எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பாட வேண்டும்!

– ராஜாஜி

சங்கீதம் கேட்கிறவர்கள் எதற்காக வருகிறார்கள். ஏதாவது கடமையைச் செலுத்த வரவில்லை. சந்தோஷத்திற்காக வருகிறார்கள். அல்லது பலன்பெற வருகிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும்.

அதை நாம் கவனித்தோமானால் இந்த இசை இயக்கத்தைப் பற்றி இருக்கிற அபிப்பிராய பேதங்கள் அநேகமாகக் குறைந்து போகுமென்று நான் நினைக்கிறேன்.

இந்த இசை இயக்கத்தைப் பற்றி வித்தியாச அபிப்பிராயம் இருப்பதற்குக் காரணம், தாங்கள் முன்னாலேயே மனதில் வைத்துள்ள அபிப்பிராயத்தை அப்படியே பத்திரமாக வைத்துக் கொண்டு ஆக்ஷேபிப்பதாக நான் எண்ணுகிறேன்.

இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதைப்பற்றி ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டார். அதை தமிழர் யாரும் ஆக்ஷேபிக்க முடியாதென்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்த இசை என்பது என்ன என்றும், இயக்கம் என்பது என்ன என்றும், நாம் அறிந்தோமானால் வித்தியாசங்கள் போய் விடுமென்பது என் பூரண நம்பிக்கை.

சங்கீதம் என்றால் சப்தங்களை – கேட்க இனிமையான சப்தங்களை – திரட்டி இணைத்து அதை எல்லோரும் கேட்கும்படி செய்வது. இதற்கு இசை, சங்கீதம் (Music) என்று பெயர்.

இதற்கு வாத்யம் போதும், அதற்கு வீணைபோதும், இதற்கு புல்லாங்குழல் போதும், இதற்கு பிடில் போதும் என்று சொல்ல வேண்டியதே இல்லை? ஹார்மோனியத்தைப் பற்றி பேச்சே வேண்டியதில்லை.

மனித ஸ்வரூபமே இல்லாமல் – மனிதக்குரலே இல்லாமல் சங்கீதம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் மனிதனுடைய குரலை அதில் சேர்த்தும் சங்கீதம் செய்யலாம் மனித குரல் சங்கீதத்தில் பிரதானமாகச் சேர்ந்தவுடனே மனிதனுக்கு காக்கை, குருவிபோல் பேச்சில்லாமல் சுவரம் மாத்திரம் நீண்ட நேரம் செய்ய முடியாது; ஆகையினால் பேச்சும், சொல்லும், மொழியும் கலந்து போகிறது.

அதில் மனிதன் குரல் ஒரு சங்கீதத்தை உண்டாக்கி ஜனங்களுக்கு திருப்தியோ, சந்தோஷமோ உண்டாக வேண்டுமானால் அதில் மனிதன் பேசும் மொழியும் சேர்ந்து போகிறது. சங்கீதம் வேறு, மொழி வேறு என்பது நிச்சயம். பாத்திரம் வேறு, மூலம் வேறு என்பது நிச்சயம்.

ஆனால் நான் ஒரு டம்ளர் பால் சாப்பிடுகிறேன் என்றால் பாலையும் டம்ளரையும் சேர்த்துச் சாப்பிடுவதில்லை. பால் மட்டும்தான் சாப்பிடுகிறேன். டம்ளரில் வைத்துத்தான் சாப்பிடுகிறேன்.

டம்ளர் இல்லாமலும் சாப்பிடலாம். அதாவது கன்றுக்குட்டி முதலியவைகள் டம்ளர் இல்லாமலும் குடிக்கும். டம்ளரில் போட்டு காப்பியோ, பாலோ சாப்பிடுவதும் உண்டு. எப்படிச் சாப்பிட்டாலும் உண்மையில் குடிப்பது பால் தான், சங்கீதம்தான் கேட்கிறேன்.

மனிதன் மொழிகளுடன் சேர்த்துக் கேட்கும்போது ஒரு தனி சந்தோஷம் உண்டாகிறது. அந்த மனிதன் குரல் சேர்ந்தவுடன் என்ன சொல்லுகிறார் என்றும் கூடவே மனம் கேட்கிறது. சங்கீதம் மனதில் ஏறுவதுடன், என்ன சொல்லுகிறார் என்பதும் கூட ஏறுகிறது.

ஏதோ எனக்கு விளங்கவில்லையென்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்; அல்லது விளங்கியும் கேட்டுக் கொண்டிருக்கலாம். சங்கீதம் வேறு, பாஷை வேறு என்பது நிச்சயமாயிருந்த போதிலும் மனிதசாரீரத்தில் வரும்போது பேச்சும் அந்த சங்கீதமும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பது பழையமுறை; நியாயமான முறை.

சங்கீதம் சோக ரசமாயிருந்து, ராகமும் சோக ரசமாயிருந்து, பேச்சு ஏதோ வேறு விஷயமாயிருந்தால் – அரிசி இவ்வளவு விலை, பருப்பு இவ்வளவு விலை என்று, தோடி ராகத்தில் பாடினால் நன்றாயிராது.

