இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency – NADA) சோதனை நடத்துகிறது.
இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் (என்.டி.டி.எல்.,) சோதிக்கப்படும். இதன் முடிவின் அடிப்படையில் வீரர், வீராங்கனைகள் மாதிரி ‘பாசிட்டிவ்’, ‘நெகட்டிவ்’ என தெரியவரும்.
இதற்கிடையே என்.டி.டி.எல்., மையத்தில் சர்வதேச தரத்திலான சோதனை முறை இல்லை என தெரிவித்த உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் (‘வாடா’), கடந்த 2019ல் ‘சஸ்பெண்ட்’ செய்தது. தவிர உலகளவில் ஊக்கமருந்து விதிகளை மீறுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதனால் ‘வாடா’ அங்கீகரித்த வெளிநாட்டு பரிசோதனை மையமான கத்தாரில், இந்திய நட்சத்திரங்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இதற்கான செலவு அதிகரித்தன. தற்போது என்.டி.டி.எல்., மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ”என்.டி.டி.எல்., அமைப்பு ‘வாடா’ வின் அனுமதியைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சியால் இது நடந்தது.
விளையாட்டில் உலகளவில் சிறந்த தரத்தை அடைய போராடும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த அனுமதி உற்சாகம் தந்துள்ளது” என்றார்.