மொழி, இனம், நாடு என்று எதுவும் கலைஞர்களைப் பிரிக்க முடியாது. சொல்லப்போனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் உண்மையான கலைஞனின் மனவோட்டமாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே பால பாடம். அந்த வகையில், விரைவில் தெலுங்கு இயக்குனர்களோடு விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்கள் கைகோர்ப்பது மகிழ்ச்சியான விஷயம்.
ஓருருவம் பல முகம்..!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களும் புழங்குமிடமாகச் சென்னை இருந்ததென்பது வரலாறு. அதனால், எண்பதுகள் வரை தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாகவே அது கருதப்பட்டது.
அதன்பின்னரே தெலுங்கு திரையுலகம் ஹைதரபாத்துக்கும், மலையாளத் திரையுலகம் திருவனந்தபுரத்துக்கும், கன்னடத் திரையுலகம் பெங்களூருவுக்கும் இடம்பெயர்ந்தது. அப்போதைய அரசியல் சூழலும் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் மொழிப்பற்றும் அதற்கு வழிவகுத்தன.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா கோலோச்சிய காலத்தில், நடிகைகள் மட்டுமே தமிழ் தவிர்த்து இதர மூன்று மொழிகளிலும் நடித்தனர் (இப்போதுவரை அந்த நிலைமைதான் என்பது வேறு விஷயம்). எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலும் அதுவே தொடர்ந்தது.
ஆனால், ‘மீரா’ இந்தி பதிப்பு தவிர வேறெந்த மொழிப் படங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்ததில்லை. அதேநேரத்தில், நட்புக்காக சுமார் ஒரு டஜன் தெலுங்கு படங்களில் நடித்தார் சிவாஜி கணேசன். அவற்றில் பெரும்பாலானவை கௌரவத் தோற்றங்கள்தான்.
பெரும்பாலும் தெலுங்கிலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து தெலுங்கிலும் படங்கள் ரீமேக் செய்யப்பட்டதால், என்.டி.ஆர், மற்றும் நாகேஸ்வரராவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் மிகச்சில படங்களே தமிழில் ‘டப்’ செய்யப்பட்டன. விட்டலாச்சார்யாவின் படங்கள் அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆனால் ரஜினி – கமல் தலைமுறை அதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தது.
மலையாளத் திரையுலகம் மூலமாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கமல்ஹாசன் பின்னாட்களில் தமிழுக்கு முன்னுரிமை தந்தாலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் வெற்றிகளைத் தந்தார்.
தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்களுக்காக இந்திப் படங்களில் நடிக்க முன்னுரிமை தந்த கமல், தெலுங்கில் தன் மனதுக்குப் பிடித்த இயக்குனர்களோடு கைகோர்த்தார்.
தொடக்க காலத்திலேயே கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களில் கலந்து கட்டி நடித்த ரஜினிகாந்த், 80-களின் பிற்பாதியில் இந்தி திரையுலகத்திற்கு மட்டும் முன்னுரிமை தந்தார்.
அப்போதைய கலைஞர்களில் கார்த்திக், சத்யராஜ், சுமன், பானுசந்தர், அர்ஜுன், ராம்கி, அருண்பாண்டியன் என்று பலரும் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் நடித்தனர்.
அதேபோல, 90களில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, விஜயசாந்தி உட்படப் பல தெலுங்கு நட்சத்திரங்களின் படங்கள் சுடச்சுட தமிழில் ’டப்’ செய்யப்பட்டு வெளியாகின. 2000-களில் அந்த ட்ரெண்ட் முடிவுக்கு வந்தது.
தொடரும் பாரம்பரியம்!
2001க்கு பிறகு விஷாலின் ‘சண்டக்கோழி’, சூர்யாவின் ‘கஜினி’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’, பாலாஜி சக்திவேலின் ‘காதல்’, விக்ரமின் ‘அந்நியன்’ போன்ற படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு பெருவெற்றிகளை ஈட்டின.
அதன் தொடர்ச்சியாக, இந்த நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகத் தொடங்கின.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது விஜய், அஜித் உட்படப் பல தமிழ் நட்சத்திரங்களின் படங்கள் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன.
தெலுங்கு நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்கள் தமிழ் சாட்டிலைட் உரிமையைக் குறிவைத்து தமிழில் ‘டப்’ செய்யப்படுகின்றன.
இந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, சில தமிழ் நட்சத்திரங்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, இவ்வழக்கத்திற்கு மீண்டும் ஒளியூட்டியது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், ’ஜிகர்தண்டா’ ரீமேக்கான ‘கடலகொண்டா கணேஷ்’ மூலமாகத் தெலுங்கில் அறிமுகமானார் அதர்வா.
