கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது ‘விக்ரம்’ படம் பற்றிய புதிய அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கமலின் ராஜ்கமல் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 51-வது படம்.

இதை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் மற்றும் காட் பிளஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ’ரங்கூன்’ படத்தை இயக்கியவர்.

பிருத்விராஜ் நடித்த ‘நைன்’ என்ற மலையாளப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த சோனி பிக்சர்ஸ், தெலுங்கில் ‘மேஜர்’ படம் மூலம் அறிமுகமாகி உள்ளது. இப்போது கமல், சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசிய கமல்ஹாசன், ‘‘ஒரு சிறந்த திரைப்படம், ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பதில் பெருமையடைகிறேன்’’ எனக் கூறினார்.

You might also like