– டாக்டர்.எஸ்.தணிகாசலம்
இதய அறுவை சிகிச்சை என்றதும் – பலர் கேட்கிற முதல் வார்த்தை
“இது தேவைதானா?”
இதயத்தில் ஆபரேஷன் என்றதுமே என்னவோ, ஏதோ என்று பயப்படுகிறவர்கள்தான் அதிகம். வேறு வழியே இல்லை என்கிற நிலையிலேயே ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால் இதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து நிறைய நவீன சாதனங்கள் வந்துவிட்ட நிலையில், இதய அறுவை சிகிச்சை இப்போது பரவலாக நடக்கிறது. அதனால், “எங்க தாத்தா காலத்திலெல்லாம் இப்படிப்பட்ட பாதிப்புகளும்… ஆபரேசன்களும் இல்லையே…” என்று இப்போது கேள்வி கேட்க முடியாது.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு வந்த பாதிப்பு, அவருக்கு எந்த மாதிரி சிகிச்சையளிக்கப்பட்டது என்பதை வைத்துப் பொதுமைப்படுத்தி இதய சிகிச்சையைப் பார்க்க முடியாது.
எத்தனை பேர்களுக்கு எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டுதான் அதைப் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியும்.
இதயத்தில் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை முன்பெல்லாம் துல்லியமாக உணர முடியாத நிலை இருந்தது.
இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துப்போகிற இரண்டு ரத்த நாளங்களை எப்படி ஆய்வு செய்வது என்பது தெரியாமலிருந்தது. அதற்குள் அடைப்பு இருக்கிறதா என்பதையும் கண்டு உணர முடியாத நிலை இருந்தது.
அப்போதுதான் அமெரிக்காவில் ‘கிளிவ் லெண்ட்’ மருத்துவமனையில் மெஸன்ஸ்ஸோன் என்பவர் பிளாஸ்டிக் குழாய் போன்ற நுண்ணிய குழாயை கையிலிருக்கிற ரத்த நாளத்தில் நுழைத்து தமனியைச் சென்றடைந்து – அதில் அயோடின் கலந்த ‘டை’யை ஊசி மூலம் செலுத்தி ‘எக்ஸ்-ரே’ மூலம் பார்த்தபோது, அதிசயத்தில் ஆழ்ந்தது உலகம்.
அதுதான் ‘கோரனரி ஆஞ்சியோகிராம்’.
1950-களில் நடந்த இந்தச் சாதனை மருத்துவ உலகில் அதிலும், இதய சிகிச்சையில் ஒருவிதப் புரட்சியையே ஏற்படுத்தியது.
இதன் மூலம் பார்த்தால், எக்ஸ்ரே கதிர்களுக்கு அந்த அயோடின் கலந்த திரவம் தெரியாது. இதயம் லேசான கருமை நிறத்தில் தெரிய, பாதிப்பான பாகம் வெண்மையாகத் தெரியும்.
அதன்மூலம் எங்கு, எத்தனை அடைப்புகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாக உணர முடிந்தது.
‘பெவல்ரோ’ என்கிற டாக்டர் இதயத்திலுள்ள இந்த அடைப்புகளை உணர்ந்ததும் இதை எப்படிச் சரி பண்ண முடியும் என்று யோசித்தார்.
“தமனியில் அடைப்பு இல்லை, தமனியிலிருந்து ரத்தக்குழாய் கிளம்பி கிளைகளாகப் பிரிகிற இடத்தில் அடைப்பிருக்கிறது. அதனால் தமனியில் ஒரு குழாயை இணைத்து – அடைப்பு இருக்கிற இடத்திற்கு அப்பால் அதே குழாயை இணைத்துவிட்டால் ரத்த ஓட்டம் எந்த அடைப்பினாலும் பாதிக்கப்படாமல் செல்லுமே” என்று யோசித்தார்.
அதை எப்படிச் செயல்படுத்துவது?
தமனியிலிருந்து எந்த நுண்ணிய குழாய் மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்ல முடியும்?
