கவும் துவங்கி விட்டார்.

அந்தப் படத்தில் லட்சுமி, சரத்பாபு, சரண்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.

பானு ரேவதி கம்பைன்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்தார்.

5 பாடல்கள் – இசையமைத்தவர் சந்திரபோஸ். வலம்புரிஜான் ஏற்கெனவே திரைப்படங்களுக்கு பாடல் எழுதியிருந்தாலும் தன் படத்தில் வைரமுத்து அவர்களை எல்லாப் பாடல்களும் எழுத வைத்தார்.

அந்தப் படத்திற்கு உதவி இயக்குனராக பவித்திரன், ஜெயராம் ஆகியோர்
பணியாற்றினார்கள். 1988-ல் படம் வெளியானது.

ஆனால் படம் வெகுவான வெற்றியைப் பெறவில்லை. திரைக்கதையும் சொன்ன விதமும் காலத்திற்குப் பொருந்தவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்தது.

‘தாய்’ வார இதழ் இலக்கியம், சமூகம், இளைஞர் முன்னேற்றம் என்று முன்னேறிக் கொண்டிருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

ஆனால், வலம்புரிஜான் அவர்கள் திரைப்படத் துறையில் கவனம் செலுத்திய பின் அவருக்கு எல்லா நிலையிலும் ஒரு பின்னடைவு நேர்ந்தது.

அதற்கு முன்பாக அவர் பெரியார் பாதையில் சொந்தமாக ஒரு வீடு கட்டி இருந்தார். அது வங்கியில் கடன் பெற்று கட்டியிருந்தார்.

அந்த பெரியார் பாதை வீட்டிற்கு வராத அரசியல் பிரபலங்கள், இலக்கியவாதிகள் கிடையாது.

வீடு கட்டியதால் வந்த பிரச்சனை, திரைப்படம் எடுத்ததால் வந்த கடன் என்று அவரை பலவித கோணங்களில் நெருக்கியது.

எனவே, இலக்கியத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு ராஜாளிப் பறவை சற்று தடுமாறி நின்ற காலகட்டம் அது என்று தான் கூற வேண்டும்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளின்போது எனது திருமணம் நடந்த பிற்பாடு நான் பத்திரிகைகளில் இருந்து சிறிது விலகி, திரைத்துறையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘மையம்’ பத்திரிகையின் துணை ஆசிரியராக ஓராண்டு காலம் இருந்து பிறகு துணை இயக்குனராக கமல்ஹாசனுடைய நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்-இல் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றத் துவங்கினேன்.

எனவே வலம்புரிஜான் இயக்கிய ‘அது அந்தக் காலம்’ திரைப்படத்தில் நான் பங்கு கொள்ளவில்லை.

ஆனாலும் வலம்புரிஜான் அவர்களோடு எனக்கு தொடர்பு இருந்து கொண்டிருந்தது.

‘தாய்’ வார இதழில் தனக்குப்பின் பொன் ஜெயந்தன் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் ஊர் பக்கம். ஆனால் அது சரி வருமா என்ன?

அவர் அதிகமாக தன்னை ஆசிரியர் பக்கம் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தும் நிலையானது.

அந்தக் காலகட்டத்தில் பாபநாசம் குறள் பித்தன், முத்தப்பா, சூரியகாந்தன், பழனிபாரதி, கல்லாடன், ராஜா இப்படி ஏராளமானோர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆர்.சி.சம்பத், நாஞ்சில் சு.காந்தீயன் இருவரும் பிரீலான்சராக எழுதினார்கள்.

சிறு சிறு சிரிப்புகளுக்காக ஓவியம் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பவித்ரா எனும் படைப்பாளி.

ஒரு ஆடிட்டர் தான் வலம்புரி ஜான் அவர்களை திசை திருப்பினார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த அக்கவுண்ட் பிரிவில் பத்மநாபன், சிவா என்ற இருவரும் கூடவே ராஜேந்திரன் அவர்களும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

பிரபல திரைப்படக் கதாசிரியர் பாலமுருகனின் மகன் தான் சிவா. இன்னும் அவர் தொடர்பில்தான் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது சட்டசபை தேர்தல் வந்தது.

