– பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் பண்டிகைக் காலத்தில் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் தேவாலயங்களில் 50 பேர் மட்டுமே கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் புத்தாண்டு கேளிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல், பூங்கா மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மேலும் 20 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
எனவே மகாராஷ்ட்டிராவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 5 பேருக்கு மேல் இரவு நேரத்தில் கூடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டின் போது மும்பையில் அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே டெல்லியில் இது குறித்து பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், “கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
2 வாரத்தில் கேரளாவில் 45,000, மகாராஷ்ட்டிராவில் 11,000, தமிழ்நாட்டில் 8,800, மேற்கு வங்கத்தில் 7,600 பாதிப்பு பதிவாகியுள்ளது. கர்நாடகத்தில் 4,000, மிசோராமில் 2,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அரியானா மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் பொது இடங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரியானா அரசு கூறியுள்ளது. குஜராத்தில் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.