வெளியிலிருந்து என்னதான் நுட்பமான, செயற்கையான குழாயை இணைத்தாலும், அதனால் ‘அலர்ஜி’ உருவாகலாம். உடலே அதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கலாம்.
எனவே, காலில் எத்தனையோ ரத்தநாளங்கள் இருக்கிறதே… 3 அங்குலம் அளவுக்கு அதை எடுத்தால் என்ன? அதனால் மனித உடலுக்கும் எந்தப் பிரச்சினையும் வராது… கால் நரம்பும் தானாகவே சரியாகிவிடும்.
அந்த நரம்பை எடுத்து இதயத்தைத் திறந்து தமனியில் அதை இணைத்துப் பார்த்தால் என்ன?
டிராபிஃக் நெரிசலான நிலையில், மாற்று வழியாக’ பைபாஸ் ரோடு’ இருக்குமே, அதே மாதிரி இதயத்திற்குள் பைபாஸ் செய்து பார்த்தார்.
ஆபரேஷன் பண்ணும்போது மட்டும் இதயம் செய்யும் வேலையை ஹார்ட்-லங் மிஷின் செய்யும். அந்த நேரத்தில் இதயத்திற்குத் துடிப்பு இருக்காது.
முயற்சித்துப் பார்த்தார். ‘பைபாஸ் சர்ஜரி’ வெற்றி.
நடக்கவே சிரமப்பட்டவர்கள் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தெம்பு கூடி ஓடவே முடிந்தது.
இது நடந்தது 1960-ஐ ஒட்டி. அதற்குப் பிறகு உலகம் முழுக்கப் பரவலாக ‘பைபாஸ் சர்ஜரி’கள் வெற்றிகரமாக நடந்தன.
இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துக்கொண்டு போகிற ரத்த நாளத்தின் அளவே 1.5 மில்லிமீட்டர்தான் இருக்கும். இவ்வளவு நுட்பமான ரத்த நாளத்தைத் தைக்க வேண்டுமானால், கண்ணில் ‘லென்சு’ வைத்துத்தான் தைக்க வேண்டும்.
அந்த அளவுக்கு மிகச் சின்னதாக இருக்கும் நாளம். இதெல்லாம் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சர்ஜரிகள் வெற்றிகரமாக நடந்தன.
இருந்தும் பலர் இதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியான பிறகும், சர்ஜரி செய்து கொள்ளப் பயந்தார்கள். உடனே அதை ஒரு ஆய்வு செய்தார்கள். சர்ஜரி பண்ணியவர்களையும், பண்ணாதவர்களையும் சோதித்தார்கள்.
அதன்படி பார்த்தபோது சர்ஜரி பண்ணிக்கொள்ளாதவர்கள் பலர் சீக்கிரமே இறந்துவிட்டார்கள். சர்ஜரி பண்ணியவர்களில் இறந்தது 2 சதவிகிதம்.
அமெரிக்காவில் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் சேர்ந்து இந்தச் சோதனையை நிகழ்த்தின.
இதன் மூலம் சர்ஜரியின் மகத்துவம் வெளியுலகிற்குத் தெரியவந்தது.
இந்தியாவில் 70-களில் ‘பைபாஸ் சர்ஜரி’ அறிமுகமானது. எண்பதுகளுக்குப் பிறகே அது பரவலானது. முதலில் இதயத்தில் ஒரு நாளத்தில் அடைப்பு இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டிருந்தார்கள். 2 அல்லது 3 நாளங்களில் அடைப்பு இருந்தால் அறுவைசிகிச்சை பண்ணத் தயங்கினார்கள்.
சிலருக்கு இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களிலும் பத்து இடங்களில் அடைப்பிருக்கும். அதை எல்லாம் பார்க்கும்போது – இவ்வளவு அடைப்புகளுடன் இதுவரை எப்படி உயிர் வாழ்ந்தார்கள் என்று தோன்றும்.
இப்படிப்பட்டவர்கள் மாரடைப்பு வருவதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது.
