அஜித் வாங்கிய முதல் ரேஸ் பைக்!

அஜித்தின் கனவும், கடும் உழைப்பும்: தொடர் – 2

பைக் ரேஸ் தான் எதிர்காலம் என்று தெளிவான முடிவு எடுத்தாகிவிட்டது. அதற்காக பத்தாவதோடு படிப்புக்கும் குட்பை சொல்லியாச்சு.

எனவே இனி ஒவ்வொரு தினமும் தன் சிந்தனையும் செயலும் பைக் ரேஸர் ஆவதை நோக்கி முன்னேறுவதிலேயே இருக்க வேண்டும் என்று தனக்குள் தீர்க்கமாக சொல்லிக் கொண்டார் அஜித்.

ஒரு துறை மேல் ஆசைபட்டாச்சு. அதற்காக படிப்பைக் கூட உதறித் தள்ளியாச்சு. ஆனால் ரேஸர் என்ற அந்த இலக்கை எட்டிப் பிடிக்க சரியான ரூட் மேப் எது என்பதெல்லாம் அப்போது அஜித்திடம் இல்லை.

அன்றைக்கு அவர் ஒரு அதிதீவிர பைக் காதலர். அவ்வளவே.

ஒரு ரேஸராக வேண்டுமென்றால் முதலில் ஒரு பைக் வாங்கியாக வேண்டும். அதற்கு பணம் தேவை. வீட்டில் பணம் கேட்கவும் மனமில்லை.

அதனால் வேலைக்குப் போவது என்று முடிவெடுத்தார் அஜித்.

தன் 16-வது வயதில் ஒரு பைக் மெக்கானிக்காக தன் வாழ்க்கையைத் துவக்கினார். இரண்டு வருடங்கள், பைக்குகளைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இன்றி நாட்கள் நகர்ந்தன.

எல்லா விதமான பைக்குகளையும் பிரித்துப்போட்டு மறுபடி அசெம்பிள் செய்யும் அளவுக்கு வேலையில் படு-ஸ்பீடாக தேறினார் அஜித்.

மெக்கானிக்காக இருந்த காலகட்டத்தில் நிறைய பைக் ரேஸர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டார்.

அவர்கள் மூலம் ரேஸிங் பற்றிய சின்னச் சின்ன நுணுக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தொடங்கினார்.

இருங்காட்டுக் கோட்டையில் பைக் ரேஸ் நடந்தால் தவறாமல் அங்கு ஆஜராகிவிடுவார் அஜித். இரண்டு வருடங்களுக்குப் பிறகு சொந்தமாக ‘எக்ஸ்ப்ளோரர்’ பைக் ஒன்றை வாங்கிவிட்டு டிரைவிங் லைசென்சையும் எடுத்தார். இந்த பைக் தான் ‘அமராவதி’ படத்தில் அவர் பயன்படுத்தியது.

இந்த நேரத்தில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் அஜித்துக்கு வேலை கிடைத்தது.

அங்கு அப்ரென்டிஸாக வேலையில் சேர்ந்தவர், அயராத உழைப்பால் விறுவிறுவென வளர்ந்து மெர்சன்டைஸர் என்ற உயர்ந்த பதவி வரை வந்தார்.

எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் பல விளம்பர நிறுவனங்களுடன் அஜித்துக்கு பழக்கம் ஏற்பட்டது. தன் நிறுவன ஆடைகளுக்கு ஃபோட்டோ ஷூட் செய்வதற்காக பல பெரியப் பெரிய விளம்பர ஃபோட்டோகிராபர்களை அவர் அப்போது சந்திப்பார்.

அந்தச் சந்திப்பின் போதெல்லாம், ‘‘நல்ல ஸ்மார்ட்டா இருக்கீங்களே… நீங்க மாடலிங் ட்ரை பண்ணலாமே’’ என்று பலரும் தொடர்ந்து சொல்லி இருக்கின்றனர்.

முதலில் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை அஜித். பிறகு, மாடலிங்கில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்று தெரிந்தவுடன், அது தன் பைக் ரேஸ் கனவை விரைவில் எட்டிப்பிடிக்க உதவும் என்பதால் மாடலிங் செய்ய முடிவு செய்தார்.

நிறைய மாடலிங் வாய்ப்புகள் அவரை தேடி வரத் தொடங்கியது. ஒரு பிரபலமான செருப்பு நிறுவனம் தயாரித்த வீடியோ விளம்பரம் தான் அஜித் முதன் முதலாக நடித்த டிவி விளம்பரம்.

அதே காலகட்டத்தில், சுரேஷ், நதியா நடித்த ‘என் வீடு, என் கணவர்’ என்ற படத்தில் பள்ளி மாணவனாக ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார் அஜித்.

இந்தப் படம் 1990-ல் வெளியானது. அஜித்தின் 20-வது வயதில் அவருக்கு முதல் சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

ஆனால் அது ஒரு பெரும் சோகத்தில் முடியும் என்பதை அந்த நேரத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.

(இன்னும் தெறிக்கும்…)

-அருண் சுவாமிநாதன்

25.12.2021  12 : 30 P.M

You might also like