சினிமா உலகை மீண்டும் முடக்கிய கொரோனா!

வெவ்வேறு பெயர்களில் உருமாறி வரும் கொரோனாவின் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை.

இந்தப் பெருந்தொற்று மற்ற தொழில்களைப் போல், சினிமாத் துறையையும் ஒன்றரை ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது.

சில மாதங்களாக சினிமா உலகம் மூச்சு விட்ட நிலையில் புதிய வரவான ஒமிக்ரான் மீண்டும் திணற வைத்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, 50 % இருக்கைகளை மட்டுமே நிரப்பலாம் எனும் உத்தரவால் சினிமா உலகம் இக்கட்டில் தத்தளிக்கிறது.

இந்த உத்தரவால் பொங்கலுக்கு பல்வேறு மொழிகளில் வெளியாக இருந்த படங்கள் பின்வாங்கி விட்டன.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்ட பெரிய படங்களில் பட்டியல்:

             வலிமை
            ஆர் ஆர் ஆர்
            ராதே ஷியாம்
           ஜெர்சி
           பிரிதிவிராஜ்

வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தின் டீம் மீண்டும் இணைந்த படம். அஜீத் ஹீரோவாக நடிக்க வினோத் இயக்க ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்துள்ள படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரும் 13-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. தணிக்கையும் முடிந்து விட்டது.

மற்ற பெரிய படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து வரிசையாக ஜகா வாங்கி கொள்ள – வலிமையை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீருவேன் என உறுதியாக இருந்தார் போனிகபூர். நோய் தொற்றின் வீரியம், அவரையும் பின் வாங்க செய்து விட்டது.

மூன்று மொழிகளில் இதனை ரிலீஸ் செய்ய பெரும் தொகை கொடுத்துள்ள  விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி என்றாலும், கள நிலவரம் சரியாக இல்லாததால், வலிமை படம் தள்ளிவைக்கப்பட்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆர் ஆர் ஆர்

பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் படம் என்பதால் இந்தியா மட்டுமில்லாமல், உலக அளவிலும் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்.

ஜூனியர் என் டி ஆர் – ராம்சரண் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமின்றி மேலும் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆக இருந்தது.

பல்வெறு ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரத்தாகி மீண்டும் தள்ளி வைத்து விட்டார்கள். ராதே ஷியாம்  பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். இம்மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்தனர். மீண்டும் தள்ளிபோய் விட்டது.

ஜெர்சி – பிரிதிவிராஜ்

ஷாகித்கபூர்- மிருனாள் தாகூர் நடித்த இந்திப்படமான ஜெர்சி, மற்றொரு இந்திப்படமான பிரிதிவிராஜும் பின் வாங்கி விட்டன.

ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

பெரிய படங்கள் தள்ளிப்போவதால் விஷாலின் வீரமே வாகை சூடும், சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம், பிரபுதேவாவின் மை டியர் பூதம் ஆகிய தமிழ் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. பிரச்சினை இதோடு முடியப்போவதில்லை.

தொற்று குறைந்த பின் சித்திரையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் வலிமை ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள்.

ஆனால் விஜயின் பீஸ்ட் படமும் அப்போது ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அஜீத் படத்தால் விஜய் பட ரிலீசுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

மீண்டும் எப்போது சகஜநிலை திரும்பும் என்பது புரிபடாத சூழலில், சின்ன படங்கள், பெரிய படங்களுக்கு வலை வீசும் முயற்சியில் ஓடிடி தளங்கள் இறங்கியுள்ளன.

– பி.எம்.எம்

You might also like