மாரடைப்பு வந்துவிட்டால், இதய தசையின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டு விடுகிறது. பைபாஸ் சர்ஜரியின் விளைவுகளை நல்லமுறையில் ஒருவர் அனுபவிக்க வேண்டுமென்றால், மாரடைப்பு வருவதற்கு முன்பே தனக்கு அடைப்பு இருக்கிறதா என்று தன்னைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான விஷயம்-75 சதவிகித இதய நாள அடைப்பு இருப்பவர்களுக்குக் கூட வலியிருக்காது. அதனால் அடைப்பின் தீவிரத்தை அவர்களால் உணர முடியாது.
அதன் இயல்பு அப்படி.
அடைப்பு இருக்கிற ஒருவர், சாதாரணமாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்கிறவராக இருந்து, அவரால் இரண்டு பர்லாங் தூரம் கூட நடக்க முடியாத நிலை வந்தால், அறுவை சிகிச்சைக்குத் தயாராகி விடுவது நல்லது.
மாரடைப்பு வந்தபிறகு இதயத்தின் தசை இடதுபக்க தசை 0.8 மில்லி மீட்டரிலிருந்து 1.1 சென்டிமீட்டர் வரை இருக்கலாம்.
மாரடைப்பு இதயத்திலுள்ள எந்த ரத்தக் குழாயைத் தாக்கியிருக்கிறது? எந்தெந்தக் கிளைகள் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன? என்பதையெல்லாம் பார்ப்போம். எந்த இடத்திற்கு ரத்தம் செல்லவில்லையோ அந்த இடத்திலிருக்கிற தசைகள் பாழாகிவிடும்.
மாரடைப்பு வந்தவர்களை மூன்று வாரங்கள் கழித்து ‘டிரெட்மில்’ சோதனைக்குட்படுத்துகிறோம். அதைப் பூரணமாகப் பண்ண முடிந்தால் அவர்களுக்கு ‘பைபாஸ்’ தேவையில்லை.
‘டிரெட்மில்’ சோதனையைச் சரியாகப் பண்ண முடியவில்லை என்றால், அடைப்பு இருக்கலாம் என்பதை யூகித்து ‘ஆஞ்சியோகிராம்’ பண்ணச் சொல்கிறோம். மற்ற எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால், மறுபடியும் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.
பொதுவாக இதயத்தின் இயக்க அளவு 75 சதவிகித அளவில் இருக்கலாம். மாரடைப்புக்குப் பிறகு இதயத்தின் இயங்கும் தன்மை 30 சதவீதத்திற்கும் கீழிருந்தால், அவர்களுக்கு ‘பைபாஸ் சர்ஜரி’ பண்ணி ஏதாவது பலன் உண்டா என்பதை நாங்கள் யோசிப்போம். சர்ஜரிக்குப்பிறகு தசைகள் வலுவிழந்த இதயம் பழைய நிலையில், சுருங்கி விரியுமா என்பதை முக்கியமாகக் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

சிலரின் இதயத்தின் இயங்கும் தன்மை 16,10 சதவிகித அளவில் கூட இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது – சர்ஜரி பண்ணுவதில் உள்ள ‘ரிஸ்க்கை’ அவர்களுடைய உறவினர்களிடம் மென்மையாகச் சொல்லிவிடுவோம்.
அந்த விஷயத்தில் மருத்துவர்களாகிய நாங்கள் வெளிப்படையான தன்மையுடன் இருக்க வேண்டும்.
அந்த மாதிரியான சிக்கலான நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி.
பைபாஸ் சர்ஜரிக்கு காலிலிருந்து நரம்பை எடுத்து சர்ஜரி செய்வதில் சில சிக்கல்கள் உருவாகின.
அதனால் மார்புக் கூட்டிற்குப் பின்னால் ஒரு ரத்தக்குழாய் போகிறது அதை மார்புப் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து இதயத்தில் பைபாஸ் சர்ஜரிக்கு இப்போது பயன்படுத்துகிறோம்.
இது பல விதங்களில் பாதுகாப்பாக இருக்கிறது. பரவலாகவும் இருக்கிறது.
– (தொடரும்…)
மணா தொகுத்து எழுதிய டாக்டர் எஸ்.தணிகாசலத்தின் ‘இதயமே… இதயமே’ நூலிலிருந்து..