டிசம்பர் – 22 : தேசிய கணித தினம்
கணக்கு என்றால் எனக்கு கசக்கும் என்பவர்களே அதிகம். வகுப்பானாலும், புத்தகமானாலும், பரீட்சை என்றாலும், அதோடு கணக்கு சேர்ந்தாலே பலருக்கு அலர்ஜிதான்.
காரணம், மற்ற மொழிப்பாடங்கள் போன்றோ, அறிவியல் அல்லது சமூக அறிவியல் போன்றோ அதனை மனப்பாடம் செய்ய முடியாது. இதனாலேயே, கணக்கு பாடத்தைப் படிக்கச் சிரமம் என்பது போல ஒரு பிம்பம் ஏற்பட்டுவிட்டது.
கணிதம், கணிதவியல், கணக்கு என்று பல்வேறு பெயர்களில் அழைத்தாலும், அவற்றின் அடிப்படை அம்சம் ஒன்றுதான். அது, கணக்கு என்றாலே கண்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடுவதுதான்.
ஒரு வார்த்தை பல அர்த்தம்!
கணக்கு நம் தினசரி வாழ்வோடு தொடர்போடு நெருங்கிய தொடர்புடையது. நாம் செய்யும் செலவுகள் முதல் நமக்கான வரவு வரை அனைத்தையும் நாம் கணக்கு வைத்தாக வேண்டும். அதில் தவறினால், ‘கணக்கு வழக்கில்லாம செலவழிக்கிறியே’ என்ற வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.
திட்டமிடாமல் எதுவும் ஒழுங்காக நிகழாது. ஆனால், வாழ்க்கையின் எந்தவொரு கணத்தையும் திட்டமிடாமல் வாழ்வோரும் இவ்வுலகில் உண்டு.
அப்படியிருப்பவர்களை ‘எதிலும் ஒரு கணக்கு இருக்க வேண்டாமா’ என்று அறிவுறுத்துவோர் அதிகம்.
பருவ காலத்தில் ‘என்ன கணக்கு பண்றியா’ என்ற வார்த்தைகள் அறிமுகமாகும்.
வங்கிக் கணக்கு என்பது வாழ்க்கையின் அத்தியாவசியம் என்றானபிறகு, கணக்கு என்பது வெறுமனே பணம் சம்பந்தப்பட்டதாகிவிட்டது.
கணக்கு என்ற ஒன்று நமக்கு அறிமுகமான கணம் பொழுதிலிருந்து இன்றுவரை, அந்த வார்த்தைக்கான அர்த்தம் பலவாறாக மாறியிருப்பதை நினைத்தால் ஆச்சர்யமே மேலோங்கும்.
ஆனால், எல்லாவற்றிலும் முழுமையான தீர்வு மட்டுமே இறுதியானதாக இருப்பதைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் உணர முடியும். கணக்கின் மகத்துவமும் கூட அதுவே.
பால பருவத்தில் கணக்கு!
சிலேட்டில் எழுதத் தொடங்கிய நாளில் 1, 2, 3 என்ற எண்கள் மட்டுமே கணக்கின் தொடக்கப் புள்ளிகள். மெல்ல கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்றவற்றைத் தாண்டி வகுத்தல் எனும் நிலையை அடையும்போது, பலருக்கு கணக்கு என்பது ஒவ்வாததாக மாறியிருக்கும்.
ஒவ்வொரு வகுப்பாகத் தாண்ட தாண்ட, அல்ஜீப்ரா தொடங்கிப் பல்வேறு பிரிவுகள் கணக்குப் பாடத்தில் பயத்தை வரவழைக்கும்.
இதனாலேயே பத்தாம் வகுப்பு தாண்டியவுடன், அடித்துப் பிடித்து கணக்கு இல்லாத பிரிவுகளைத் தேடுவோர் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
கணக்கு பாடத்தின் அடிப்படையைச் சரிவரக் கற்காவிட்டால், இப்படியொரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், இப்படியொரு நிலை வர சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு ஆசிரியர்களைக் கண்டால் மட்டுமே பயம் அதிகமிருக்கும்.
இரண்டு பாடங்களும் புரியாது என்ற எண்ணம் தொடக்கத்திலேயே விதைக்கப்படுவதற்கேற்ப, அந்த ஆசிரியர்களும் பெரும்பாலும் கையில் பிரம்புடன் பள்ளியை வலம் வருவார்கள்.
கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவனாக இருந்தபோதும், பள்ளி நாட்களில் ஆசிரியரிடம் நான் அடி வாங்கிய பொழுதுகள் நிறைய. ஆனாலும், கணக்கு எனக்கு ஒருபோதும் பயம் தந்ததில்லை. காரணம், கணக்கு என்பது எனக்கு ஒரு விளையாட்டு!
யோசனையில் கூர்மை!
மற்ற பாடங்களை மனப்பாடம் செய்தால் போதும் என்றால், கணக்கு பாடத்தை முறையாகக் கற்க யோசிக்கும் திறன் இருப்பது அவசியம். அது கூர்மையை நோக்கிச் செல்வதாக இருந்தால், இன்னும் நன்று. ஒவ்வொரு படிகளாக ஏறி மலை உச்சிக்குச் செல்வது போன்று கணக்கு பாடத்தைக் கற்பிப்பது இதற்கான அடிப்படை.
