தாய் தலையங்கம்:
எதற்காகவாவது பீதியும், பரபரப்பும் அடைந்து கொண்டிருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கொரோனா இரண்டு முறை வந்து உருவாக்கிவிட்டுச் சென்ற பதற்றம் தணிவதற்குள் அடுத்ததாக ஒமிக்ரான் தொற்று.
மிக வேகமாகப் பரவ வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒமிக்ரான் விஷயத்தில் குழம்பிப் போயிருக்கின்றன பல நாடுகள்.
விரைந்து வந்து தொற்றி உடலுக்குள் சில சிக்கல்களை ஏற்படுத்திவிட்டுக் கடந்து சென்றாலும், முந்தைய கொரோனா மாதிரி மூச்சுத் திணற வைக்கவில்லை. பல உயிர்களைப் பறித்துச் செல்லவில்லை.
உலக அளவில் தற்போது கிடைத்திருக்கிற தகவல்படி மூன்று பேர் மட்டுமே இதனால் உயிரிழந்திருக்கிறார்கள்.
பல நாடுகளில் பாதிப்பும், தொற்றும் அதிகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் திரும்பவும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கின்றன என்கிற முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இந்தியாவில் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. குளிர் மற்றும் பனிக்காலம் என்பதால் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய அளவில் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி பற்றிப் பிரதமர் பேசி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் காரணமாக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிபக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்றாலும், தமிழக அரசு பாதுகாப்புடன் இருக்க மக்களை எச்சரித்திருக்கிறது.
முகக்கவசங்களும், சமூக இடைவெளிகளும் மீண்டும் வற்பறுத்தப்பட்டிருக்கின்றன.
விமான நிலையங்கள் ஒமிக்ரானால் முன்பை விட, சுறுசுறுப்பாகி இருக்கின்றன. வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
பதினைந்து வயதுக்கும், பதினெட்டு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒமிக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று சொல்லப்பட்டாலும், நம் நாட்டில் தடுப்பூசி விஷயத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் முன்னேற்றம் இல்லாமல் ஏனோ ஒரு தயக்கம் நீடிக்கிறது.
இங்கு தான் இப்படி என்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே 60 சதவிகிதம் பேர் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒமிக்ரான் உருவானதாகச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்க நாட்டில் 20 சதவிகிதம் பேரே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிற நிலையிலும், ஒமிக்ரான் பரவினாலும், பெருத்த பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை என்பது சற்றே ஆறுதலான அம்சம்.
சரி, பொதுமக்கள் என்ன தான் செய்ய முடியும் என்கிறீர்களா?
ஒமிக்ரான் குறித்துப் பெரிய அளவில் பீதியும் அடைய வேண்டியதில்லை; அதே சமயம் பாதுகாப்பு குறித்து அலட்சியமாகவும் இருக்க வேண்டியதில்லை!
27.12.2021 12 : 30 P.M