பேச்சு என்று ஏற்பட்டவுடன் ராகமும் பேச்சும் ஒன்றுக்கொன்று சம்பந்தமிருக்க வேண்டும். எப்படி உடம்பும், ஆத்மாவும் ஒன்றாகிறதோ அப்படியே இரண்டும் ஒன்றாகப்போய், கேட்கும்போது பிரம்மானந்தம் உண்டாகிறது என்று சொல்லுகிறார்கள்.

அப்படிப்பட்ட இன்பம் வேண்டுமா? வேண்டாமா? மொழியைப் பற்றிக் கவனம் வேண்டுமா வேண்டாமா என்கிற வாதம், பிரமாதமாக இந்த இசை இயக்கத்தில் அடிபடுகிறது. மொழிபற்றி வித்தியாசம் ஏற்பட்டபடியால், மொழியே வேண்டாம் என்கிற வாதம் போட்டால் நம் கட்சி பலமாகப் போய்விடுகிறது என்கிற உத்தேசத்தின் மேல் சங்கீதத்திற்கு மொழியே வேண்டாம் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

இது எப்படியிருக்கிறதென்றால் தென்கலை வேண்டுமா, வடகலை வேண்டுமா என்று கேட்டால் ஹிந்து மதமே வேண்டாம். சிவன் கோவில் வேண்டுமா, விஷ்ணு கோவில் வேண்டுமா என்று கேட்டால் கோவிலே வேண்டாம் என்று இப்படிச் சொல்லிக் குறுக்கடியாக வாதம் செய்து முடித்துவிடலாம் என்பதற்காக முடித்துவிடுகிறார்கள்.

அதற்கு ஆதரவாய் சங்கீதம் வேறு, பாஷை வேறு என்ற உண்மையான தத்துவமிருந்தாலும், மனிதக் குரலில் கேட்கும்போது, அந்தக் குரலில் மொழிகள் வரும்போது, அந்த மொழிகள் அர்த்தமில்லாமல் வேறு ஏதோ சப்தமாக – முரசின் சப்தமாய் – தம்பட்டையின் சப்தமாயிருப்பதற்குப் பதில் சங்கீதத்தின் ரசத்திற்கு இணைந்ததாக நமக்கும் விளங்கும் மொழியாக இருந்தால் – இசையாக இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என்பதுதான் நம் தமிழிசை இயக்கத்தின் நோக்கம்.

கர்நாடக சங்கீதத்தைத் தகர்த்தெறிவதற்காகவாவது கர்நாடக சங்கீதத்தைத் கெடுப்பதற்காகவாவது இந்த இயக்கம் என்று சொன்னால் அது எனக்குத் தெரிந்தமட்டில் சுத்த தவறு, அப்படி இல்லவே இல்லை.

தேசத்தில் நம் பாஷை, சர் ஷண்முகம் செட்டியாரவர்கள் சொன்னபடி உலகத்திலேயே சந்தி சிரிக்கும்படியான நிலைமையிலிருக்கிறது.

கொஞ்சநாள் முன்பு ஒரு சபையில் சொன்னார்கள். எதிர்க் கட்சியில் இருக்கிற பெரியவர்கள் இரண்டு மூன்று பேர் பேசினார்கள். ஒருவர் சொன்னார், தீக்ஷதர் திருவிழா அன்று, சங்கீத வித்துவான்களுக்கு ஒரு உரிமை உண்டு. என்ன உரிமையென்றால் சங்கீதத்தை கேட்கிறவர்கள், சாகித்தியம் இருக்கிறதே-பேச்சில் உள்ள சாகித்தியம், அதன் பொருளை மேல்வாரியாகவாவது அறிந்து கொண்டு கேட்டால்தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும் என்று சொன்னார்.

நியாயம். அதே உரிமை தான் இப்பொழுது நாம் கேட்கிறது. ஆனால் இசையை கீழே இருந்து கேட்பவர்கள் உரிமை என்ன? சங்கீதம் பாடுகிறவர்கள் சாகித்தியம், நாம் மேல்வாரியாகவாவது அர்த்தம் செய்துகொள்ளும்படியான பாஷையில் இருக்க வேண்டுமென்பதுதான். வித்தியாசம் ஒன்றும் கிடையாது.

இன்னொருவர் சொன்னார் அவர் பெயரையும் சொல்லலாம். சர்.சி.பி.ராமசுவாமி ஐயர். அவர் சொன்னார், “சங்கீதத்தில் பொருளும் பதமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு “tingling of symbols” என்று சொன்னார். பொருளற்ற இசை, ஏதோ மாதிரி ஆனந்தமே தவிர வேறு பிரயோஜன மில்லையென்று சொன்னார். இதேதான் இந்த இயக்கத்தின் மூலாதாரம்.

