எட்டாவது வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாளையொட்டி (24.12.2021), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்குள்ள எம்.ஜி.ஆர். அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வழக்கறிஞரும், கதைசொல்லி இதழின் இணை ஆசிரியருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் மணா, நடிகர் எஸ்.வி.சேகர், கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணிமேகலை, தமிழ்த்துறை தலைவர் அபிதா சபாபதி, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன், கல்லூரியின் தாளாளர் டாக்டர் லதா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவிகள் பலர்  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகளை வாசித்தும், அவரது தத்துவப் பாடல்களைப் பாடியும் அரங்கை நிறைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைப் பற்றி பேசினார்.

“இன்று பல்லாயிரக்கணக்கான மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் இடமாக இருக்கும் இந்த இடம், முன்பு சத்யா ஸ்டூடியோவாக இருந்தது. இந்த வளாகத்திற்குள் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் முதலில் அவரது தாயை வணங்கி விட்டுத்தான் மற்ற பணிகளைச் செய்வார்.

எம்.ஜி.ஆரிடம் எப்போதும் ஒரு ஒழுங்கு நெறிமுறை இருக்கும். எதிலும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர்.

இலங்கையில் பிறந்து, கேரளாவில் வளர்ந்து, சென்னைக்கு வந்து திரைத்துறையில் வாழ்க்கையை தொடங்கியவர் அரசியலிலும் ஜொலித்தார். மக்களுக்கு உதவுகின்ற, மக்களை நேசிக்கின்ற வள்ளல் தன்மையோடு திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

இப்போது இதுபோன்ற ஒரு அரசியல் தலைவரைப் பார்ப்பது அரிது. மக்களை மிகவும் நேசித்ததால்தான், மக்களால் அவரும் நேசிக்கப்பட்டார். ஏற்றுக்கொண்ட எந்தத் துறையானாலும் அதில் அவர் வெற்றிக் கொடி நாட்டினார்.

சினிமா மூலம் மக்களுக்கு தேவையான நல்ல செய்திகளை, அறம் சார்ந்த செய்திகளை அவர் கொண்டு சென்று சேர்த்தார்.

பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார், ‘நாடோடி மன்னன்’ படம் மாதிரி இன்னும் நான்கைந்து படங்கள் எடுத்து விட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் அழிக்க முடியாது என்று. அந்த அளவுக்கு நேர்த்தியான படம் அது.

அறிஞர் அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை முடிந்து திரும்பினார். அப்போது சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனந்தநாயகியும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவு குறித்து அப்போது அந்த அம்மையார் முதலமைச்சர் அண்ணாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

“தங்களுக்கு சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்றதா?, அப்படியானால் எவ்வளவு தொகை செலவானது?” என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார் அனந்தநாயகி.

அதற்கு அறிஞர் அண்ணா நாளை பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மறுநாள் சட்டமன்றம் கூடியதும் மீண்டும் அனந்தநாயகி அம்மா அதே கேள்வி எழுப்பினார்.

அப்போது அறிஞர் அண்ணா சொன்னார், “என் சிகிச்சைக்கான செலவை தமிழக அரசும் ஏற்கவில்லை, நானும் ஏற்கவில்லை. இதோ என் தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் தான் என் சிகிச்சைக்கான செலவை மொத்தமாக ஏற்றார்.

நேற்று அவர் சட்டமன்றம் வரவில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாமல் போனது. இப்போது அவர் முன்னால் சொல்கிறேன். என் சிகிச்சைக்கான செலவை எம்.ஜி.ராமச்சந்திரன் தான் ஏற்றார்” என்று அண்ணா கூறினார்.

எம்.ஜி.ஆருக்கும் இலங்கைக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. அவர் சினிமா துறையில் கோலோச்சி இருந்த காலத்திலேயே இலங்கைக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறார்.

1983 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

அங்கிருந்து வந்த அகதிகள் தஞ்சை கோடியக்கரை அகதிகள் முகாம், மகாபலிபுரம் புயல் நிவாரண தங்குமிடம்  ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.

போரின் போது மியான்மரில் இருந்து இந்தியா வந்த அகதிகளும், 1971 இல் இந்திரா காந்தி தலைமையில் வங்கதேசம் பிரிந்த போது அங்கிருந்து வந்த அகதிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆனால் ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாமல் நிம்மதியுடன் இருந்தனர் என்றால் அதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி இங்கு நடந்தது தான் காரணம்.

அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அளிக்கச் சொல்லி எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். அவர்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தினார்.

