உண்மையைச் சில நேரம் உலகம் ஏற்பதில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்:
***
வசனம்

எல்லோரும் நம்பும்படி
சொல்லும் திறனிருந்தால்
சொல்லிலே உண்மை இல்லே…

உள்ளதை உள்ளபடி
சொல்லும் மனிதனிடம்
உணர்ந்திடும் திறமையில்லே…
உண்மையும் நம்பவைக்கும்
திறனும் அமைந்திருந்தால்
உலகம் அதை ஏற்பதில்லே…

பாடல்

அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை

(அது இருந்தா…)

அங்கமதில் மங்கையர்க்கு
அழகிருந்தால் அறிவில்லே
ஆராய்ந்து முடிவு செய்யும்
அறிவிருந்தால் அழகில்லே

அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
அதிசயமாய்ப் பிறந்தாலும்
குறுகு மனம் கொண்டவர்கள்
குலைக்காமல் விடுவதில்லே

(அது இருந்தா…)

பள்ளி செல்லும் மாணவர்க்குப்
படிப்பு வந்தால் பணமில்லே
பணமிருந்தால் இளைஞருக்குப்
படிப்பதிலே மனமில்லே

மனமிருந்து படிப்பு வந்து
பரீட்சையிலும் தேறி விட்டால்
பலபடிகள் ஏறி இறங்கிப்
பார்த்தாலும் வேலையில்லே

(அது இருந்தா…)
பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லே
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
பொதுப்பணியில் நினைவில்லே

போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லே…

(அது இருந்தா…)

– 1959-ம் ஆண்டு வெளிவந்த ‘நல்ல தீர்ப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

You might also like