பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமம், நகரம் என எல்லாத் தெருக்களிலும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தி, அவர்களால் முடிந்த அளவு இனிப்புகளையும், அன்னதானம் வழங்கியும் எம்.ஜி.ஆர் மீதான தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவில்லத்திற்குச் சென்ற திருமதி வி.கே.சசிகலா அவர்கள் அங்குள்ள பொன்மனச் செம்மலின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், கழகத் தொண்டர்களின் துணையோடும் தமிழக மக்களின் பேராதரவோடும் புரட்சித் தலைவர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிச்சயம் கொண்டு வருவேன் என திடமாகக் கூறினார்.
இதேபோல், எம்.ஜி.ஆரின் உறவினரும், டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்கள் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பொன்மனச் செம்மலின் திருவுருவப் படத்திற்கு பொதுமக்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.