கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர்.

ஹீரோக்களாக ஜொலித்தோர் பின்னாட்களில் வில்லன்களாக உருமாறிய துரதிருஷ்டமும் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது

இது – காசுக்காகவா? அல்லது காலத்தின் கட்டாயமா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

ஜெய்சங்கர்:

ஜேம்ஸ்பாண்ட் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர். இவரது படத்துக்கு மினிமம் கியாரண்டி உண்டு.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கோலோச்சிய காலத்திலேயே வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்.

எல்லோரையும் மதித்தவர். காசு விஷயத்தில் கறாராக இருந்ததில்லை.

‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு அந்த மாதிரி வேடங்களிலேயே தொடர்ந்தார். ஜெய்யின் ரசிகர்கள் இதற்காக வருத்தப்பட்டார்களோ இல்லையோ-அவரை வைத்து நிறைய கவுபாய் படங்கள் தந்த ஒளிப்பதிவு மேதை கர்ணன் கண்ணீர் வடித்தார்.

ரவிச்சந்திரன்:

ஜெய்சங்கர் போன்று இவரும் காதலிக்க நேரமில்லை, நான் என சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்தவர்.

காதல், ரொமான்ஸ், பைட் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியவர்.

ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா போன்றோர் உச்சத்தில் இருந்தபோது அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர், ஊமை விழிகள் படத்தில் கொடூரமான வில்லனாக அறிமுகமானது, ஜீரணிக்க முடியாத சோகம்.

ஆனாலும் அந்தப் படம் ரவிச்சந்திரன் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

விஜயன் :

பாரதிராஜா படத்தில் பட்டாளத்தானாக அறிமுகமனார். சின்ன வேடம் என்றாலும் முதல் படத்திலேயே பரிமளித்தார்.

அடுத்த படமான ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் ஜிவ்வென்று ஹீரோவாக உயர்ந்தார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.

கேரளாவின் பெரிய அரசியல்வாதியின் உறவுக்கார பெண்ணை மணந்தார். ஏறிய வேகத்திலேயே சரிந்தார். ரதிக்கு ஜோடியாக நடித்தவர், ரேவதிக்கு அப்பாவாக நடித்ததும் ரமணாவில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்ததும் காலத்தின் கோலம்.

பாண்டியன்:

மதுரையில் வளையல் வியாபாரம் செய்தவரை மண்வாசனையில் கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. பாரதிராஜாவின் கதாநாயகிகளுக்குத்தான் வரவேற்பு இருக்கும் என்ற ரிகார்டை உடைத்து, கதாநாயகனுக்கும் மவுசு உண்டு என்பதை நிரூபித்தவர்.

கதாநாயகனாக பாண்டியனை சினிமாவுக்கு அறிமுகம் செய்த பாரதிராஜாவே, கிழக்குச் சீமையிலே படத்தில் அவரை வில்லனாக உருமாற்றியது – ’மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் சித்தாந்தத்தைக் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள செய்யும் கசப்பான உண்மை.

சரவணன்:

‘வைதேகி வந்தாச்சு’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு டஜன் படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஒரே நடிகர்.

வைதேகி வந்த வேகத்திலேயே சென்று விட்டாள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
சொந்தமாக படம் எடுத்தார். சந்தோஷம் கிடைக்கவில்லை. சும்மா இருக்க முடியுமா என்ன?

நந்தாவில் வில்லன், பருத்தி வீரனில் சித்தப்பு என தனது இருப்பைப் பதிவு செய்து கொண்டார்.
ஹீரோக்களாக உயரம் சென்று வில்லன், காமெடியன் என இறங்கிய சுமன், சுதாகர் போன்றோரையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்வோம்.

– பி.எம்.எம்.

25.12.2021  4 : 30 P.M

You might also like