இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை!

– வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் அனுபவ மொழிகள்

பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடையே பரப்பி, இயற்கையைப் பாதுகாக்க போராடிய இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் அனுபவ மொழிகள்.

*****

மனிதர்களைச் சுற்றியுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், கால்நடைகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல் இந்த உலகில் இருக்க வேண்டும்.

விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை.

இயற்கை விவசாயம் என்பதன் அடிப்படை இயற்கையுடன் இணைந்த உணவு உற்பத்தி.

நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிடுவார்கள்.

இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பருவநிலை மாற்றம்தான். அதைச் சரிசெய்ய வேண்டுமானால் கண்டிப்பாக காடுகளை வளர்க்க வேண்டும். காடுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை.
பூச்சி தாக்காத பாரம்பரிய ரகங்களை பயிர் செய்ய வேண்டும். மண்ணை வளப்படுத்த வேண்டும்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, நஞ்சுக்களை பயன்படுத்தாத விவசாயம் தான் இயற்கை விவசாயம். இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்ய, கால்நடை வளர்ப்பு அவசியம்.

ஒவ்வொரு உயிரும் பிறவற்றை சார்ந்தே வாழ்கின்றது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல் ரீதியாக மட்டுமே பார்த்தால் அது அழிவினை நோக்கியே இட்டுச் செல்லும்.

ஆன்மீக ரீதியில் பார்க்கும்போது மனிதர்களின் நலனை மட்டும் பார்த்தால் போதாது. அது மிகவும் குறுக்கலான பார்வை.

நம்முடைய தேவைக்காக எப்பொழுது சமரசம் ஆகிறோமோ அப்பொழுதுதான் தீயவற்றின் பாதையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்.

மர வளர்ப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய முறைகளே என்றும் நிலையானது.

30.12.2021  3 : 40 P.M

You might also like