நோபல் பரிசு நாயகருடனான எனது அனுபவங்கள்!

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான மறைந்த ஜே.பால்பாஸ்கர் எழுதிய அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு

*****

1991-ல் முதல்முறையாக அதுவும் அந்நிய ஆசிய நாடொன்றில் சந்தித்தபோது உள் மனது சொன்னது, “இந்த மனிதன் மாபெரும் தலைவன்” என்று.

தலைவா்களுக்கென்றே உள்ள இலக்கணங்களை நாம் அறிந்தவரை, புத்தகங்கள் சொன்னதுவரை பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு சமூக செயல்பாட்டாளனுக்கு உரிய எளிமையோடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளா்முறை அகற்றல் குறித்த ஆசிய மாநாட்டில் பார்த்தபோது நம்முடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் இவா் சகபோராளி மட்டுமல்ல, ஒரு கூடுதலான வழிகாட்டி என்றே மனம் ஏற்றது.

அவருடைய இணைபிரியா தோழனாக வந்தவா் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் பாகிஸ்தானின் குழந்தை உரிமைப் போராளியாக இருந்து, பின்நாளில் இந்திய ஏஜெண்ட் என்ற பட்டத்தோடு அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அசன் உல்லாகான்.

மூன்றாம் நபராக நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். பரப்புரையிலும், களப்பணியிலும் இணைந்து கொள்ள முன்வரும்போது நான் தென்தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைத் தொழில்முறையை எதிர்த்த பரப்புரையிலும், திண்டுக்கல் நகா்ப்பகுதிகளில் தோலாலை, பஞ்சாலை குழந்தை தொழில் முறையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தேன்.

களப்பணி செய்தும் குழந்தைகளை வேலை பார்ப்பதிலிருந்து அகற்றிட பணி செய்த நிலையில் கைலாஷ் சத்தியார்த்தியுடன் ஏற்பட்ட தொடர்பு எனது தளத்தை அகில இந்திய அளவில் பரவலாக்கிடச் செய்தது.

குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கு அவா் ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தினார். ஆங்கில-இந்தி நாளேடுகள், தொலைக்காட்சிகள் மூலம் தொடர்ந்து செய்தி கொடுத்துக் கொண்டே இருந்தார். கட்டுரைகள், பேட்டிகள் என்று எப்போதும் பரபரப்பாக, டெல்லி அரசியல்வாதிகள் கோபப்படும் அளவிற்கு செயல்பட்டார்.

தமிழகத்திலும் சிறுவர்கள் ஏதாவது ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். கல்விக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது.

இந்த இடைவெளியைத் தீவிரமாக உணர்த்தியது, 80-களில் சிவகாசியில் நடந்த கோர விபத்தும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு குழந்தைகளையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டு போன ஒரு பேருந்து விபத்துக்குள்ளானதும்.

அந்தப் பேருந்து பாலத்தைக் கடக்க முயன்றபோது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கடக்க முயன்ற பேருந்தும் வெள்ளத்தின் வேகம் தாங்காமல் அடித்துச் செல்லப்பட்டது.

அதில் பல குழந்தைகளின் உயிர் பறிபோனது; பலருக்குப் பாதிப்பு.

உடனே நானும் PUCL சார்பாக வழக்கறிஞரான ராஜகோபால், ‘சோகோ’ அறக்கட்டளையின் மகபூப் பாட்சா போன்ற நண்பர்களுடன் சிவகாசிக்குப் போய் அங்கேயே தங்கிப் பல கிராமங்களுக்குச் சென்றோம்.

அதிகாலையில் தொழிற்சாலைகளுக்குப் போய் வேலை பார்த்து விட்டு இருட்டுகிற நேரத்தில் வீடு திரும்புகிற குழந்தைகளின் இயந்திர கதியான வாழ்க்கை எங்கள் குழுவினரை அதிர வைத்தது. குழந்தைகளிடம் பேசினோம். அவர்களுக்குப் படிக்க ஆசை. யாருமே வேலைக்குப் போக விரும்புவதாக சொல்லவில்லை.

ஆனால் நடைமுறை வாழ்க்கை அவர்களுடைய குழந்தைத்தனத்தை தொலைத்துத் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் படித்திருந்த கம்யூனிஸப் புத்தகங்கள் அவர்களுடைய வாழ்வின் இழப்பு பற்றிச் சிந்திக்க வைத்தன.

