– விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, “விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம்” எனக் கூறினார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள விராட் கோலி, “பிசிசிஐ-ல் இருந்து யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவே இல்லை” என பதிலளித்திருந்தார்.
இதையடுத்து விராட் கோலி – கங்குலிக்கு இடையே மோதல் நிலவுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், “கங்குலி – கோலி இருவரும் பெரிய பதவியில் இருப்பவர்கள். அவர்கள் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொள்ளவது சரியல்ல.
இந்தப் பிரச்சனையை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது சர்ச்சையைக் கிளப்பாமல் வர இருக்கும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்துங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.