உனக்கு நீ தான் நீதிபதி…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
உன் மனச பாத்துக்க நல்லபடி

(உலகம்…) 

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி

(உலகம்…) 

மயிலைப் பார்த்து கரடி என்பான்
மானைப் பார்த்து வேங்கை என்பான்

குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்
அதையும் சில பேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

(உலகம்…) 

கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் அவன் கரை ஏற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தை இல்லை
அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை

(உலகம்…) 

– 1971-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘அருணோதயம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

குரல் – டி.எம்.சௌந்திரராஜன்.  இசை – கே.வி.மகாதேவன்.

You might also like