இங்கிலாந்தில் தொழிற்சாலை புகைக் கூண்டுகளைச் சுத்தம் செய்ய வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்கள் குறித்த குறிப்புகள் எனது நினைவுக்கு வந்தன. இந்த உணர்வுதான் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பதற்காகப் பாடுபடுகிற தூண்டுதலை எனக்கு உருவாக்கியது.

இப்படியெல்லாம் எனது எண்ண ஓட்டங்கள் இருந்தபோது இதை எதிர்த்துப் போராட பரந்துபட்ட களம் காணத் துடித்தபோது உற்ற தோழனாக, தலைவனாக வந்து வாய்த்தவா்தான் கைலாஷ் சத்தியார்த்தி.

1993-ல் அமைதி அறக்கட்டளையின் தலைவராக நான் முழுநேரம் பணிபுரியத் தொடங்கியபோது, அரசு ஆசிரியா் பணியை விட்டு விலகி இருந்தேன். டெல்லியில் இருந்தபடி எனது களப்பணிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதற்கு முன்வந்தார் கைலாஷ்.

குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்காக வட இந்தியாவில் தெற்காசிய குழந்தை அடிமைத் தனத்திற்கெதிராக கூட்டமைப்பு (SACCS – South Asian Coalition Against Child Servitude) என்ற பெயரில் சமூக இயக்கத்தை நடத்தி வந்தார் கைலாஷ்.

1993 லிருந்து 2004 வரை அடிக்கடி சந்திக்கும், தொலைபேசியில் உரையாடும் நண்பா்களில் ஒருவரானார். சந்திப்புக்கள் திண்டுக்கல், சென்னை, டெல்லி மற்றும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் கூட்டங்களில் என்று தொடர்ந்தது.

முறையான திட்டமிடல், எடுத்த காரியத்தை இடையூறுகளைக் கண்டு அஞ்சாமல் செய்து முடிக்கும் திட மனப்பான்மை, காலந்தவறாமை, அஞ்சாமை, சினம் தவிர்த்தல், புறம் பேசாமை, கடுஞ்சொல் தவிர்த்தல், பொறாமை தவிர்த்தல், பெரியோரை மதிக்கும் பண்பு, வேலைத்திறன் மேம்பட நவீன கருவிகளைத் தயக்கமின்றி பயன்படுத்துதல் போன்ற சிறப்புக் குணங்கள் கைலாஷிடம் உண்டு. நான் அவற்றை அப்படியே உள் வாங்கியதுண்டு.

புதிய புதிய தொடா்புக் கருவிகளை வாங்கிவந்து நண்பா்களிடம் செயல் விளக்கம் காட்டுவது இவருக்கு அலாதியான பொழுதுபோக்கு.

தொண்டு நிறுவனங்களுக்கிடையே நடக்கும் கூட்டமைப்பு பொறாமைகள், போட்டிகள் பலமுறை இவரையும் எங்களையும் காயப்படுத்தியதுண்டு.

செயல்படுவதைத் தவித்து புறம் பேசுவதை மட்டுமே முழுநேர தொழிலாகக் கொண்ட தலைவா்கள் முளைவிட ஆரம்பித்ததால் நானும்கூட இதுபோன்ற வேறு கூட்டமைப்புகளிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தேன். கைலாஷிடம் கூடுதல் ஈடுபாட்டுடன் சோ்ந்திருந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

சிறிய குடும்பம், ஓரளவு எளிய அணுகுமுறை, தேவைகளில் தன்னிறைவு, நண்பர்களிடத்தில், குடும்பத்தினரிடத்தில் பாச உணர்ச்சி இவற்றைப் கைலாஷிடம் கண்டேன்.

மத்திய பிரதேசத்திலிருந்து அவரது தாயார் தயாரித்து அனுப்புகிற அப்பளத்தைப் பற்றிச் சொல்லும்போது முகம் மலர்ந்து அனுபவித்து பகிர்வார்.

குழந்தைகளின் உரிமைகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் அரசியல் தொடர்புகளும் கைலாஷ்க்கு இருந்தன. வலதுசாரி, இடதுசாரி, சோசலிஸ்ட் எண்ணம்கொண்ட பல தேசிய தலைவர்கள் இவரது நண்பா்கள்.

அந்த விதத்தில் அவா் என் மூலம் தமிழக தலைவர்களைச் சந்தித்து கொடூரமான வடிவிலான குழந்தை உழைப்புக்கு எதிரான ILO 182 சாசனத்திற்கு இந்திய பாராளுமன்றத்தில் ஆதரவு தரக் கோரினோம்.

