நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அறிமுகமான படம்!

சில நடிகைகளை அவர்கள் நடித்த கேரக்டர்களுக்காக மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர்.விஜயகுமாரி.

காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர் இவர்.

கண்ணகி சிலையை வடிவமைக்க, இவர் கையில் சிலம்புடன் நடித்த காட்சியைத்தான் மாடலாக எடுத்துக் கொண்டார்கள் என்பது தனிச் சிறப்பு.

இனிமையான தமிழ் உச்சரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜயகுமாரி, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரை காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தவர்.

இவர் நடிகையாக அறிமுகமான முதல் படம் ’குலதெய்வம்’. எஸ்.வி.சகஸ்கரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.ஆர்.ராஜகோபால், பண்டரிபாய், எம்.என்.ராஜம், சந்திரபாபு, அசோகன், மைனாவதி உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் மங்களம் என்ற கேரக்டரில் அறிமுகமானார் கோவையைச் சேர்ந்த விஜயகுமாரி.

கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். இந்தப் படம் மூலம்தான் அவரும் சினிமாவில் அறிமுகமானார்.

ஆர்.சுதர்சனம் இசை அமைத்த இந்தப் படத்துக்கு பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆத்மநாதன் பாடல்கள் எழுதினர். 1956 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்தப் படம், வங்க மொழி படத்தின் ரீமேக்.

வங்காளத்தில் ’பங்கா கோரா’ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான இந்தப் படம், பிரபாவதி தேவி சரஸ்வதி எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது. கூட்டுக் குடும்பம் மற்றும் விதவை மறுமணத்தை மையமாகக் கொண்டு உருவானது இந்தப் படம்.

சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கும் படத்தின் நாயகன் சகஸ்கரநாமம் சிறுவயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு விதவையான தனது சகோதரிக்கு மறுமணம் செய்து வைப்பதுபோல கதைப் போகும். படம் தமிழில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிக்கும்போதே, எஸ்.எஸ்.ஆருக்கு விஜயகுமாரி மீது காதல் ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி இருந்தது.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது விஜயகுமாரியின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, எஸ்.எஸ்.ஆரும் அவர் குடும்பத்தினரும் கவனித்துக் கொண்டார்கள். அப்போது இரண்டு குடும்பமும் நெருங்கிவிட்டது.

பிறகு ஒரு நாள், எஸ்.எஸ்.ஆரின் தாய், ’என் பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம். அவனுக்கு உம்மேல விருப்பம் இருக்கு. உனக்கு சம்மதமா?’ என்று கேட்டார் விஜயகுமாரியிடம்.

அவர் ஓகே சொல்ல, விஜயகுமாரி வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இந்த ஜோடிக்கு ரவிக்குமார் என்ற மகன் உண்டு.

– அலாவுதீன்

You might also like