கணக்கு பாடத்தை வகுப்பறையில் கேட்கும்போதும், வீட்டில் படிக்கும்போதும் இல்லாத ஆர்வம், பரீட்சை எழுதும் நேரத்தில் அதீதமாக இருக்கும். கணக்கு பரீட்சை எழுதுவதென்பது எப்போதும் எனக்கு ஒரு விளையாட்டை தீரத்துடன் ஆடுவது போன்றிருக்கும்.
வாழ்க்கையின் அதி அற்புதமான கணங்கள் என்று பட்டியலிட்டால், அதிலொன்றாக கணக்குப் பரீட்சை எழுதிய பொழுதுகளும் இடம்பெறும். கிட்டத்தட்ட எதிர்பால் ஈர்ப்புக்கு ஒப்பானது அவை.
மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கடந்து வந்ததால் மட்டுமே இது சாத்தியமானது என்பது பின்னாட்களில் புரிந்தது. இன்று, எந்த மாணவராவது கணக்கு பாடம் பற்றி புலம்புவதைக் கண்டால் அவரது ஆசிரியரைச் சந்திக்கத்தான் மனம் ஆசைப்படும்.
கணக்கில் வெற்றி!
கணக்கு பாடத்தை மீண்டும் மீண்டும் படிப்பதைவிட, ஒருமுறை எழுதிப் பார்ப்பது மிகச்சிறப்பான வழி. வீட்டிலிருந்த சிமெண்ட் தரையில் கணக்கை எழுதி எழுதி, அந்த அறை முழுவதும் சாக்பீஸ் கிறுக்கல்களாகக் காண்பது ஒருவித சுகானுபவம்.
சுருக்கமாகச் சொன்னால், படிப்பதைவிட பயிற்சி செய்வது மட்டுமே கணக்கில் அதிக மதிப்பெண் வாங்க வழி செய்யும். அதேநேரத்தில், மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொண்டு முக்கியமான பாடங்களை மனப்பாடம் செய்வது தவறான செயல். மேற்படிப்புகளில் சேரும்போது, அவ்வழக்கம் கை கொடுக்காது.
கணக்குகளைக் கற்கும்போதும், பயிற்சி செய்து பார்க்கும்போதும் பயத்தை அறவே கைவிட்டு விட வேண்டும்.
குறிப்பாக, பரீட்சைக்குப் பிறகான பலன்கள் பற்றி அலட்டிக்கொள்ளவே கூடாது.
ஒளித்துவைக்கப்பட்ட புதிர்களைத் தேடி பெருங்காட்டினுள் அலைவது போல, கணக்கு பாடத்தை அங்குலம் அங்குலமாக கற்கும் விருப்பம் வேண்டும். அதற்காக, குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிப்பது அவசியம்.
மிக முக்கியமாக, பார்முலாக்கள் தவிர்த்து ’குறுக்கு வழி’ என்று எதையும் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் பரிந்துரைத்தால் கூட அதனைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், நிச்சயமாக, அந்த வழக்கம் நமக்கு ஒருநாள் எதிர்விளைவுகளையே பரிசளிக்கும்.
ராமானுஜத்துக்கு மரியாதை!
கணக்கில் அதிக மதிப்பெண் வாங்குபவர்களை ‘கணக்கில் புலி’ என்று பாராட்டுவதை விட, ‘அடுத்த ராமானுஜமா நீ’ என்று கேட்பது அதிக குளிர்ச்சியைத் தரும். காரணம், முடிவிலியைக் கண்டுபிடித்ததோடு பல புதிர்களுக்கு தனது பார்முலாக்களால் எளிய தீர்வுகளை வழங்கியவர் ஸ்ரீனிவாச ராமானுஜம்.
இன்று, அவர் கண்ட தீர்வுகள்தான் மின்னனுவியல் வரை பல துறைகளில் எளிதாகப் பலவற்றைக் கணக்கிட உதவுகிறது.
கணக்கியலில் அவர் ஆற்றிய சாதனைகளைக் கணக்கில் கொண்டு, 2012-ம் ஆண்டு அவரது 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ‘தேசிய கணித தினம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்.
கணக்கு பாடத்தின் மீது இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை அதிகரிப்பதும், இத்துறையில் ஆர்வமுள்ளவோரை வளர்த்தெடுப்பதுமே இத்தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம்.
ஒவ்வொருவருக்கும் கணக்கு பாடம் என்பது ஒவ்வொரு அனுபவத்தைத் தந்திருக்கும். வாழ்க்கை கணக்குக்கும் நாம் கற்ற பாடத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லாமல் இருப்பதும் அவற்றுள் ஒன்று.
ஆனாலும் ஒரு மனிதன் சைக்கிள் ஓட்டவும் நீச்சலடிக்கவும் கற்றுக்கொள்வதைப்போல, கணக்கு பாடத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்க முற்படுவதும் அவசியமான ஒன்று.
இன்றைய குழந்தைகளிடம் இதனைப் பதியவைத்தால், நாளை அவர்கள் கணிதப்புலிகளாக மட்டுமல்ல, ராமானுஜன்களாகவும் மிளிர்வார்கள்!
- பா.உதய்
- 22.12.2021 12 : 30 P.M