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவா்களை அவரது டெல்லி இல்லத்திற்கு சென்று இருவரும் சந்தித்தோம். டெல்லி கேரள ஹவுஸின் நீதிபதி வி.ஆா்.கிருஷ்ணய்யரைச் சந்தித்தோம்.

இவா்கள் இருவருமே சுவாமி அக்னிவேசிடம் நெருக்கமான நட்பு பாராட்டியவா்கள். கைலாஷ் பற்றி பரவலாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி என்னிடம் விசாரித்தார்கள். விளம்பரப் பிரியர் என்பதாக அவரைப்பற்றி சொல்லி வைத்திருந்தனர்.

முக்கிய முரண்பாடு அமெரிக்க செனட்டா் டாம்ஹார்கின் முன்வைத்த குழந்தைத் தொழில் முறைக்கு எதிரான ஆவணத்தை முன்னிட்டு சுவாமிஜி பல பிரமுகர்களை கைலாஷ்க்கு எதிராக திருப்பிவந்தார். அவர் விளம்பரம் செய்து வந்தது குழுந்தைகளுக்கான உரிமைக்காகவேயன்றி அவருக்காக அல்ல என்று விளக்கம் கொடுத்தேன்.

ஆனால் நான் சொன்னது சரியென்பது கைலாஷ் நோபல் பரிசு வென்றபோது தமிழக தொலைக்காட்சி ஒன்றின் கருத்தாளர், “இவர் யார் என்றே தெரியவில்லை” என்று சொன்னபோது அவா் தேடிய விளம்பரம் போதவில்லை என்பது புரிந்தது.

அடுத்த முக்கியத் தலைவா் தொழிலாளா் நல அமைச்சா் பி.ஏ.சங்மா பலமுறை தொலைக்காட்சியில், “குழந்தைத் தொழிலாளா் முறையைப் பற்றிக் கூறும் தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரம், இந்தியா பொருளாதார சக்தியாக வலுப்பெறுவதை விரும்பாத சில மேல்நாட்டு சக்திகளின் சதி” என்றார்.

பின்னா் தமிழரான அமைச்சா் அருணாச்சலம். எனக்கு அருணாச்சலம் அவா்களிடம் நல்ல அறிமுகம் இருந்தது.

எனது நண்பா் பா.சுப்பிரமணியன், ஆசிர்வாதம் போன்றவா்கள் தொழிலாளா் துறை அமைச்சருடைய அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தனா். பிரபல கவிஞரான எல்.என்.மிஸ்ரா தொழிலாளா் நலத்துறை செயலாளராக இருந்தார்.

ஜெனிவா ILO மாநாட்டில் பல இந்திய அதிகாரிகள் எங்களிடம் பாராமுகம் காட்டி வந்தனா். ஆனாலும் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜி.கே.மூப்பனார் அவா்களை நாங்கள் இருவரும் சென்னையில் சந்தித்ததில் நல்ல பலன் இருந்தது. அருணாச்சலம் எங்களுக்கு நாளடைவில் நேசக்கரம் நீட்டினார்.

காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் முன்னாள் பேராசிரியா் ரங்கராஜனும் என் மீதும் கைலாஷ் மீதும் இருந்த அன்பினால் அமைச்சரிடம் அடிக்கடி பேசி எங்களது நியாயத்தை புரிய வைத்தார்.

பேராசிரியர் ரங்கராஜன் அமைச்சர் அருணாச்சலம் காந்தி கிராமத்தில் படித்தபோது அவருக்கு ஆசிரியராக இருந்தவர். பணி ஓய்விற்குப்பின் அமைதி அறக்கட்டளையின் ஆலோசகராக இருந்தார். ஆசிரியரின் அழைப்பினால் அமைச்சர் அருணாச்சலம் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளைக்கு வந்தார்.

அத்துடன் ஜனநாயக மாண்புகள் குழிதோண்டிப் புதைக்கப்படும்போது அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சமூக போராளிகளின் செயல்பாடுகளே இந்த நூற்றாண்டின் புதிய அரசியல் வெளிப்பாடாக இருக்கிறது என்று இலண்டன் பாடிஷாப் நிறுவனர் பிரபல போராளியான அனிதா ரோடிக் சொல்வார்.