நம் நாட்டிலே பாட்டு என்றால் இரண்டு விஷயத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. ஒன்று கடவுள் பக்தி. இன்னொன்று பெண் பக்தி-காதல். காதலுக்கும், தெய்வபக்திக்கும், இரண்டுக்கும் வேண்டும் பாட்டு.

நம் தேசத்தில் பண்ணானது இப்படி நடைபெற்று வருகிறது. சங்கீதத்திற்கு உயிர் இருக்கிறதே அது இந்த பக்தியிலும் இந்த காதலிலும்தான் இருக்கிறது.

இந்த தேசத்தில் என்ன ஆகிறது. மனிதனுக்கு பாஷையே இல்லாமலிருந்தாலும் பாஷை உண்டாகிறது. மனிதனுக்கு நாதமே இல்லாமலிருந்தாலும் சங்கீதம் உண்டாகிறது. அப்படித்தான் தியாகையர் கீர்த்தனங்கள் பாடினார் தமிழ்நாட்டிலிருந்து.

அவர் தமிழ் நாட்டிலிருந்தாலும் தோன்றி அப்படியே பக்தி பெருகியதும் மொழியும், பாட்டும், சங்கீதமும் ஒன்றுசேர்ந்து ஒருவரே சங்கீதமும் சாகித்யமும் செய்தார். தானாகவே உண்டாயிற்று அந்த சங்கீதம்.

4, 5 பேர் சேர்ந்து கொல்லத்து மேஸ்திரி, வீடு கட்டுவதுபோல், நீ செங்கல் கொண்டுவா, நீ சுண்ணாம்பு கொண்டுவா, ஓடு, ரயிலில் வருகிறது. நான் எல்லாம் சேர்த்து வீடு கட்டுகிறேன் என்று சொல்வது போல் இல்லை.

ஆனால், தியாகையர் செய்த கீர்த்தனங்கள் அப்படியே அவர் ஆனந்தத்திலிருந்து உண்டாயின. அப்படி உண்டாகும்படியான நிலைமையில் நாமில்லை என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.

தியாகையருக்கு முந்தி சங்கீதமே இல்லையா? உலகத்தில் எவ்வளவோ பல்லாயிர வருஷம் கழிந்த பிற்பாடும் இருக்கும். புதிதாக உண்டாக்கக் கூடியவர்கள் வருவார்கள், அதற்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவரையில் வேறு ஒன்றும் வேண்டாமென்று சொல்லக் கூடாது.

தியாகையர் தமிழில் பாடுவதற்குப் பதில் தெலுங்கில் பாடினார். அது ஒன்றே போதும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு. தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ் தேசத்திலே புகழ்பெற்றவர் ஏன் தெலுங்கில் பாடினார்.

தெலுங்கு நல்லதென்று அதில் அவர் பாடவில்லை. தெலுங்கு தாய் பாஷையானதால் அவர் அதில் பாடினார். நாமும் நம் தாய் பாஷையில் பாடினால்தான் நம் ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும், கடவுளுக்கும் காது கேட்கும்.

யாராவது ஒருவர் இப்பொழுது காதலில் விழுந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள் நான்தான் காதலில் விழுந்தேனென்று வைத்துக் கொள்ளுங்கள். வயது 80 என்று வைத்துக்கொள்ளுங்கள்.

காதல் கடிதம் எழுத வேண்டுமென்றால் நான் நல்ல இங்கிலீஷ் தெரிந்த ஒரு ஆளிடம்போய் நீ இங்கிலீஷ் காதல் கடிதம் (love letter) ஒன்று எழுதிக்கொடு. நான் என் காதலிக்கு அனுப்ப வேண்டும். என்னால் எழுதமுடியாது. நீ எழுதித்தா. அதை நான் அனுப்பிக் காதலை வளர்த்து ஜெயிக்க வேண்டும் என்றால், அது முடியாது.

இங்கிலீஷ் லவ் லெட்டர் வாங்கி நான் அனுப்பினால் எவ்வளவு சிரிப்பாயிருக்கும், ராமனுக்கு அல்லது கிருஷ்ணனுக்கு நான் லவ் லெட்டர் அனுப்பவேண்டுமானால் என் தாய் பாஷையில் எனக்குத் தோன்றிய முறையில் எழுதி, என் அன்புக்குத் தோன்றியபடி நான் பாடவேண்டுமே தவிர இதற்காக மிக நல்ல சங்கீதம் என்று எடுத்து அதை நான் பாடினால் என்ன உணர்ச்சி எனக்கு உண்டாகும்? எனக்கு உண்டாகாவிட்டால், கடவுளுக்கும் உண்டாகாது. நிச்சயம். இது தான் இந்த இயக்கத்தின் தத்துவம். 10 பேர் மட்டும் கேட்டால் போதாது. கோடிக்கணக்கான ஜனங்கள் கேட்டு சந்தோஷிக்க வேண்டிய விஷயம். எல்லோருக்கும் தெரிந்த பாஷையில் பாடவேண்டும்.

You might also like