நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாற்றம்!

நீங்கள் எப்போதாவது மிகவும் அமைதியாக, எதிலும் கவனம் செலுத்தாமல், கவனம் செலுத்த முயற்சி எதுவும் செய்யாமல், ஆனால் மனதை மிகவும் நிலையாக, நிஜமாகவே அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா?

பிறகு நீங்கள் எல்லாவற்றையும் கேட்பீர்கள், இல்லையா? தொலைதூர இரைச்சல்கள் மற்றும் அருகில் உள்ளவை, மிக அருகில் உள்ளவை, உடனடி ஒலிகளை நீங்கள் கேட்கிறீர்கள் – அதாவது, உண்மையில் நீங்கள் எல்லாவற்றையும் கேட்கிறீர்கள். உங்கள் மனம் ஒரு குறுகிய சிறிய தடத்தில் மட்டும் நின்றுவிடவில்லை.

சிரமமின்றி, எளிதாக – இந்த வழியில் நீங்கள் கேட்க முடிந்தால், உங்களுக்குள் ஒரு அசாதாரண மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

இது உங்கள் விருப்பமின்றி, நீங்கள் கேட்காமலேயே வரும்; அந்த மாற்றத்தில் அற்புதமான அழகும், ஆழமான நுண்ணறிவும் (insight) இருக்கிறது.

நான் சொல்வதை இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது போல் – இப்போது அல்லது எப்போதாவது சில நேரங்களில் இதை முயற்சி செய்யுங்கள்.

நான் சொல்வதை மட்டுமல்ல, உங்களைப் பற்றிய (உங்களுக்குள் நிகழும்) அனைத்தையும் கேளுங்கள்.

அந்த மணிகள் (bells), பசுக்கள் மற்றும் கோவில்களின் மணிகள் – அனைத்தையும் கேளுங்கள்; தொலைதூர ரயில் மற்றும் சாலையில் செல்லும் வண்டிகளின் ஓசைகளை கேளுங்கள்.

நீங்கள் இன்னும் அருகில் (ஆழமாக) நான் சொல்வதைக் கேட்டால், கேட்பதில் ஒரு பெரிய ஆழம் இருப்பதைக் காண்பீர்கள்.

ஆனால் இதைச் செய்ய, உங்கள் மனம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே எதையாவது கேட்க விரும்பினால், உங்கள் மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும், இல்லையா?

அந்த நேரத்தில் உங்களுக்கு அருகில் (உங்களைச் சுற்றி) ஏதாவது நடந்தால், நீங்கள் (அதனால்) திசை திருப்பப்பட மாட்டீர்கள்.

இந்த வழியில் நீங்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் உங்கள் மனம் அமைதியாக இருக்கிறது.

நீங்கள் எளிதாக, ஒரு குறிப்பிட்ட மகிழ்ச்சியுடன் கேட்க முடிந்தால், உங்கள் இதயத்தில், உங்கள் மனதில் – எந்த வகையிலும், நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

You might also like