ஆளில்லா ரயில்கேட்டை
அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
மூடுபனி திரைகள் விலக்கி
மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில்
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி
விடலிப் பனை பார்த்து
“ஆ…! நுங்குச் செடி” என்கிறாள்.
சிறுமி சொன்ன நகைச்சுவை கேட்டு
வயிறு குலுங்கச் சிரித்து
மெதுவாக நகர்கிறது ரயில்
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
தேக்கு மரக்கிளைகள் உதிர்க்கும்
தங்கத் தட்டுகள்
காற்றின் கைகள் கோர்த்து நடனமாடி
தரை இறங்குவதன் அழகில்
சொக்கிய ரயில்
மேலும் மெதுவாக நகர்கிறது
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
குளித்த ஈரம் உலர்த்தும்
மருத நிலத்துப் பெண்
சேலை முனையை
வான் நோக்கிய படிக்கட்டுகளாக
காற்றில் படரவிட்டு
அசைந்து நடக்கிறாள்
இறுகப் படிந்த ஈரச்சேலை
அவள் உடல் வனப்பை
கண்ணாடியாகத் திறந்துகாட்ட
எஞ்சின் ஓட்டுனர்
ரயில் வேகத்தை மெதுவாக்குகிறான்
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து விட்டது
அந்த அட்டைப் பூச்சி
தன் முதுகுக்குப் பின்னால்
தடதடத்து விரைந்து போகும் நீள ரயிலை
தலை தூக்கிப் பார்த்த அட்டைப் பூச்சி
“இந்த மலை அட்டைப் பூச்சிக்கு
ஏனிந்த அவசரம்” என நினைத்தபடி
அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது அது.
- ப. கூத்தலிங்கம்