அவர்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க அத்தனை ஏற்பாடுகளையும் எம்.ஜி.ஆர் செய்தார். அந்தப் பணிகளில் ஈடுபட்டு நானும் ஈடுபட்டிருந்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்றைக்கு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டிருந்த நான், எம்.ஜி.ஆருடன் தோழமையுடன் இருந்தேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்திற்கு வந்து,  என்னோடு மயிலாப்பூரில் உள்ள அறையில் தங்கியிருந்தார்.

அந்த சமயம் ஒருமுறை பாண்டிபஜார் சென்றிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற முகுந்தன் குழுவினருக்கும் பிரபாகரன் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே, பிரபாகரனையும் முகுந்தன் குழுவினரையும் கைது செய்ய காவல் துறையினருக்கு முனைந்தனர். அதில் முகுந்தன் குழுவைச் சேர்ந்த ரவீந்திரன் மட்டும் கைது செய்யப்பட்டார்.

பிரபாகரனை கைது செய்து இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே.  பிரபாகரன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற தகவலை முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரிடம் கொண்டு சென்றோம்.

இது வெளிநாட்டு விவகாரம், ஆனாலும் பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்தார்.

அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தோடு எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில் நானும் நெடுமாறனும் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தோம்.

அப்போது இந்திராகாந்தி அம்மையார், “இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர். எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்” என்று கேட்டார். பிரபாகரன் இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் எம்.ஜி.ஆர் இருப்பதாகச் சொன்னோம்.

அதே நிலைப்பாட்டிலேயே திடமாக இருக்கச் சொல்லி இந்திரா காந்தி அம்மையார் சொன்னார். ஏனென்றால் எம்.ஜி.ஆர் மீது அவர் அந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

இதனால் பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றார் இந்திரா காந்தி. அதன் பிறகு மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தில் திண்டுக்கல் சிறுமலை, மேட்டூர், பட்டுக்கோட்டை என பல இடங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கும், ஆயுதப் பயிற்சி பெறும் விடுதலைப் புலிகளுக்கும் எம்.ஜி.ஆர். தேவையான உதவிகளைச் செய்தார். பிறகு கைது செய்யப்பட்ட பிரபாகரன் ஜாமீனில் விடுதலை பெற்று மதுரையில் தங்கியிருந்தார்.

பிரபாகரனும் நானும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாபுரம் தோட்டத்திற்குச் சென்றோம். அன்று ஜானகி அம்மையார் கையால் சமைக்கப்பட்ட  உணவைச் சாப்பிடும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. ஜானகி அம்மையார் பிரபாகரனை கனிவோடு உபசரித்தார்.

அப்போது நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். வாடகை வீட்டில் தங்கி இருப்பதைச் சொன்னேன். அன்று மாலையே எனக்கு நந்தனம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரப்பட்டது. அந்த அளவுக்கு அன்பும் அக்கறையோடும் இருந்தார் எம்.ஜி.ஆர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்குக் கடற்கரை சாலை உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான். அவரது ஆட்சியில் தான் கிழக்குக் கடற்கரை சாலைக்கு திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்றது.

அதேபோல் மரக்காணத்தில் தொடங்கி சென்னை வழியாக ஆந்திரா சென்று அங்கிருந்து ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் வரை பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து அதில் படகுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விரும்பினார்.

அதற்கான திட்ட மதிப்பீட்டை வகுத்து மத்திய அரசிடம் வழங்கினார். ஆனால், அதற்குள் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

எம்.ஜி.ஆர் விரும்பியபடி பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் வெனிஸ் நகரம் போலவும், கேரளாவின் ஆலப்புழாவைப் போலவும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகள் மிக அழகாக மாறியிருக்கும்.

இந்த நிகழ்வில் தலைவர் கலைஞர் எம்.ஜி.ஆர் மீது எவ்வளவு மதிப்பு என்று சொல்ல வேண்டும். இருவருக்குமான நட்பு கடைசிவரை போற்றும்படியாகவே இருந்தது. பிற்காலத்தில் எதிரெதிர் கட்சியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்தே அரசியல் நடத்தினர் என்பது இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

“எம்.ஜி.ஆர். என்னுடைய நீண்டகால கெழுதகை நண்பர். என் வாழ்க்கைப் பயணத்தில், பல்வேறு ஏற்ற இறக்கங்களில் 1950-60களில் என்னுடன் பயணித்தவர்.

