– அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு காரணம் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் திருக்காட்டுப் பள்ளியில் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த மாணவியின் இறப்புக்கு காரணம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக முதற்கட்டமாக விடுதிக் காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடக்கிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாணவியின் தற்கொலை சம்பவம் வருத்தத்துக்கு உரியது. இது பெரிய சோகமான விஷயம்.
அதே நேரத்தில் சில அமைப்புகள் இது குறித்து முறையான விசாரணை அறிக்கை வராத நிலையில் தவறாக சித்தரிக்க வேண்டாம். அரசியலாக்க வேண்டாம். குழந்தைகளிடம் விசாரணை நடத்தியது தவறு. அதை சம்பந்தப்பட்ட துறைதான் செய்ய வேண்டும்.
அதற்கு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறையினர் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இது குறித்து தீர விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதில் உண்மைத் தன்மை எதுவாக இருந்தாலும், முதல்வர் பாரபட்சம் பார்க்காமல் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார். இது குறித்து விசாரிக்க துறை ரீதியாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அன்பில் மகேஷ், “தற்போது, ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதம் இந்த தேர்வு நடத்த ஆலோசித்து வருகிறோம்” எனக் கூறினார்.