1998 ஜூன் மாதம் ஜெனிவாவில் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பால் குழந்தைத் தொழிலாளர் குறித்து நடத்தப்பட்ட லாபியில் கைலாஷ்வுடன் கலந்து கொண்டேன். பின்னர் மாபெரும் குழந்தைத் தொழிலாளா் பேரணியும் எங்களில் நடத்தப்பட்டது. ஜெனிவாவின் உடைந்த நாற்காலி சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் எங்களால் மறக்க இயலாது.

1998-99ல் குழந்தை உழைப்புக்கு எதிராக உலகின் கவனத்தைத் திருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ‘குழந்தை உழைப்புக்கு எதிரான உலகப்பயணம்’ என்ற பிரச்சார இயக்கத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளராக பணி செய்தபோது. மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டேன்.

வெற்றிகரமாக நடைபெற்ற இப்பயணத்தின்போது சென்னையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தலைமை அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்கேற்றார். தமிழ் பேசும் நாடுகள் பலவற்றின் அரசு மற்றும் தன்னார்வ பிரதிநிதிகளிடம் பேசுவதில் அவர்களது ஆதரவை திரட்டுவதில் எனது பங்கு இருந்தது.

1999ல் உலக வங்கியானது தெற்காசிய குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து புதுடெல்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன்.

1999ல் கம்போடியாவில் நிலைத்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார். தாய்லாந்தின் பூகெட் நகரில் குழந்தைத் தொழிலாளர், ஆசிய பொருளாதார சிக்கல்கள் குறித்த மாநாட்டில் கைலாஷ் சார்பாக நான் பங்கேற்றேன்.

1999ல் ஜூன் மாதம் ஜெனிவாவில் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு நடத்திய குழந்தைத் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். செப்டம்பர் மாதம் அ.தொ.அமைப்பு ஆசிய அளவிலான தாய்லாந்தில நடத்திய மாநாட்டில் பங்கேற்றார்.

2004-ல் இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் வளரும் நாடுகளின் பிரச்சனைகள் பற்றி நான் சிறப்புரையாற்றினார்.

நெதர்லாந்து சென்று அங்குள்ள குழந்தை தொழிலாளா் இயக்கங்கள், அரசியல் கட்சிகளுடன் சந்தித்து உரையாடினோம்.

நவம்பர் மாதம் இங்கிலாந்தில் அடிமைத்தனத்திற்கு எதிரான அமைப்பு சார்பில் புதிய அனைத்துலகத் தொழிலாளர் சாசனம் பற்றி நடத்திய திட்ட அமர்வில் பங்கேற்றோம்.

இங்கிலாந்து, சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல், தொழிற்சங்க அமைப்புகளுடன் சந்தித்த போதும் குழந்தை உழைப்பைப் பற்றி பேசும்போதும் கைலாஷ் பேரும் சேர்ந்துவரும்.

எட்டாயிரம் குழந்தைகளை ஆபத்தான வேலைகளிலிருந்து மீட்டு மறுபடியும் பள்ளி செல்ல தமிழகத்தில் அமைதி அறக்கட்டளை சார்பில் நாங்கள் ஏற்பாடு செய்தபோது கைலாஷ் 40,000க்கு மேலான குழந்தைகளை தரைவிரிப்பு, கல்லுடைப்பு சுரங்கங்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தார்.

2000 ஜூனில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமூக மாநாட்டின் இரண்டாம் அமர்வில் கைலாஷடன் சேர்ந்து கலந்து கொண்டேன்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் குழந்தைத் தொழிலாளர் மீதான 182-வது உடன்படிக்கையை இந்தியாவில் அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் பணிநிலையை உயர்த்தவும் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீரவும் பாடுபட்டுவருகிறார்.

2006 அக்டோபா் நோபல்பரிசு கைலாஷ்க்கு நெருக்கமாக வந்துவிட்டது என்று நினைத்தோம். அவரது அலுவலகத்தில் அரட்டை அடித்து கொ்ண்டிருந்தபோது சுவீடன் தரப்பினரிடம் வந்த பல உறுதிப்படாத தகவல்கள் நோபல் அங்கிகாரம் நெருங்கிவிட்டது என்று தெரிவித்தது.

மதியம் டெல்லி கல்காஜி தெருக்களில் தொலைக்காட்சி வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. ஆனால் பரிசை சிறு கடன் திட்டத்தின் பிதாமகன் வங்கதேச பேராசிரியா் முகம்மது யூனுஸ் பெற்றார். கைலாஷ் இயல்பாக சொன்னார் பரிசுக்காகவா நாம் பணி செய்தோம் வந்தால் நம்ம சத்தம் பெரிதாக கேட்கும். இல்லாவிட்டால் வழக்கம்போல் என்றார்.