மறக்க முடியுமா எம்.ஜி.ஆருடைய பண்புகளை. இன்றைக்கு அவர் எதிர்க்கட்சியில் இருக்கலாம். எதிர்வினையாற்றலாம். அது வேறு விடயம். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அவருக்கும் மோதலும் இருந்தபோதும் கூட அந்தப் பண்பு எங்கள் இருவரிடமும் இருந்தது” என்று எம்.ஜி.ஆரைப் பற்றிக் கலைஞர் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமான நட்பு ஆத்மார்த்தமானது. ஒரு முறை அதிமுக ஆட்சியை எதிர்த்து கலைஞர் நடைபயணம் செல்கிறார். ஆனால், அந்த சமயத்திலும் எம்.ஜி.ஆர். கலைஞரை சந்தித்து அவர் மீது அக்கறை கொண்டு, உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். இப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது இப்போது இல்லை.

நேர்மையான ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். அவர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுகவைத் தொடங்கி முதல் தேர்தலைச் சந்தித்தார். வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் அந்த பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் மெத்தப் படித்தவர்கள் என்ற ஒரு நல்ல அரசியலை மக்களுக்கான அரசியலைத் தர வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நோக்கமாக இருந்தது.

எம்.ஜி.ஆர். தேர்தலை எதிர்கொண்டது மக்களை நம்பித்தான். அதனால்தான் அவரது பிரச்சாரங்கள் மக்களை மையப்படுத்தியே இருந்தது. மக்கள் குரலே மகேசன் குரல் என்று முதன்முதலாக மேடைகளில் முழங்கிய எம்.ஜி.ஆர். தான்

எம்.ஜி.ஆர். எதையும் தொலைநோக்குடன் யோசித்து தீர்க்கமான முடிவை எடுப்பவர். மக்களுக்குத் தேவையான எதிர்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டே எதையும் செய்வார்.

ஒருவரை ஒரு முறை பார்த்தாலே அவரைப் பற்றிய மதிப்பீடுகளை மனதில் உருவாக்கிக் கொள்ளும் அசாத்திய திறமை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

அவரோடு கூட்டணியில் இருந்ததால் எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்தார். ஆனால் நாடாளுமன்றம் செல்ல எனக்கு விருப்பமில்லை, சட்டமன்றத் தொகுதியில் பணியாற்ற வேண்டும். அதனால்  சட்டமன்றத் தேர்தலின்போது கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுகிறேன்  என்றேன். கோவில்பட்டியில் சோ.அழகிரிசாமி போட்டியிட்டதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.

எம்.ஜி.ஆர். எப்போதும் தன்னுடன் இருப்பவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என எண்ணுபவர். ஒருமுறை ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபாளினி ஆகியோர் இணைந்து மொரார்ஜியை பிரதமராக தேர்வு செய்தனர்.

ஆனால், அப்போது மொரார்ஜி, ஜெகஜீவன் ராம், சரண் சிங் ஆகியோருக்கு இடையே ஒத்துப் போகாததால் அங்கே சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டது.

ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் அவர்களுக்கு ஆதரவளித்தார். அப்போதுதான் முதன்முதலாக தமிழகத்தைச் (மாநிலக் கட்சியைச்) சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக முடிந்தது.” என்று எம்.ஜி.ஆருக்குப் புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், எம்ஜிஆரின் தனித்துவமான குணங்களையும் அவரின் வள்ளல் தன்மை பற்றியும் எடுத்துரைத்தார்.

“திரை வாழ்வைப் போலவே அனைவரையும் மதிக்க வேண்டும் குறிப்பாக பெண்களையும் பெரியவர்களையும் வணங்க வேண்டும் என்பதை நிஜ வாழ்விலும் கடைப்பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எல்லோருக்கும் உதவுவார். ஆனால், எந்த உதவியையும் வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டார்.

அவரால் பல லட்சம் மக்கள் பயனடைந்திருப்பார்கள். ஆனால் யாரும் அவரை நம்பிக் கெட்டிருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர் மறைந்து இத்தனை ஆண்டுக் காலம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப் போல வள்ளலை இனி தமிழகம் காண்பது அரிது தான்” என்று புகழாரம் சூட்டினார்.

அதோபோல், எம்.ஜி.ஆர் பெயரில் இயங்கும் இந்தக் கல்லூரியில் அவரைப் பற்றி ஆய்வு இருக்கை அமைத்து, இன்னும் பல ஆய்வு நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வர வேண்டும் என்ற கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளையும் எஸ்.வி.சேகர் ஆமோதித்தார்.

-நா.மோகன்ராஜ்

25.12.2021

You might also like