நடிகர்களாக சினிமாவில் தடம் பதிப்போர், அந்தத் தளத்திலேயே தேங்கி விடுவார்கள். சிலர் மட்டும் தயாரிப்பாளர்களாக அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஹீரோக்கள் மட்டுமே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தங்களை வெளிப்படுத்தி –
திரி இன் ஒன் ஆக விளங்குவார்கள்.
அப்படி ‘திரி இன் ஒன்’ பார்முலாவில் பெரும் வெற்றி பெற்ற 4 பேர் பற்றிய ஒரு தொகுப்பு.
எம்.ஜி.ஆர்.
ஹீரோ – இயக்கம் – தயாரிப்பு எனும் மூன்று குதிரைகளில் ஒரு சேர சவாரி செய்யும் சாகச பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் எம்.ஜி.ஆர்.
நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்த எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்‘, ‘அடிமைப்பெண்‘ ஆகிய படங்களில் நடித்ததோடு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் நிரூபித்தார்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்தார்.
(கொசுறு: இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது சுவரொட்டி ஒட்ட தனி வரி போட்டது அப்போதைய திமுக அரசு. தமிழகத்தில் எந்த இடத்திலும் போஸ்டர்கள் ஒட்டாமல் ரிலீஸ் ஆகி வெள்ளிவிழா கண்டது ‘உலகம் சுற்றும் வாலிபன்’)
கே.பாக்யராஜ்
எம்.ஜி.ஆருக்கு பிறகு திரி இன் ஒன் பார்முலாவில் ஜெயித்த ஹீரோ பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக உயர்த்தினார் பாரதிராஜா.
‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ச்சியாக மற்ற தயாரிப்பாளர்கள் படத்திலேயே நடித்தார். இயக்கினார்.
‘முந்தானை முடிச்சு’ வெற்றிக்கு பிறகு பெரும்பாலும் சொந்தப் படங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அவர் நடித்து, இயக்கி, தயாரித்த ‘தாவணிக் கனவுகள்’ படம் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரமான முதல் தமிழ் படம் எனும் பெருமையைப் பெற்றது.
(கொசுறு: ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ என இவர் கடைசியாக தயாரித்த பங்கள் படுதோல்வி அடைந்து பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியதால் அதன்பின், படங்கள் தயாரிக்கவில்லை)
டி.ராஜேந்தர்
‘ஒரு தலை ராகம்’, இவர் இயக்கிய முதல் படம். ஆனால் டைட்டிலில் இவர் பெயர் வராது.
இரண்டாவதாக இயக்கிய ‘ரயில் பயணங்களில்’ படத்தில் தான் இயக்கம் – டி.ராஜேந்தர் எனும் டைட்டில் வந்தது.
ரஜினி, கமல் கோலேச்சிய காலத்தில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை என பல தளங்களில் இயங்கியவர். இவரது கடைசி தயாரிப்புப் படங்கள் சரியாக போகவில்லை.
(கொசுறு: இவரது ‘மைதிலி என் காதலி’ படத்துக்கு கலைஞர் கருணாநிதி முரசொலியில் விமர்சனம் எழுதியுள்ளார்.)
ராஜ்கிரண்
விநியோகஸ்தராக கோடம்பாக்கத்தில் பயணத்தை ஆரம்பித்தவர் ராஜ்கிரண். நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு 1988-ல் தயாரிப்பாளராக உருவெடுத்தார். முதல் படம் – ‘ராசாவே உன்ன நம்பி’.
1989 ஆம் ஆண்டு ‘என்ன பெத்த ராசா’. 91 ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா இயக்குநராக அறிமுகமான படம் ‘என் ராசாவின் மனசிலே’ தான். மீனாவின் சினிமா வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த படம்.
ஹீரோ – இயக்கம் – தயாரிப்பு என முதன் முறையாய் ராஜ்கிரண் மூன்றுமுகம் காட்டிய படம் – ‘அரண்மனைக் கிளி’.
(கொசுறு: ஒருமுறை இளையராஜா, இவரிடம். “ஹீரோ ஆயிட்டிங்க இன்னும் வேட்டியிலேயே இருந்தா எப்படி?’’ என கேட்டுள்ளார். “எல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்குத்தான்” – இது ராஜ்கிரண் பதில். “ஆத்மாவுக்கு ஏதாப்பா திருப்தி?” என ராஜா சிரித்துக்கொண்டே கிண்டல் அடித்தார்.)
– பி.எம்.எம்.