ஊர்சுற்றிக் குறிப்புகள்:
மீள்பதிவு…
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதலில் ஒரு நாள், பிறகு மூன்று வாரங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே, கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பெருமூச்சுவிட ஆரம்பித்து விட்டார்கள். அதே மன அழுத்தம் அதிகாரிகளிடமும் தெரிந்தது.
அழுத்தங்கள் தலைகள் மாறிக் கீழிறங்கியதில், தொடர்ந்த பணிச்சுமை தாங்காமல் அந்தப் பாரத்தை சாலைகளில் வாகனங்களைக் கடந்தவர்களிடம் காட்டினார்கள். அடித்தார்கள். வாகனங்களைச் சேதப்படுத்தினார்கள்.
தோப்புக் கரணம் போட வைத்தார்கள். லட்சக்கணக்கில் வழக்குப் பதிவு பண்ணினார்கள். வாகனங்களைப் பறிமுதல் செய்தார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்களை நம்மூர் இளைஞர்கள் முகக் கவசங்களுடன் அலைந்து விநியோகிக்க, உள்ளூர்க் கடை வியாபாரிகள் படாதபாடுபட்டார்கள்.
மதுரையில் காவல்துறை தாக்குதலால் இஸ்லாமியப் பெரியவர் உயிரிழந்து போக, காவல்துறையோ மாரடைப்பு என்று சாவகாசமான காரணத்தைச் சொன்னார்கள்.
இறந்து போனவரின் மகன் சென்னையிலிருந்து கெடுபிடிகளை மீறி மதுரைக்குப் போவதற்குள் உயிரிழந்த தகப்பனாரின் அடக்கம் முடிந்திருந்தது.
பெண்கள் ஆயிரம் ரூபாய்க்குக் கூட்டமாய்த் திரண்டிருந்தார்கள். சூழல் அவர்களை முண்டியடிக்க வைத்தது. நிறைய வீடுகளுக்குள் சண்டை, சச்சரவுகள் வெடிக்க, பிள்ளைகள் வேடிக்கை பார்த்தன.
அதிலும் அரசு கஜானாவைத் தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் குடித்தே பழகிப்போன டாஸ்மாக் குடிமகன்கள் பித்துப் பிடித்த மாதிரி ஆனார்கள்.
குடிக்க முடியாத இயலாமையை வீட்டில் காட்ட, பலவீடுகளில் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என சென்னை காவல்துறை அதிகாரியே புகார் சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது.
பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியாதவர்கள் வார்னீஷையும், ஷேவிங் லோஷனையும் குடித்து உயிரை விட்டார்கள்.
குடி குடியைக் கெடுக்கும் என்கிற லேபிளின் கீழ் கடைகளைத் திறந்து, பட்ஜெட்டில் டாஸ்மாக் வருமானத்தைக் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மதுவுக்கு அடிமையானவர்கள் நிவாரணத்திற்காகச் சிகிச்சை மையங்களுக்குப் போகலாம் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து, மெட்ரோ வேலைகளையும், கட்டுமானப் பணிகளையும் செய்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஊர் ஞாபகங்களுடன் முகாம்களிலோ, சில கூடாரங்களிலோ ஏதாவது மாறுதல் நிகழாதா எனக் காத்திருக்கிறார்கள்.
சாலையோர வியாபாரிகள், குடிசைகளில் வாழும் ஜனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பலரும் ”நாளைக்கு வேலையில் இருப்போமா?’’ என்கிற இருண்ட அச்சத்துடன் இருக்கிறார்கள்.
பொருளாதார பயம் பல குடும்பங்களை ‘குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தி’ உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.
குடும்பக் கட்டுமானத்தில் விழுந்துவிட்ட கீறல்களை அதிகப்படுத்தி இருக்கின்றன ஊடரங்கு நாட்கள்.
இவ்வளவு மோசமான நிலையிலும் சிலர் டிஜிட்டலில் வரும் ராசி பலன்களைப் பார்த்துத் தங்களைச் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
“ஓடினாள்… ஓடினாள். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’’ – பராசக்தியின் விளிம்புநிலை வரிகள் வயதால் மூத்தவர்களின் மூளைகளில் எதிரொலிக்கின்றன.
இதற்கிடையிலும் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறவர்களை, தினமும் மருத்துவ அறிக்கை வாசிக்கிறவர்களை உற்றுக் கவனிக்கிறார்கள்.
கைதட்டவோ, ஒளி ஏற்றவோ பலருக்கு மனதில் தெம்பில்லை. ஊடகங்கள் அச்சத்தைப் பலருடைய பார்வையில் ஊட்டிக் கொண்டே இருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் காலை வேளையில் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த பல்பொருள் அங்காடிக்கு நுழையும்போது, பிளாட்பாரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் தலையைக் குனிந்தபடி தயக்கத்துடன் கை ஏந்தினார்கள்.
“வேற வழியில்லீங்க’’ கண்கள் ஈரமாகப் பேசுகிறார்கள். புதிதாகக் கையேந்துகிற அவர்களைப் பார்க்கிறவர்கள் அவரவர் மாத பட்ஜெட்டுகளுக்கிடையிலும், இருபது ரூபாயும், ஐம்பது ரூபாயுமாக அவர்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.
எது அவர்களைச் சாலையோரத்தில் அமர்ந்து தயக்கத்துடன் கை ஏந்த வைத்திருக்கிறது? இப்படி எத்தனை பேர் எந்தெந்த முடிவுகளுக்குப் போய்ச் சேருவார்கள்?
ஊரடங்கு இன்னும் சில வாரங்கள் நீட்டிக்க ஆலோசனை சொல்கிறவர்கள் இம்மாதிரியான நிர்கதியில் இருப்பவர்களின் வாழ்க்கை நீடிக்க குறைந்தபட்சம் என்ன ஆறுதலைக் கொடுப்பார்கள்?
அதைவிடவும், நாளைக்கு கொரோனாவால் உயிருக்குப் பாதிப்பு வராமல் பாதுகாப்பது முக்கியம் இல்லையா என்று கேட்பவர்கள், நாளைய பயத்தை மட்டும் மனதில் வைத்து, பலருடைய வயிறுகளில் இன்றைக்கு எரியும் பசியை மறந்து போய்விடுகிறார்கள்.
பொருளாதார அறிக்கைகளும், சரிவுக்கான புள்ளி விபரங்களும், ‘ஒளிரும் இந்தியா’ முழக்கங்களும் இவர்களுடைய வாழ்விலிருந்து தொலைதூரத்திற்குப் போய்விட்டன.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் உலகளாவிய அளவில் இருப்பதாகச் சொல்லும் ஆயுதமயமான, அணுமயமான, கிருமிமயமான வல்லரசு யுத்தங்களுக்குத் தீனிகளாக இன்னும் எத்தனை சாமானிய மக்களின் உயிர்கள் பலியாக வேண்டுமோ, தெரியவில்லை!