பெரியார் தமிழர் இல்லை என்றால் யார் தமிழர்?

● தமிழக வரலாற்றில் இருவர் மட்டும் தான் – சமுதாய சுய சிந்தனையாளர்களாக – தனித்து சிந்தித்து அவைகளை தனித்துவமாய் தெரிவித்தவர்கள்! அவர்கள் ஒரிஜினல்கள்! காப்பியடிக்க முடியாத சூரியன்கள்! ஒருவர் திருவள்ளுவர்! மற்றொருவர் பெரியார்!

இந்த இருவரையும், ஆரிய, பார்ப்பன, ஆதிக்க சக்திகள் வெல்வதற்கு இரண்டு வகையான சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்கள்!

● திருவள்ளுவரை – தங்களவராக்க அவருக்கு பூணூல் அணிவித்தும், காவியுடை அணிவித்தும், வேதங்களில் உள்ளதை எடுத்தெழுதினார் எனப் பொய்யுரைத்து, அந்த தமிழரை – ஆரியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள்!

● பெரியாரை – வேற்றுவராக்க அவரை அவமானப்படுத்தியும், சிலைகளில் காவி சாயம் பூசியும், அவதூறாக பேசியும், பொய்யுரைத்து, அந்த தமிழரை – அந்நியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள்!

● பெரியாரை அவமதிக்கும் வீணர்களுக்கு, வெறும் பதில் சொல்லி விலகிப் போகக் கூடாது, அவர்களுக்கு பதிலடியும் படிப்பினையும் தரவேண்டும் என்ற நோக்கில், ஏறத்தாழ 20 ஆண்டுகள் தொடர் உழைப்பாலும், அயராத முயற்சியாலும், நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான குடிஅரசு, விடுதலை இதழ்களிலிருந்து தகவல்களை அள்ளியெடுத்து – இந்த நூலைப் படைத்துள்ளார்!

● உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு ஏதுவாக சமர்ப்பிக்கப்படும் – பதில் மனுவாகவும்,
உச்சிக் குடும்பி வாரிசுகள் போற்றும் மநுவுக்கு – பதிலாகவும் இந்த நூலைப் படைத்துள்ளார் – ப.திருமாவேலன்.

● பெரியாரின் போர்வாளாக, பெரியாரின் தொண்டராக, பெரியாரின் வாரிசாக தனது கடமையை மிகச் சிறப்பாக செய்துள்ளார் திருமாவேலன். சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் இதைப் படித்தறியும் போது, பெரியாரின் உயரம் இன்னமும் அதிகமாகி விட்டதை உணருவார்கள் !
வரலாற்று வீரரை யாரென்று காட்டும் வரலாற்றுப் படைப்பு!

● “இந்தியை எதிர்த்த பலரோ – சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லை! சமூகநீதியை ஆதரித்த பலரோ – ஆரிய பார்ப்பனர்களின் அடாவடியை கண்டிக்கவில்லை! தமிழக எல்லைக்காக போராடிய பலரோ – வடவர், பனியா, மார்வாடி ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை! இம்மூன்றையும் ஒன்றாய் செய்த ஒரே தலைவர் – தந்தை பெரியார்!” .. என்று நூலின் துவத்திலேயே பெரியார் எப்படிப்பட்ட ‘தமிழர்’ என அடையாளம் காட்டுகிறார் திருமாவேலன்.

●’பெரியார் போற்றிய பெரும் புலவர்கள்’ என்ற தலைப்பின் கீழ் 90 புலவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த தலைப்பு மட்டுமே தனியாக ஒரு நூலாக அமைவதற்கு வேண்டிய அளவு அரிய செய்திகளை கொண்டதாக உள்ளது. பெரியார் பற்றி பெரும்புலவர்கள் சிலரின் பார்வைகள் –

1) பெரியார் தமிழ் நாட்டில், எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி – வ.உ.சி.

2) தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக தம் உடல், பொருள், ஆவியை எந்த கைம்மாறு கருதாது தந்தவர் இராமசாமி பெரியார் – மறைமலையடிகள்.

3) காந்தியை மிஞ்சிய அகிம்சாவாதியாகவும், சாக்ரடீஸையும் மிஞ்சிய சமுதாய சீர்த்திருத்தகாரராகவும் பெரியார் விளங்குகிறார் – திரு.வி.க.

4) தமிழுக்கு ஆபத்து வரும் போதெல்லாம், முன்னோடியாக நின்று அவ்வின்னலை, நீக்குதல் பெரியாரது இயல்பு – மா. இராசமாணிக்கனார்.

5) தொண்டு செய்து பழுத்த பழம் | தூய தாடி மார்பில் விழும் | மண்டை சுரப்பை உலகு தொழும் | மனக் குகையில் சிறுத்தை எழும் | அவர் தாம் பெரியார் ! – பாரதிதாசன்.

6) வள்ளுவர் வாக்கைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே – கி. ஆ. பெ. விசுவநாதம்.

7) லெனின் சொல்கிறார் – மக்களுடைய இதயத்துடிப்பை நேரிடையாக தேடிப்பிடித்து, எவன் தெரிந்து கொள்கிறானோ, அவன் உண்மையான கம்யூனிஸ்ட். அதுபோலவே பெரியாரும் மக்களின் போக்கை படித்து, அவர்களை முன்னுக்கு கொண்டு வர பாடுபடுபவர் – ப. ஜீவானந்தம்.

