தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுசுப்பிரமணியன்!

தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார்.

தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவர் புலமை வாய்ந்தவர். அதனால் ஆங்கிலத்தில் 8 நூல்களையும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளார்.

அநேகமாக தமிழகத்தில் அவரது காலடித் தடம் பதியாத பல்கலைக் கழகங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்தி உள்ளார்.

இவரது ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இருநூற்றைத் தாண்டும். இவரிடம் ஆலோசனை பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம்.

தமிழ் மீது உள்ள பற்று காரணமாக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தமிழூர் என்ற கிராமத்தை அவரே உருவாக்கினார்.

அங்குள்ள தமிழ் நகரில் ‘தமிழகம்” என்ற இல்லத்தில் வசித்து வந்தார். 87 வயதான நிலையிலும் தமிழுக்கு தொண்டு செய்து வந்த ச.வே.சுப்பிரமணியன், கடந்த 2017-ம் ஆண்டு சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதியதில் காயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிசிக்சை பலனின்றி காலமானார்.

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம், ராமலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன். தொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், இடைநிலைக் கல்வியை ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்ற அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் படித்தார். முனைவர் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முடித்தார்.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-ல் பணியைத் தொடங்கிய அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகவும் செயல்பட்டார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல் திருவள்ளுவர் கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தார்.

தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளார். அத்துடன், இலங்கை, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளையும் சிறப்பு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார்.

இவர், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில், பல ஆய்வு நூல்களை வெளியிட்டார். இவரது நூல்கள் பல்வேறு பலகலைக்  கழகங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழூர் என்ற கிராமத்தை உருவாக்கினார். அங்கு இவரது வீட்டில் பல அரிய நூல்கள் இருந்ததால் எப்போதும் அங்கு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களால் நிறைந்து இருக்கும்.

இவர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழாசுரர், தமிழ் இயக்கச் செம்மல், தொல்காப்பியச் செம்மல் என பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்று உள்ளார். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு ‘பாஷாசம்மன்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.

தமிழ் மொழிக்காக பங்காற்றியதைக் கவவுரவிக்கிற வகையில் இந்த விருது சாகித்ய அகாடமியால் வழங்கப்பட்டது. அதன் பின்னர், இதுவரையிலும் தமிழ் மொழிக்காக வேறு எழுத்தாளர் யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.

இவர், இலக்கிய நினைவுகள், சிலம்பின் சில புரல்கள், இலக்கிய கனவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, இலக்கிய உணர்வுகள், கம்பன் கற்பனை, கம்பன் கவித்திறன், இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகார இசைப்பாடல்கள் என நூல்களின் வரிசை சென்று கொண்டே இருக்கிறது.

ஆங்கிலத்தில், சிலப்பதிகாரத்தின் இலக்கணம், அகநானூறு இலக்கணம், தமிழ் இலக்கிய ஆய்வுகள் என 9 நூல்களை எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாற்று நூல்களாக ’தமிழ் ஞாயிறு, சாதனைச் செம்மல்” மற்றும் தமிழ்ச் செம்மல் வ.வே.சு” என இரு படைப்புக்கள் வெளிவந்து உள்ளன.

வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியன் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது பெயரை அவரது படைப்புக்கள் காலம் கடந்தும் நினைவுகூரும் என்பது நிச்சயம்.

தமிழில் இதுவரை 154 நூல்களையும், ஆங்கிலத்தில் 5 நூல்களையும், மலையாளத்தில் சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டத்தையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இவர் வழிகாட்டுதலில், கேரளம், மதுரை காமராசர், சென்னை , பெங்களூர் ஆகிய பல்கலைக் கழகங்களின் வழி 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

சிலப்பதிகாரம் பற்றி 34 நூல்களையும், தமிழ் இலக்கண நூல்களாக 9 நூல்களையும், தொல்காப்பியம் பற்றி 30 நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது தொல்காப்பியம் தெளிவுரை 11ஆவது பதிப்பாக 2010இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.

வாழ்க்கை அடிப்படையான மனிதம், மனமும் உயிரும், உடல் உள்ளம் உயிர், மனம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பதிப்பு நூல்களாக 100க்கு மேல் வெளிவந்துள்ளன.

வழங்கப்பெற்ற விருதுகள்
செந்தமிழ்ச் செம்மல் விருது, இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி விருது, சாகித்திய அகாதெமி வழங்கிய பாஷா சம்மான் விருது, தமிழாகரர் விருது, நல் அறிஞர் விருது, சைவநன்மணி விருது, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது, ஔவைத்தமிழ் அருளாளர் விருது,

தமிழியக்கச் செம்மல் விருது, ராஜா அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை விருது (ரூ. 1 இலட்சம் பரிசு), தொல்காப்பியச் செம்மல் விருது, சென்னை கம்பன் விருது, தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ரூ. 1 இலட்சம் பரிசு, கலைஞர் விருது ரூ. 1 இலட்சம் பரிசு, தருமபுர ஆதீனம் செந்தமிழ்க் கலாநிதி விருது முதலியன வழங்கப் பெற்றவா.

ச. வே. சு இயற்றிய நூல்கள்:

இலக்கிய நினைவுகள் 1964
சிலம்பின் சில பரல்கள் 1972
இலக்கியக் கனவுகள் 1972
மாந்தர் சிறப்பு 1974
ஒன்று நன்று 1976
அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
இலக்கிய உணர்வுகள் 1978
கம்பன் கற்பனை 1978
காப்பியப் புனைதிறன் 1979
கம்பனும் உலகியல் அறிவும் 1981
கம்பன் இலக்கிய உத்திகள் 1982
கம்பன் கவித்திறன் 2004
இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
இலக்கிய வகையும் வடிவும் 1984
தமிழ் இலக்கிய வரலாறு 1999
சிலப்பதிகாரம் மூலம் 2001
சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
சிலம்பும் சிந்தாமணியும் 1977
திராவிட மொழி இலக்கியங்கள் 1984
இளங்கோவும் கம்பனும் 1986
தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
தமிழில் விடுகதைகள் 1975
தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
காந்தி கண்ட மனிதன் 1969
பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
நல்வாழ்க்கை 1992
மனிதம் 1995
மனமும் உயிரும் 1996
உடல் உள்ளம் உயிர் 2004
தமிழர் வாழ்வில் தாவரம் 1993
கூவநூல் 1980
சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
தொல்காப்பியம் தெளிவுரை 1998
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
திருக்குறள் நயவுரை 2001
திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
கானல்வரி உரை 2002
பத்துப்பாட்டு உரை 2002
இலக்கணத்தொகை எழுத்து 1967
இலக்கணத்தொகை சொல் 1970
இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
குவலயானந்தம் சந்திரலோகம் 1979
பிரபந்த தீபம் 1980
தொல்காப்பியப் பதிப்புகள் 1992
மொழிக்கட்டுரைகள் 1974
சங்க இலக்கியம் 2006
மெய்யப்பன் தமிழகராதி 2006
தமிழ் இலக்கண நூல்கள் 2007
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
பன்னிரு திருமுறைகள் 2007
Descriptive Grammar of Chilappathikaram 1975
Grammar of Akananuru 1972
Studies in Tamil Language and Literature 1973
Studies in Tamilology 1982
Tolkappiyam in English 2004
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966

You might also like