பல்வேறு உத்திகளைக் கொண்டு அரசியலில் முந்த நினைத்து பல்வேறு வதந்திகளை வெளியில் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். மறுபடியும் திரும்பி வரமாட்டார் என்று ஒரு கருத்தை வைத்தார்கள். அது இல்லை என்று சொல்வதற்காக ஆர்.எம்.வீரப்பன் ஒரு முயற்சி செய்தார்.

பாக்யராஜ் மூலமாக அமெரிக்கா சென்று மருத்துவமனையில் இருக்கும் புரட்சித் தலைவர் பேசுவது, சாப்பிடுவது, நடப்பது போல காட்சிகளை படம் எடுத்து வந்து அதை ஒரு காணொளியாக உருவாக்கினார்.

அந்தக் காணொளிக்கு பின்னணி வசனம் எழுதி குரல் கொடுத்தவர் வலம்புரிஜான்தான்.
வலம்புரிஜான் சொல்லச் சொல்ல நான் பேப்பரில் எழுதினேன். பிறகு செவன்த் சேனல் நாராயணன் ஸ்டுடியோவிற்கு சென்று நள்ளிரவில் டப்பிங் செய்யப்பட்டது.

பிறகு அந்தக் குறுந்தகடு பட்டித் தொட்டி எங்கும் போட்டு காண்பிக்கப்பட்டது.
மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்தார்.

அதற்கு பக்கத்துணையாக இருந்தது வலம்புரி ஜானின் எழுத்தும் பேச்சும் என்று சொன்னால் மிகையில்லை.

வலம்புரி ஜான்

இப்படி தொட்டதெல்லாம் துலங்கும் இடத்தில் இருந்த வலம்புரிஜான் இந்த பொருளாதாரச் சூழலும் சினிமாவும் தான் கலக்கமடைய வைத்தது.

புரட்சித் தலைவரின் பத்திரிகை தான் ‘தாய்’ இதழ் என்றாலும் அந்த நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் அப்பு என்கிற ரவீந்திரன். மிகவும் அன்பானவர், பண்பானவர்.

அலுவலகத்திற்கு வந்ததும் நேராக ஆசிரியர் அறைக்குச் சென்று பேசி விட்டுச் செல்வார். செல்லும்போது எல்லோரையும் நலம் விசாரித்து விட்டுச் செல்வது வழக்கம்.

இதெல்லாம் புரூக்ளின் மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் செல்வதற்கு முன்பு.

பிற்பாடு தான் பல பிரச்சனைகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர் அவர்கள் தாய் அலுவலகத்திற்கு வந்து மாடி அறையில் அமர்ந்து பேசினார். அப்போது வலம்புரிஜான், ரவீந்திரன், ஜானகி அம்மையார் உடன் வந்திருந்தனர்.

அந்தப் பேச்சுக்குப் பிறகு ‘தாய்’ அலுவலகம் வேறு இடத்தில் மாறியது.

இந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கு சரியாக சன்மானம் சென்றடைவது இல்லை என்று புகார் இருந்தது.

குறிப்பாக, பாலகுமாரன் தான் எழுதிய தொடருக்கு பணம் வரவில்லை என்று கேட்டுப் பார்த்தார். இல்லை என்றதும் நேரடியாகப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதிவிட்டார்.

பிறகு பாலகுமாரனுக்கு பணம் கிடைத்தது.

அந்த சமயத்தில் எழுதுவதில் சுஜாதாவைப் போன்று நன்மதிப்பு பெற்ற எழுத்தாளர் அமுதவன் பெங்களூரிலிருந்து எழுதிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் பணம் சரிவர வரவில்லை என்றதும் நீங்களும் எம்.ஜி.ஆரிடம் புகார் செய்யுங்கள் என்று யாரோ சொன்னதை அவர் என்னிடம் தெரிவித்தார்.

அவர் சமீபத்தில் எனக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் அனுப்பினார். அதை இங்கு தருகிறேன்.

“சென்னை வரும்போதெல்லாம் வலம்புரிஜானை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். தாய் அலுவலகத்தில் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அலுவலகத்தில் நுழையும்போது பிரதானமாக நக்கீரன் கோபால் அமர்ந்திருப்பார்.

