டிசம்பர் 24 – தேசிய நுகர்வோர் உரிமை தினம்
எந்தவொரு பொருளை வாங்கினாலும், எந்தவொரு சேவையைப் பெற்றாலும், அவர் இவ்வுலகில் நுகர்வோர் தான். சம்பந்தப்பட்ட வணிகச் செயல்பாட்டுக்கும் சேவைக்கும் ஆதாரமாக விளங்கும் உரிமையாளர்கள் ஒரு சிலரே.
ஆனால், அவர்களே கூட தங்கள் வாழ்க்கைக்கான அத்தியாவசியங்களைப் பெற நுகர்வோர் எனும் வட்டத்திற்குள் வந்துதான் ஆக வேண்டும். அதனால், நுகர்வோருக்கான உரிமைகளைப் பேசுவதென்பது இவ்வுலக மக்களுக்காகப் பேசுவதற்கு ஒப்பானது.
நுகர்வென்பது இயல்பு!
ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளை வாங்கத் தொடங்கிய ‘பண்டமாற்று’ காலத்திலேயே நுகர்வோர் எனும் பதம் புழக்கத்திற்கு வந்துவிட்டது. தோல், செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம் என்று பலவாறாக இருந்து காகித வடிவில் நாணயப் பயன்பாட்டுக்கு மாறியபிறகு அதன் வலு கூடியுள்ளது.
ஒருவர் ஒன்றைப் பணம் கொடுத்து பெறுகிறார் எனும்போது, அதற்கான சான்றைப் பெறுவதென்பது அடிப்படை. அந்த ரசீதுதான் நுகர்வோர் உரிமைக்கான துருப்புச்சீட்டு.
அது கையில் இருந்தால் போதும்; நுகர்வில் இருக்கும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
அதிக விலை, சேவையில் பாதிப்பு, ஒப்பந்த வரையறையில் ஏமாற்றுத்தனம் என்று எத்தகைய பிரச்சனைகளுக்கும் நுகர்வோர் உரிமையின் கீழ் தீர்வைத் தேட முடியும். உரிய நிவாரணத்தையோ அல்லது நஷ்ட ஈட்டையோ பெற முடியும்.
அனைத்துவித தீங்கான பொருட்களில் இருந்து பாதுகாக்கும் உரிமை, பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, திறன் மற்றும் தரம் குறித்த தகவல் அறியும் உரிமை,
வாடிக்கையாளர் விருப்பங்கள் தொடர்பான முடிவெடுக்கும் முறைகளைக் கேட்பதற்கான உரிமை,
நுகர்வோர் உரிமைகள் மீறப்படும்போது நிவாரணம் பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் விழிப்புணர்வை முழுமையாக்குவதற்கான உரிமை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது நுகர்வோர் உரிமைச் சட்டம்.
மீறப்படும் நுகர்வோர் உரிமைகள்!
மளிகைப் பொருட்கள், மருந்துகள், காய்கறிகள், வீட்டுச்சாமான்கள், கட்டுமானப் பொருட்கள் தொடங்கி தொலைத்தொடர்பு, பயணம் என்று பல்வேறுபட்ட பிரிவுகளில் நுகர்வோர் பயன்பாடு இருந்து வருகிறது.
அதிக விலை, சேவை குறைபாடு, தரக் குறைவு முதல் காலாவதியான பொருட்களின் பயன்பாடு, தயாரிப்பு குறைபாடு என்று பல பிரச்சனைகளை நுகர்வோர்கள் எதிர்கொள்கின்றனர்.
அவற்றைத் தீர்க்க நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும் நாடுகின்றனர். காரணம், நுகர்வோரே எஜமானர்கள் எனும் அடிப்படை விதியை அலட்சியப்படுத்தியதுதான்.
’அதிகபட்ச சில்லறை விலை’ எனும் எம்.ஆர்.பி.க்கு நேரே ஒரு விலையை இட்டுவிட்டு, அதைவிட மிகக்குறைந்த விலையில் வணிகர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்யும் நடைமுறை வெகுகாலமாக இருந்து வருகிறது.
இதனால், நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைவாக ஒரு பொருள் விற்பனை செய்யப்பட்டு ‘வரி ஏய்ப்பு’ நிகழ்த்தப்படுகிறது.
இப்போதெல்லாம் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தியேட்டர்கள் என்று உள்ளே நுழைந்தபிறகு எளிதில் வெளியே செல்லமுடியாத இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிகமாக வசூலிப்பது நிகழ்கிறது.