ஆனால் கைலாஷ்க்கு உண்மையில் நோபல் பரிசு கிடைத்தவுடன் எப்படித்தான் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டோம் என்பது தெரியவில்லை. அலைபேசி எண்களை எவரும் மாற்றிவிடவில்லை என்பதும் வியப்பாக இருந்தது.

2004 இறுதியில் ஏற்பட்ட சுனாமி பேரழிலின் போது நாகை மாவட்டத்திற்கு உடன்சென்று களப்பணியாற்றியபோது. நிவாரண உதவிகள் வழங்கப்பட்டபின் குழந்தை உரிமைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஸ்ட்ராஹல்மேன் குழந்தை ஆதரவு மையத்தையும் மனிதிசே இளையோர் விடுதியையும் நாங்கள் நிறுவினோம்.

வீடுகள் கட்டிக்கொடுத்ததுடன் நாகை மாவட்டத்தின் 10 கிராமங்களில் முன்பருவ குழந்தை மையங்களை கட்டி தமிழக அரசிடம் ஒப்படைத்தோம்.

இவை அனைத்திலும் குழந்தை உழைப்பிற்கு எதிரான உலக அமைப்பில் GMACL தார்மீக வழிகாட்டல் இருந்தது. குழந்தைகளைப் பாதுகாப்பதை சுனாமி போன்ற பேரழின்போது கவனமாக கையாண்டோம் நாங்கள்.

2005-ல் பிரேசில் நாட்டின் போர்ட்டோ அலகீரி நகரில் நடைபெற்ற உலக சமூக மன்றத்தில் கலந்துகொண்டு வர்த்தக நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்து என்னுடன் கைலாஷ் உரையாற்றினார். இவருடன் இந்த அரங்கில் இணைந்து கலந்துகொண்ட பேச்சாளர்களில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின் 2014-ல் மார்ச்சில் சுவீடன் சென்றபோது எனது கலைந்தபோன கனவு மீண்டும் தெரிந்ததாக உணர்ந்தேன்.

குழந்தை உழைப்பு அகற்றுதலை அரசு பார்த்துக் கொள்ளும்.

உள்ளுர் அரசாங்க அதிகாரிகளின் எடுபிடியாக மாறி நிலத்தடி நீா் சேமிப்பு, நீா்வடிப் பகுதி திட்டம், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் இப்படி அனைத்துமே அரசு உடைமையாகிப் போனதையும் நான் திசைமாறிப் போனதை உணர்ந்தேன்.

கல்வி நிறுவனங்களை அமைக்க கவனம் தேவைப்பட்டமையாலும். தமிழகத்தில் நாங்களெல்லாம் வேறுதிசையில் பயன்கள் தொடங்கியபோது கைலாஷ் தொடர்ந்து அயராது குரல் கொடுத்ததை வெகுநாள் இடைவெளிக்குப்பின் ஸ்டாக்ஹோம் வட்டாரங்களில் பழைய நண்பர்கள் தெரிவித்தார்கள்.

நோபல்பரிசு பற்றி பேச்சும் அப்போது கேட்க தொடங்கியது. 2013-ல் இந்தியா-ஹாபிட்டப் சென்டரில் பார்த்தபோது வியந்தேன். ஒரு அமர்வுக்கு என்னிடம் தலைமை தாங்க சொன்னார்.

முன்னதாக எதிர்பாராமல் டெல்லி கான்ஸ்டியூன் கிளப்பில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் சென்றபோது அவா் குழுந்தை தொழில்முறைக்கு எதிராக கூட்டத்திற்கு செல்கிறேன் என்றார்.

அவருடன் போய் பார்த்ததில் என் நண்பர் கைலாஷ் தலைமை உரை ஆற்றிக் கொண்டிருந்தார். அப்போதும் பழைய நட்புணர்வோடு ஒரு அமர்வை நீயே தலைதாங்கி நடத்து என்றார்.

“நல்ல தலைவன் தொண்டர்களை உருவாக்குவதில்லை.
அவன் தனக்குப்பிறகு வழிநடத்த
நல்ல தலைவா்களையே உருவாக்குகிறான்” – என்பது கைலாஷுக்கு மிகவும் பொருந்தும்.

11.01.2022  4 : 30 P.M

You might also like