பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!

சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் அறிமுக இயக்குநர்கள்.

அப்படித் துடித்தவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமா வரலாற்றின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பீம்சிங். இவருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஒவ்வொரு படத்திலும் ரசித்து ரசித்து வித்தியாசமான கேரக்டர் கொடுத்து நடிப்பைக் கொண்டு வந்தவர்.

‘ப’ வரிசை படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் பீம்சிங்.

இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சுவிடம் சினிமா கற்ற பீம்சிங், எடிட்டிங் துறையில் கரை கண்டார். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யில் உதவி இயக்குநரான அவர், தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 52 ஆம் ஆண்டில் ‘பராசக்தி’ ரிலீஸ் ஆனது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயக்குநராக அறிமுகமானார் பீம்சிங். அவர் அறிமுகமான படம் ‘அம்மையப்பன்’.

1954-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர், கலைஞர் கருணாநிதி. எஸ்.எஸ்.ஆர். ஹீரோவாக நடித்தார்.

ஜி.சகுந்தலா, எஸ்.வரலட்சுமி, வி.நாராயணசுவாமி, டி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சாமிநாதன் உட்பட பலர் நடித்தனர்.

விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா.

பாடல்கள் – மு.கருணாநிதி, கவிஞர் சுரதா, எம்.கே.ஆத்மநாதன், முத்துக்கூத்தன்.

பீம்சிங் இயக்கிய இந்தப் படம் படு தோல்வி அடைந்தது. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரத்துக்கு முன், கண்ணதாசனும் ஏ.கே.வேலனும் வசனம் எழுதிய ‘சுகம் எங்கே?’ என்ற படம் வெளியானது.

கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, வீரப்பா, தங்கவேலு உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ராம்நாத் இயக்கி இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்திருந்தது.

இந்த இரண்டு படமுமே ஆங்கில படம் ஒன்றின் தழுவல். இதில் ‘அம்மையப்பன்’ சரித்திரப் படமாகவும், ‘சுகம் எங்கே’ சமூக படமாகவும் உருவாக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் பிரச்னை இருந்ததால் சரித்திரப் படம் வெற்றி பெறுமா? சமூகப் படம் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் பரபரப்பாக மோதிக்கொண்டார்கள்.

ஆனால் இரண்டு படமும் ஓடவில்லை. ‘அம்மையப்பன்’ ரிலீஸ் ஆனபோது, ‘சுகம் எங்கே’ கதையை அப்படியே சுட்டிருக்காங்க என்ற மவுத் டாக்கால் படம் தோல்வி அடைந்தது.

ஆனாலும் முதல் படம் தோல்வி பற்றி கலங்காத பீம்சிங், தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தார்.

– அலாவுதீன்

04.01.2022 10 : 50 A.M

You might also like