இதனால், அரசுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்த விஷயம். அதேபோல, அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாமல் பின்பற்றப்படும் வழக்கங்களால் நுகர்வோர் பாதிப்புறுவதும் தொடர்கிறது.
பணத்தையும் கொடுத்துவிட்டு மனக்கஷ்டத்தையும் பெறும் நிலையை அடையும்போது, கட்டாயம் அதற்குத் தீர்வு காணும் வழிகளில் இறங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. 20 லட்சம் ரூபாய்க்கு குறைவாக நிவாரணம் கோரினால், இம்மன்றங்களில் வழக்கு தொடர முடியும்.
ரூ.1 கோடி வரை நிவாரணம் கோரினால் சென்னை அல்லது மதுரைக் கிளையில் இயங்கும் மாநில நுகர்வோர் ஆணையம் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும்.
நிவாரணத் தொகையைப் பொறுத்து கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த கட்டணம் பெற்றோ இவ்வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
வழக்கறிஞர் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நுகர்வோரே நேரடியாக வாதாடவும் முடியும்.
நுகர்வோர் உரிமையைக் காப்போம்!
உலக நுகர்வோர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று நம் நாட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. அதனைக் குறிக்கும் வகையில், இந்தியாவில் ‘தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதும், சந்தையின் அத்துமீறல்களுக்கு நுகர்வோர் ஆளாகிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதிலேயே நிறைய பிரச்சனைகள் இருந்துவந்த நிலையில், தற்போது டிஜிட்டல் வழி பயன்பாடு பெருகியுள்ளது.
இந்தச் சூழலில், வாடிக்கையாளர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டியது அவசியம்.
நேரடியாகவோ அல்லது மெய்நிகர் முறையிலோ, எந்த வழியில் பணம் செலுத்தினாலும் நுகர்வோரின் அடிப்படை உரிமைகளில் எந்த மாறுபாடும் கிடையாது.
அதேபோல, ஒரு பொருளைப் பெறும்போது தரப்படும் தகவல்களையும், ஒப்பந்தங்களையும் கூட சரிபார்க்க வேண்டியது அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்லைன் வழி சேவை வழங்கும் ஒரு இணையதளத்தில் காலணிகள் வாங்க விண்ணப்பித்தேன். டெலிவரி செய்பவர் பொருளைத் தந்தபிறகுதான் பணம் செலுத்தினேன்.
அதன்பின், மிகதாமதமாக அவ்விரண்டுமே வலது காலுக்கானவை என்பதை அறிந்தேன். கண்டிப்பாக, அது வீணான பொருள்தான். ஆனால், அதனைத் திருப்பியனுப்ப நான்கு நாட்கள் வரை எடுத்துக்கொண்டேன்.
அப்போதுதான், இரண்டு நாட்களில் திருப்பியனுப்பினால் மட்டுமே பணம் திருப்பித்தரப்படும் எனும் விதியைச் சுட்டியது இணையதளத்தில் இருந்து வந்த மின்னஞ்சல். அதற்கும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மாறி மாறி மின்னஞ்சல் செய்து பதிலைப் பெற வேண்டியிருந்தது.
இதுபோல ஆன்லைன் வர்த்தகத்தில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மொபைலுக்கு பதிலாக செங்கலை அனுப்பியது குறித்து கூட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆதலால், இப்போது நுகர்வோர் உரிமைகளைக் காக்க வேண்டிய கட்டாயம் அதிகமாகியுள்ளது.
நுகர்வோர் இல்லாவிட்டால், அப்பொருளை விற்பனை செய்பவர் பாடு திண்டாட்டம்தான். அதனால்தான், மக்கள் அடர்த்தி குறைந்த நாடுகளில் நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் குறைவு.
அதற்காக, இந்தியாவில் நுகர்வோருக்குப் பாதிப்புகள் ஏற்படுவதை சகஜம் என்று விட்டுவிட முடியாது. ஏனென்றால், அதிக நுகர்வோர்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்றுதிரண்டால் அதன் வீர்யம் மிக அதிகமாக இருக்கும்.
அதிக லாபம் எனும் ஒன்றை நோக்கிச் செல்லும்போதுதான், நம்பிக்கை சிதைக்கப்பட்டு ஏமாற்றுதல் நிகழ்த்தப்படுகிறது.
நுகர்வோரின் நலன் பாதிக்கப்படுவது தொடர்கதையானால், அது சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தையோ, தொழிலையோ, ஏன் சில நேரங்களில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையோ கூட பாதிக்கலாம்.
அதனை இவ்வுலகம் மறக்காமல் இருக்கவாவது நுகர்வோர் உரிமைகளைக் காத்திட வேண்டும்!
– பா.உதய்