வலம்புரி ஜான் வரும்வரைக்கும் அவருடனோ அல்லது ராசி அழகப்பனிடமோ பேசிக் கொண்டிருப்பேன்.

ராசி அழகப்பன் அப்போதுதான் கவிஞர் வைரமுத்துவிடமிருந்து வந்து தாயில் சேர்ந்திருந்தார்.

தாயில் சேருவதற்கு வந்தவரிடம் ஒரு அற்புதமான வலம்புரியாரைப் பற்றிய தகவல் இருந்தது.

அந்தச் செய்தியைக் கேட்டபிறகு வலம்புரியாரைப் பற்றிய என்னுடைய எண்ணம் உயர்ந்தது.

ஒருமுறை பெங்களூர் ஐ.டி.ஐ தமிழ் மன்றத்தில் வலம்புரியாரை பேசுவற்கு அழைத்திருந்தார்கள். கூடப்பேசியவன் நான்தான்.

பேச்சு முடிந்தவுடன் “நீங்கள் எங்கே இறங்க வேண்டுமோ சொல்லுங்கள். அங்கே கொண்டுவந்து இறக்குகிறேன்” என்று சொல்லி காரில் டிராப் கொடுத்தார்.

அந்த சமயத்தில் “எப்போது பெங்களூர் வந்தாலும் கார்ப்பரேஷன் பின்புறமிருக்கும் ஓட்டல் ஜியோவில்தான் தங்குவேன். அங்கே நீங்கள் வந்து என்னைப் பார்க்கலாம்” என்றார்.

எம்.ஜி.ஆரிடம் அவர் அளவற்ற மரியாதை வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் “எம்.ஜி.ஆர். அழுத்தம் தந்து தனி ஈழம் அமைத்துக் கொடுக்க முடியாதா?” என்று கேட்டேன்.

“இன்னும் அவரை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இப்போது அவர் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார். சக அமைச்சர்கள் அத்தனைப் பேரையும் கருப்புச் சட்டை அணியச் செய்திருக்கிறார்.

உங்களுக்குத் தெரிந்து யாராவது மாநிலத்தின் முதல்வர்கள் கருப்புச் சட்டை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? அதிமுகவின் சகல தலைவர்களும் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார்கள். (அப்போது வலம்புரி ஜானும் கருப்புச் சட்டைதான் அணிந்திருந்தார்). இதற்குமேல் என்ன அழுத்தம் தரவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

என்னைப் பற்றி வலம்புரி ஜான் எழுதியிருந்த வரிகள் மிகவும் அற்புதமானவை. இரவில் பூக்கும் நிஷாகந்திப் பூக்களூக்கு என்னுடைய எழுத்துக்களை ஒப்பிட்டிருந்தார்.

‘சுஜாதா சுட்டிக்காட்டிய எழுத்து விரல்களுக்கு சொந்தக்காரர் இவர்’ என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

அந்தப் பகுதியை நான் அகிலன் கண்ணன் வெளியிட்ட என்னுடைய புத்தகத்தின் பின் அட்டையில் பதித்துக் கொண்டேன்.

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசுவதற்கு வலம்புரியாரை அழைத்திருந்தார்கள். அன்றைக்கு வலம்புரியாரும் நித்தியானந்தாவும் மட்டுமே மேடையில்.

அவர் மேடைவரை நடந்து செல்வார் என்று தோன்றவில்லை. அதனால் அவரைப் பிடித்து கைத்தாங்கலாக மேடைவரை அழைத்துச் சென்று உட்காரவைத்துவிட்டு வந்தேன்.

அவர் அன்றைக்கு என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? பத்து நாட்களாக பெங்களூரில்தான் இருக்கிறேன். உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்” என்பதுவே.

பேசி முடித்தவுடன் அவரால் இறங்கிவர முடியாது என்று தோன்றியதால் மேடைக்குச் சென்று அவரைக் கூட்டிவந்தேன்.