விஜயகாந்த் தவிர்த்து, 90களில் முன்னணியில் இருந்த தமிழ் நட்சத்திரங்களில் பிரபு, சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட பலர் தற்போது தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
’பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, வம்சியின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.
தெலுங்கு இயக்குனர்களான சேகர் கம்முலா, வெங்கி அட்லூரியின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் நடிகர் தனுஷ். ’ஜதிரத்னாலு’ படத்தை இயக்கிய அனுதீப் கே.வி., சிவகார்த்திகேயனின் 20-வது படத்தை இயக்கவிருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படம் தமிழில் வெளியானாலும், தமிழில் நேரடியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் மகேஷ் பாபு. தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் தெலுங்கு, இந்தி, தமிழில் தயாராகும் படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையாளத்திலும் இந்தியிலும் தனக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் கூட, ‘புஷ்பா’ வெளியீட்டின்போது தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதே தனது லட்சியம் என்றார்.
சர்வானந்த், சித்தார்த் போன்ற கலைஞர்கள், சில காலம் முன்பே இதனைச் செய்யத் தொடங்கி விட்டனர்.
வணிகமே பிரதானம்!
தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது, அது வெறுமனே ‘அறிமுகம்’ என்றளவிலேயே கவனிக்கப்படும். அதனை மீறி வெற்றியைச் சுவைக்க, இரு மொழிகளிலும் ஒரு படம் தயாரிக்கப்படுவதே புத்திசாலித்தனம்.
அதையொட்டியே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
பெயர், புகழ் தாண்டி தெலுங்கு படவுலகில் வெற்றி பெறுவதன் மூலமாக, இவர்களது திரைப்படங்களுக்கான வர்த்தகச் சந்தையின் அளவு விரிவாகும் என்பதே இதற்கான பிரதான காரணம். தெலுங்கு நட்சத்திரங்களின் நிலைப்பாட்டுக்குப் பின்னிருப்பதும் இதுவே.
சில மாதங்களுக்கு முன்னர் ‘உப்பெண்ணா’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதன் பெருவெற்றியினால் கடந்த பத்தாண்டுகளில் அவர் நடித்த பல தமிழ் படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் குறிப்பிட்ட வரவேற்பைப் பெறும்.
ஏற்கனவே ஜெயராமின் ‘மார்கோனி மத்தாய்’ மூலமாக மலையாளத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி, இந்தாண்டு இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் மூலமாக இந்தியிலும் அறிமுகமாகவிருக்கிறார்.
பல மொழிகளில் கிளை விரிக்கும் அவரது ஆர்வத்திற்குப் பின்னும் வணிக எல்லைகளை விரிவாக்கும் உத்தியே இருக்கிறது.
தமிழ் நட்சத்திரங்களின் படங்கள் பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டோ அல்லது நேரடியாகவோ வெளியாகும்போது, அப்படங்களில் நடித்த பிற கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் கூட வெளிச்சம் பெறுவர்.
அதுவே, புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடக்கூடும். போலவே, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு கதவுகள் திறக்கும். பரஸ்பர புரிதலோடு நடக்கும் இச்செயல்பாட்டின் பின்புலத்தில் எவ்வித அரசியலும் கலக்காமல் இருப்பது அவசியம்.
ஒரேயொரு சிக்கல்!
ஒரே நேரத்தில் இரு வேறு மொழிகளில் ஒரு படம் தயாராகும்போது, மண் சார்ந்த தனிப்பட்ட கூறுகளை வெளிக்காட்ட முடியாத சிக்கல் உருவாகும். ’கமர்ஷியல் படத்தில் அவை எதற்கு’ என்பவர்கள் கூட, இந்த சிக்கலைக் கடந்துவருவது கடினமான விஷயம்.
அதனால், எல்லா நிலப்பரப்புக்கும் கலாசாரத்துக்கும் பொதுவான பிரச்சனைகளையும் உணர்வுகளையும் வெளிக்காட்டும் கதைகளைச் செதுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
அது சாத்தியமானால், பெருவெற்றிகள் மூலமாக தமிழ் நட்சத்திரங்களின் வணிக எல்லைகள் மேலும் விரிவாகும். அதற்கொரு ஆரம்பமாக, தமிழ் நடிகர்களின் தெலுங்கு பாசம் அமையும்!
– உதய் பாடகலிங்கம்
04.01.2022 4 : 30 P.M