– மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து மாநிலங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘பட்டினிச் சாவு தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை கடந்த மாதம் 31-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.
அதை பார்த்ததாக கூறிய தலைமை நீதிபதி ரமணா, ‘அதில், பட்டினி சாவு குறித்து எந்த விவரங்களும் இல்லை. அப்படி என்றால், நாட்டில் பட்டினி சாவே இல்லையா?,’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்,
“தமிழகத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக செய்தித்தாள்களில் வெளியானது. அது மட்டும்தான் தற்போதையை பட்டினிச் சாவு பதிவாக உள்ளது. சிறுவனின் உடற்கூறு ஆய்வறிக்கையில், உணவு குடலில் எந்த உணவும் இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது.
அதனால், அதை பட்டினிச் சாவு என்று எப்படி கருத முடியும்?
இதைத் தவிர யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் அளவு சீனாவை விட இந்தியாவில் 5 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசு 130-க்கும் அதிகமான உணவு சம்பந்தமான திட்டங்களில் ஏராளமான நிதியை செலவு செய்து வருகிறது. 22 மாநிலங்களுடன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், சமுதாய சமத்துவ உணவகங்களை நடத்தி வருகின்றன. அவற்றுக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்குகிறது.
பட்டினிச் சாவுகளை தவிர்க்கும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் 2 சதவீதம் கூடுதல் உணவு தானியங்களை வழங்கலாம். இதில் உள்ள பிரச்சனைகள், உள்கட்டமைப்பை எப்படி அமைக்க வேண்டும் என்பதை மாநிலங்கள் முதலில் கண்டறிய வேண்டும்.
அதன்படி, அனைத்து மாநிலங்களும் தங்களின் விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யட்டும்” எனக் கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆசிமா மண்ட்லா, ‘‘ஊட்டச்சத்து பிரச்சனை எப்போதும் இருக்கும். பிரேத பரிசோதனை நடத்தினால் மட்டுமே பட்டினி சாவை உறுதிப்படுத்தப்படும்.
இந்த விவகாரத்தில் தன்னதிகாரம் படைத்த குழுவை அமைத்து, பொதுவான திட்டத்தை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
அதன்பின், தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தை ஒன்றிய அரசு பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
பட்டினிச்சாவு, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக இன்னும் சில முக்கியமான தரவுகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மேலும், நாட்டில் பட்டினி சாவே கிடையாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஆனால், 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தேவைப்படுகிறது. அதை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து பெற்று ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளும் கூடுதல் ஆவணங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்து வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.