அன்றைக்கு இரவே சென்னை செல்வதாகச் சொன்னார். புதன்கிழமை திரும்பிவரப் போவதாகவும், புதன்கிழமையன்று சந்திக்கலாமென்றும் சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு அவர் பெங்களூர் வரவே இல்லை. சென்னையிலேயே மறைந்துவிட்டார்.”
இது அமுதவன் அவர்களின் எண்ணப் பதிவு.

அமுதவன்

புரட்சித் தலைவர் விசாரித்த சூழல் சம்பளம் கொடுப்பது கொஞ்சம் காலதாமதம் ஆவதும், பத்திரிகை குறித்த நேரத்தில் வருவதற்கு சிரமப்படும் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது.

தாய் வார இதழ் அப்போது மிகவும் பளபளப்பாக அழகான அச்சில் வந்து எல்லோரையும் கவர்ந்தது.

அந்த கவர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் தராசு ஷியாம், ராபின்.

அப்போது அவர்கள் தான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மதி நுட்பம், துணிவு கொண்ட ஷியாம் அவர்கள் பிற்பாடு திரைச்சுவை, தராசு போன்ற பத்திரிகைகளை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு வலம்புரிஜான் நட்பு ஒரு காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

அதன் பிறகு ‘தாய்’ பிரபு கூட வெளியே வந்து விட்டார். குடந்தை கீதப்பிரியன் 87 வாக்கில் சேர்ந்து மிக முக்கிய பொறுப்பில் பார்த்துக் கொண்டார்.

பிறகு ‘ராஜரிஷி’ என்ற அரசியல் பத்திரிகை அவர் நடத்த ஆரம்பித்தார். அது மிகப் பெரிய வீச்சைக் கொடுக்கவில்லை என்றாலும் மன ஆறுதலுக்காக நடந்தது என்பதுதான் உண்மை.

எண்பதுகளில் மாத நாவல்கள் அதிகம் வந்து கொண்டிருந்தன. எனவே தானும் மாத இதழ் கொண்டுவர அவர் எண்ணினார்.

தாய் பிரபு ஆசிரியராக, மார்ஷல் முருகன் பதிப்பாளராக மெட்டி இதழ் வந்தது. அதை வலம்புரிஜான் கேட்டதும் உடனே ஒன்றும் சொல்லாமல் உடனே தந்து விட்டார்கள்.

மெட்டி நன்றாகப் போனது. தேடி வந்தவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்தார். அப்படித்தான் ஒரு சம்பவம்.

இப்பொழுது குமுதத்தில் அடிக்கடி வசந்தகுமாரன் கவதை வருகிறது. அவருக்கு தொடர்ந்து ஆறு வாரம் இரண்டு பக்கங்கள் கொடுத்து தாய் வார இதழில் எழுத வைத்தார்.

புதுக்கவிதைகளைத் தாங்கிப் பிடித்த அதே மனம் தான் மரபுகளையும் விட்டுவிடாமல் உயர்த்திக் காண்பித்தது.

பின்னாளில் மரபுக் கவிதை எழுதிக்கொண்டிருந்த இளந்தேவனை தொடர்ந்து தாய் அடையாளப்படுத்தி, செல்வி ஜெயலலிதா முதல்வர் ஆன பின்பு உதவியாக வைத்துக் கொண்டதற்கு மூலகாரணம் வலம்புரிஜான் தான்.

‘சாவி’ வார இதழில் பாரதியார் வாழ்க்கையை வைரமுத்து ‘கவிராஜன் கதை’யாக புதுக்கவிதையில் எழுதியபோது, கவிவேந்தர் மு.மேத்தா அவர்களுக்கு ‘தாய்’ இதழில் மேடை போட்டுக் கொடுத்து அழகு பார்த்தது வலம்புரிஜான் தான்.

அண்ணா, எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த கவிஞர் மணிமொழியையும் தாய் வார இதழில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தார்.

மு.மேத்தா சொன்னார் என்பதற்காகவே ஜமால் என்கிற இளைஞரை வெற்றியாளனாக மாற்றினார்.

மாற்றங்கள் நிறைய என்றாலும் அவர் தொடர்ந்து தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பாதை என்ன என்று அடுத்து பார்க்கலாம்.

(தொடரும்…)

28.01.2022 12 : 30 P.M

You might also like