8) பழமையான மூடப்பழக்க வழக்கத்தில் பாழ்பட்ட நெஞ்சர்க்குப் புரியார் | படித்துணர்ந்து, பகுத்தறிவு கட்சி தன்னைப் பரவச் செய்து வரும் நெறியார் | இழிவை நீக்கும் ஈ. வெ. ராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப் பெரியார்! – உடுமலை நாராயண கவி.

9) வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும் | வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை | ஆன்றவிந்த பெரியார்க்குப் பெரியார் எங்கள் அய்யாவுக்கிணை அவரே மற்றோர் இல்லை! – கண்ணதாசன்.

10) தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார்! இதுதான் இவரை மறைமலையடிகள் போன்ற வலதுசாரி தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது! – கவிஞர் இன்குலாப்.

● இத்தனை பெரும் புலவர்களால் பாராட்டுப் பெற்ற பெரியார் தமிழர் இல்லை என்றால் – வேறு எவர் தான் தமிழராம்?

● பெரியாரை தமிழுக்கு எதிரியாகவும், தமிழர்க்கும் எதிரியாகவும் கட்டமைத்து அவதூறு செய்யும் சாலையோர வேலையற்றதுகளுக்கும், பெரியாரை அவமதிக்கும் கோணல் புத்திகாரர்களுக்காக –

இதோ ஒரு பட்டியல்:
கண்ணை திறந்து படிக்கட்டும் . அறிவுக் கண்ணும் திறக்கட்டும்!

1) 1926 – இந்தி வருவதே தமிழர்க்கு துரோகம் செய்யத்தான் என எச்சரித்தார்.

2) 1926 – வடமொழிக் கலப்பில்லாத தனிச் செந்தமிழ் இனிக்கும் என்றார்.

3) 1927 – சமஸ்கிருதம் நீக்கிய தமிழர் திருமண முறையை வலியுறுத்தினார்.

4) 1929 – தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென உணர்த்தினார்.

5) 1931 – தமிழ் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என வேண்டினார்.

6) 1938 – இந்திப் போர் என்பது தமிழுக்காக, தமிழர் தன்மானத்திற்காக என அறைகூவல் விட்டார்.

7) 1938 – தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கினார்.

8) 1941 – தமிழ் நாட்டு மேடைகளில், தமிழிசை பாடப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

9) 1941 – கல்வி திட்டத்தில் தாய் மொழியும், பொது மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டால் போதும் என்றார்.

10) 1945 – தமிழ் மொழி உணர்ச்சி தான், தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் என கணித்தார்.

11) 1947 – தமிழர் விழாவாக பொங்கலை கொண்டாட வேண்டும் என முதலில் அறிக்கை விட்டார்.

12) 1952 – தாய் மொழியில் அனைத்தும் மொழிபெயர்க்க வேண்டுமென தலையங்கம் தீட்டினார்.

13) 1952 – நீதிமன்றங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

14) 1954 – ‘ஶ்ரீ’ என்று எழுதாதே, ‘திரு’ என்று எழுது என அறிவுறுத்தினார்.

15) 1955 – மக்கள் மொழியை விட்டு, வேறு மொழி மூலம் ஆட்சியை நடத்துகிற ஒரே நாடு – உலகத்திலேயே தமிழ்நாடு தான் என வருந்தினார்.

16) 1955 – தமிழ் நாட்டுக் கடவுளுக்கு தமிழ் புரியாதா? என கேள்வி கேட்டார்.

17) 1955 – தமிழில் கல்லூரிப் படிப்பை தொடங்க வேண்டும் என ஆரம்பித்தார்.

18) 1956 – தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19) 1956 – விஞ்ஞான நூல்களையெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாக குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

20) 1960 – தாய் திருநாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயரில்லையே என கோபப்பட்டார்.

21) 1964 – தமிழ் முன்னேற்றமடைந்து, உலக வரிசையில் வரவேண்டும் என்றால், தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார்.

22) 1965 – கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் என கோரினார்.

23) 1966 – ஜனநாயகம் என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழிதான் ‘ குடிஅரசு ‘ . அப்படித்தான் எனது இதழுக்கு பெயர் சூட்டினேன் என விளக்கினார்.

24) 1967 – நம்மை தமிழும் இந்தியும் படிக்க செய்து விட்டு, பார்ப்பானும் பணக்காரனும் ஆங்கிலம் படித்து, பதவிக்கு போய் விடுவார்கள் என எச்சரித்தார்.

25) 1972 – ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலும், தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை என வகுப்பெடுத்தார்.

● “தமிழன் பிரார்த்தனை செய்யும் கோயில்கள் ஒன்றிலாவது, தமிழனுக்கு மரியாதை கிடையாது” என தமிழர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு பேசியவர் – பெரியார்.

● “சரித்திரம் எழுதுபவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், தமிழர்களின் சரித்திரத்தை மறைத்து விட்டார்கள்!” என தமிழர்களின் வரலாற்று மீதும் அக்கறை கொண்டு பேசியவர் – பெரியார்.

● இப்போது சொல்லுங்கள்!
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?.. நூலை படித்த பின்பு, நீங்களும் அந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள்!
இதைப் படைத்த ப. திருமாவேலனுக்கு பெரியாரியவாதிகள் மட்டுமல்ல, தமிழினமே வாழ்த்த கடமைப்பட்டுள்ளது!
தோழருக்கு வாழ்த்துகள்!!

****

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 1)
– ப.திருமாவேலன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் 816
விலை இரு தொகுதிகளும் சேர்த்து ரூ.1800/

-பொ. நாகராஜன். சென்னை.

You might also like