– மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி பரிந்துரை தாக்கல் செய்ய, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு தரப்பிலும் ஆய்வு செய்த இந்தக் குழுவினர், தங்கள் தரப்பு பரிந்துரையை பிரதமர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு சமர்ப்பித்தனர்.
இது குறித்து விளக்கமளித்த ஜெயா ஜெட்லி, “பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் படிக்கும் இளம் பெண்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வயதில் உள்ள கிராமப்புற மாணவியர் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 22 அல்லது 23 ஆக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
மத பேதமின்றி அனைவரும் இந்தக் கருத்தையே தெரிவித்தனர். எனவே 18 வயதில் பள்ளிப் படிப்பை முடிக்கும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக தங்களைத் தயார் செய்துகொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும்.
உடனடியாக திருமணம் செய்து வைத்தால் சம வாய்ப்பு கிடைக்காது. அனைத்துத் துறைகளிலும் பாலின சமத்துவம் மற்றும் மேம்பாடு குறித்து பேசும் நாம், திருமண விவகாரத்தில் மட்டும் பெண்களை கண்டு கொள்வதில்லை.
இதனால் கல்லுாரிப் படிப்பை பெரும்பாலான பெண்கள் தவறவிடுகின்றனர். சுயமாக சம்பாதித்து வாழ்க்கையைத் தனியாக எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
இதன் காரணமாக பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை அளிக்கப்பட்டது” எனக் கூறினார்.
இந்தப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.