திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்!

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள்.

அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது.

இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது.

தமது பன்னிரெண்டு வயதில் வள்ளுவருக்கு உருவம் கொடுக்கத் தொடங்கிய சர்மாவால், 58 வயதில்தான் திருப்தியான வடிவத்தை வழங்க முடிந்தது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்து பார்த்து நிறைவே அடையாமல் தவித்தவர் அவர். அப்படம் உருப்பெற்றதற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார்.

சென்னைப் பல்கலைகழகம், அதை 2012-ம் ஆண்டு நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது.

திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காமாட்சிப்பட்டி எனும் கிராமத்தில், 1908 டிசம்பர் 17ல் பிறந்தவர் கே.ஆர்.வேணுகோபால். மைசூரு சமஸ்தானத்தில், மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் சபையில் ஆஸ்தான விகடகவியாக இருந்தார்.

காந்திய வழியில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘வேணுகோபால் கிரீன் பிக்சர்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார்.

சென்னையில் ‘பொன்னி ஆர்ட்ஸ்’ என்ற ஓவியக் கலைக்கூடத்தை அமைத்தவர். 30 ஆண்டுகளுக்கும்  மேலாக, திருக்குறளை ஆராய்ச்சி செய்து, திருவள்ளுவரின் உருவத்தை வரைந்தார். அப்படி திருவள்ளுவருக்கு அதிகாரபூர்வமான உருவம் அளித்த, ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவின் பிறந்த நாள் இன்று!

17.12.2021    2 : 30 P.M

You might also like