பெரியாரின் மிகத் தீவிரமான தொண்டர் எனத் தன்னை சொல்லிக்கொள்பவர்கள்கூட செய்யத் துணியாத காரியங்களைச் செய்தவர் எம்.ஜி.ஆர்.
கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவை மட்டுமே தந்தை பெரியாரின் கொள்கைகள் என சுருக்கப்பட்ட நேரத்தில்; சாதிய கட்டுமானத்தைக் குலைப்பதும் தளரச் செய்வதுமே பெரியாரியத்தின் முதன்மையான பணி என்பது அவரது ஆயுட்காலத்திலேயே ஏறக்குறைய மறக்கப்பட்ட சூழ்நிலையில் திரு எம்.ஜி.ஆர் எடுத்த இரண்டு நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
திரையுலகில் ‘புரட்சி நடிகர்’ என்று அவருக்கிருந்த பட்டப் பெயர் அரசியல் கட்சியை ஆரம்பித்தபிறகு ‘புரட்சித் தலைவர்’ என உருமாறியது. அவர் என்ன புரட்சியை செய்தார்? என்று எதிர்க்கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களில் கேலி பேசாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.
அவர் புரட்சித் தலைவரோ இல்லையோ அவர் எடுத்த இரண்டு நடவடிக்கைகள் புரட்சி என்று சொல்லத் தக்கவைதான்.
ஒன்று: தந்தை பெரியார் நூற்றாண்டின்போது அவர் பிறப்பித்த அரசாணை. தமிழ்நாட்டுத் தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டை நீக்கி அவர் பிறப்பித்த அந்த அரசாணை சாதியவாதிகளை சமூகநீதிக் காவலர்கள் எனக் கொண்டாடும் தமிழ்நாட்டுச் சூழலில் மிகவும் புரட்சிகரமானது.
இரண்டு: பாரம்பரியமாக இருந்துவந்த கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கியது இரண்டாவது சமூகப் புரட்சி.
தமிழ்நாட்டில் நிலவுரிமை தொடர்பாக ஆய்வு செய்கிறவர்கள் கர்ணம் மணியம் ஆகியோரின் தில்லுமுல்லுகள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி பாதுகாத்தன என்பதை அறிவார்கள்.
சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்காக நாள்கணக்கில் நின்றவர்களுக்குத்தான் திரு எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கையின் முக்கியத்துவம் தெரியும்.
எம்.ஜி.ஆர் மதுரை வீரனாக நடித்தார், ஏழை மக்களைக் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டார்.
அந்த கவர்ச்சியில் மயங்கித்தான் தலித் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என்று இப்போதும் கூறிக்கொண்டிருக்கிற ஆராய்ச்சியாளர்களுக்கு எம்.ஜி.ஆரையும் தெரியவில்லை, தலித் மக்களின் உளவியலும் புரியவில்லையென்றுதான் சொல்லவேண்டும்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. காவல்துறை அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. எந்த மக்கள் அவரை ஆதரித்தார்களோ அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உருப்படியாக எதையும் அவர் செய்யவில்லை.
ஆனாலும் அவர்கள் அவரை ஆதரித்ததற்குக் காரணம் வெறும் சினிமா கவர்ச்சி அல்ல. அவரது அரசியல் பிரவேசம்தான் கிராமப்புற சாதி இறுக்கத்தை சற்றே தளர்த்தியது. பொருளாதாரப் பலன்களைவிட அது முக்கியமானது.
எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் இது.
– ரவிக்குமார் எம்.பி